டி.கே. பகவதி - நான் சந்தித்த பிரபலங்கள் - 19

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு - அவ்வை சண்முகம் சாலை என்ற அடையாளமே சகோதரர்கள் டி.கே.சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி என நான்கு பேர்தான்.
டி.கே. பகவதி
டி.கே. பகவதி
Published on
Updated on
2 min read

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு - அவ்வை சண்முகம் சாலை என்ற அடையாளமே சகோதரர்கள் டி.கே.சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம், டி.கே. பகவதி என நான்கு பேர்தான். இந்த நான்கு பேரையும் ராமாயணச் சகோதரர்கள் என்று அழைக்கலாம். நான்கு வேதங்களாக, நான்கு திசைகளாக இருந்து நாடகத் துறையை வித்திட்டு வளர்த்தவர்கள் இவர்கள்.

மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளையையும், சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் வழிகாட்டிகளாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர்கள்.

இவர்கள் தந்தை கண்ணுசாமி பிள்ளையும் தாயும் நாடகக் கோயிலின் தீபங்களாக இருந்தவர்கள். ஏழு வயதில் நாரதராக நடிக்கத் தொடங்கிய அவ்வை டி.கே. சண்முகம் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர், தமிழக மேலவை உறுப்பினர்ஆகிய பதவிகளை வகித்தவர்.

பத்மஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 68 நாடகங்கள் எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள் நினைவாக அங்குள்ள அரங்கத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் கலை அரங்கம் என்று பெயர் சூட்டி சிறப்பித்தார் எம்.ஜி.ஆர். இதற்கு இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

இவர்கள் நாடகங்களாக நடித்தவை 'பில்ஹணன்', 'மனிதன்', 'மேனகா', 'ராஜராஜசோழன்' என்று திரைப்படங்களாகவும் வந்தது. வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய 'மேனகா' துப்பறியும் நாவலை நாடகமாக்கியதோடு முதன் முதலாகப் படமாக்கினார். இதில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், கே. ஆர். ராமசாமி ஆகியோர் அறிமுகமானார்கள்.

கேவலமான வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக வலிமை வாய்ந்த பொது ஜன அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மகாத்மா காந்தி அறைகூவல் விடுத்தபோது இவர்கள் நாடகமாக நடித்துத் திரைப்படமாக்கிய 'குமாஸ்தாவின் பெண்' 1937-இல் புரட்சியை ஏற்படுத்தி வரதட்சணைக் கொடுமையால் இரண்டு, மூன்று திருமணம் செய்தவர்கள் வீடுகளில் எல்லாம் இளைஞர்கள் கல்லெறியும் நிலையை உருவாக்கியது. திரைப்படங்கள் வெறும் பொழுது போக்கல்ல என்பதை எடுத்துக் காட்டினார்கள்.

அவர்களின் நாடகங்களை அண்ணாவும் கல்கியும் வானளாவாகப் பாராட்டினார்கள். 'ரத்த பாசம்' என்ற நாடகம் மூலம் புரட்சி இயக்குநர் ஸ்ரீதரை அடையாளம் காட்டினார்கள். டி.கே. சண்முகம் அவர்கள் எழுதிய 'எனது நாடக வாழ்க்கை' என்ற புத்தகத்திற்கு 'சிலம்புச் செல்வர்' மா.பொ.சி. அணிந்துரை கொடுத்து பாராட்டினார்.

இத்தனை புகழுக்கு உரியவர்களில் ஒரு சகோதரரான டி.கே. பகவதி 'சம்பூர்ண ராமாயண'த்தில் ராவணனாகவும், 'பணமா பாசமா', 'சபதம்' போன்ற வெற்றி பெற்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தவர்.

1971-இல் 'என் சொந்தம்' படத்தில் முத்துராமனின் அப்பாவாக நடித்தார். அப்போது என்னை அழைத்து 'தம்பி, நீங்கதான் காரைக்குடி நாராயணனா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'நான் டி.கே.பகவதி' என்று சிரித்துக் கொண்டே சொன்னவர், 'உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லத்தான் அழைத்தேன். எங்க சண்முகம் அண்ணாச்சி எழுதிய டைரியில் 'நான் ரசித்த ஏழு நாடகாசிரியர்கள்' என்பதில் உங்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்' என்றார்.

நான் அவரைக் கும்பிட்டு என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன். அடுத்து 'ராதா' படப்பிடிப்பில் மைசூர் தீர்த்தஹள்ளியில் இரவு என்னைக் கூப்பிட்டு 'எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?' என்று கேட்டார். 'உங்களுக்கா நானா?' என்று கேட்டேன். 'ஆமாம், எங்கள் ஊரைச் சேர்ந்த காஜாமொய்தீன் என்ற எம்.ஏ.காஜாவை எனக்காக உங்கள் உதவியாளராக வைத்துக் கொள்ளுங்கள். நான் கடிதம் கொடுத்து அனுப்புகிறேன்' என்றார். அவரை நான் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டேன். அவர்தான் விஜயகாந்துக்கு 'இனிக்கும் இளமை' படத்தைத் தந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு நான் ஸ்வாகத் நோட்டீஸ் எழுதிக் கொண்டிருந்த போது டி.கே. சண்முகம், டி.கே. பகவதி இருவரும் மா.பொ.சி.யிடம் என்னை, 'ராஜாஜியின் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்' என்று பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இவரின் பாராட்டும் உற்சாகப்படுத்திய பண்பும் இன்றும் என்னால் நாடகமோ, திரைப்படமோ எழுத முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை என் மனதில் தினமும் அரங்கேற்றம் செய்கிறது என்பது உண்மை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com