புள்ளிகள்

புதிய பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தனது சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார்.
எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்
Published on
Updated on
3 min read

நெதர்லாந்தின் பிரதமராகப் பதினான்கு ஆண்டுகள் பதவி வகித்த மார்க் ரூட்டே தனது பதவிக்காலம் நிறைவு அடைந்தவுடன், புதிய பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு தனது சைக்கிளில் வீட்டுக்குச் சென்றார். இது 2024 ஜூலை மாதத்தில் நிகழ்ந்தது என்றால் ஆச்சரியம்தானே!

-சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

1953-இல் வெளிவந்த 'ஒளவையார்' என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார் பாலாஜி. பிறகு முழு நேர நடிகரானார். தொடக்கத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். பின்னர், அவர் தனது மூத்த மகள் சுஜாதாவின் பெயரில் 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இதன் முதல் படம் 'அண்ணாவின் ஆசை' 1966-இல் வெளியானது. தனது மனைவி மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார் பாலாஜி. ஜனவரி 26-இல் பாலாஜிக்கு திருமண நாள். அதனால் தனது மனைவியைக் கரம் பிடித்த நாளில் தனது படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இயக்குநர் மகேந்திரனும், நடிகர் செந்தாமரையும் இளமைக்காலத்தில் நாடகம் நடிக்கும்போதே நண்பர்கள். 'தங்கப் பதக்கம்' கதை செந்தாமரைக்காக மகேந்திரன் எழுதியது. செந்தாமரையின் வீட்டுக்கு மகேந்திரன் தனது நண்பர்களை மதிய உணவுக்காக திடீரென்று அழைத்துச் செல்வார்.

இவர்களுக்கு உணவைப் பரிமாறிவிட்டு, பல நாள்கள் பட்டினியோடு இருந்திருக்கிறார் செந்தாமரையின் மனைவி லட்சுமி. இந்த விஷயம் பல ஆண்டுகளுக்குப் பின்னரே மகேந்திரனுக்கு தெரிந்தது. தன்னைப் பட்டினிப் போட்டு தங்களுக்கு உணவை அளித்த லட்சுமியின் தாயுள்ளத்தைப் பாராட்டியே, தங்கப் பதக்கத்தில் தாயாக நடிக்க கே.ஆர்.விஜயாவுக்கும், 'உதிரிப்பூக்கள்' படத்தில் அஸ்வினியின் கதாபாத்திரத்துக்கும் 'லட்சுமி' என்ற பெயரைச் சூட்டினார் இயக்குநர் மகேந்திரன்.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

சென்னையில் தனது இலக்கிய வாழ்க்கை குறித்து கு.அழகிரிசாமி எழுதியிருந்தது:

'சென்னைக்கு வந்தால் நான் இலக்கியத்தில் புதுத்திறமைகளைச் சம்பாதித்ததாகவோ, என்னிடம் பிரமாதமான அறிவுப்புரட்சி ஏற்பட்டதாகவோ சொல்வதற்கு இடமில்லை. இலக்கியத்தின் பலதுறைகளையும் பற்றிய அடிப்படையான கருத்துகளை என்னுடைய கிராமத்தில் இருக்கும்போதே நான் தேடிக் கொண்டுவிட்டேன்.

சென்னையில் சில நல்ல அம்சங்களையும் இங்கு சொல்ல வேண்டும். அருமையான இலக்கிய நண்பர்கள் சிலரும், மற்ற நண்பர்களும், உள்ளன்புடைய உபகாரிகளும் கிடைத்தனர். மேலும், நான் வழக்கமாக முடி வெட்டிக் கொள்ளும் சலூன்காரர் மாதம் ரெண்டு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு காலையில் காபி வாங்கித் தந்தார். இரண்டொரு

சில்லறைக் கடைக்காரர்களும் சில நல்ல ஆத்மாக்கள். இவர்கள் எனக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கே பெரிய உபகாரிகள். மலாயாவில் இருந்து திரும்பி வந்தவுடன் இவர்களையெல்லாம் போய்ப் பார்த்து நலம் விசாரித்து வந்தேன்' என்று கூறியிருந்தார்.

சென்னை பெரியார் திடல் என்று அழைக்கப்படும் இடம் பழைய வேப்பேரி 'டிராம் ஷெட்' ஆகும். இந்த இடத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு அப்போது வாங்கினர். இது 50 கிரவுண்ட் பரப்புடையது.

உலகப் புத்தகத் தினம் என்பது முதலில் ஸ்பெயினில் புகழ் பெற்ற எழுத்தாளர் மிகேல் டி.செர்வாண்டிஸ் நினைவாக, அவரது இறந்த நாளான ஏப்ரல் 23-இல் புத்தகங்களோடு வைத்து நினைவுகூர தொடங்கினர். இந்த நாளை 1995-இல் யுனெஸ்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. வில்லியம் ஷேக்ஸ்பியர், இங்கா கார்சிலோ ஆகியோர் மறைந்ததும் இதே நாளில்தான்.

குழந்தைகள் உலகப் புத்தகத் தினமும் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

திரைப்படங்களுக்கு எம்.பி.

சீனிவாசன் இசை அமைத்தபோது, தனக்கென்று தனி பாணியை ஏற்படுத்தினார். அவரது இசையில் மென்மையும், நளினமும் இழையோடும். அவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு ரசித்தவர்கள் அறிவார்கள். அவர் நல்ல பாடகரும்கூட! பாரதியாரின் பாடல்களை உணர்வுடன் பாடுவார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்

எழுதிய 'பாடசாலை போக வேண்டும்' என்ற பாடலுக்கும் இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன். அகில இந்திய வானொலியின் வெளியீடாக அந்த இசைத் தட்டு வெளியானது.

தோழர் பாலதண்டாயுதத்துக்காக, 'தாமரை' இதழில் 'சின்னச்சின்ன மூக்குத்தியாம்', 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' உள்ளிட்ட பாடல்களுக்கு இசை அமைத்ததன் வாயிலாக, எம்.பி.சீனிவாசன் திரையுலகில் நுழைந்தார்.

1960-இல் வெளியான 'பாதை தெரியுது பார்' படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார் சத்தியநாதன். ரயில்வே தொழிலாளியான சத்தியநாதன் பின்னாளில் நடிகராக, இயக்குநராக மாறிய கே.விஜயன். ஜெயகாந்தனின் பங்களிப்பும் இந்தப் படத்துக்கு இருந்தது. கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பணியை சீனிவாசன் ஏற்றார். அதன்பிறகும் கே.விஜயன் இயக்கிய படங்களுக்கும் இசை அமைத்ததோடு, 50 மலையாளப் படங்களுக்கும் இசை அமைத்தார். தேசிய விருது பெற்ற 'அக்ரஹாரத்தில் கழுதை' படத்தின் பிரதான பாத்திரத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்தார் சீனிவாசன்.

'சேர்ந்திசை' வடிவத்தையும் பரவலாக்கியதோடு அதற்காகவே தன்னை அர்ப்பணித்து, இன்னிசைக் குழுவையும் நடத்திவந்துள்ளார். 1988-இல் லட்சத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர் உயிருடன் திரும்பவில்லை.

'முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது, ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் விவசாயிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைகளை நான் அளிப்பேன். அவர் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, என் பெயரை குறித்து நான் என்னென்ன பரிந்துரைகளை அளித்தேன் என்றும் அவற்றில் எவையெல்லாம் நடைமுறைப்

படுத்தப்படும் என்றும், அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்றும் அறிவிப்பார். அவரிடம் செம்மொழி மாநாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துக்கும் மேற்பட்ட பொருள்களைக் கொண்டு ஒரு பூங்கா அமைக்க வேண்டும் எனக் கூறினேன். அதன்படியே சென்னையில் செம்மொழிப் பூங்காவை அமைத்தார். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், அவர் சிறு விஷயங்களிலும்கூட அதிலுள்ள நுட்பங்களைப் புரிந்துகொண்டு செயல்படுத்தியவர்' என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறினார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சிக் கூடத்தில் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஆராய்ச்சி செய்ய வந்தார். 'இதுதான் உங்கள் அறை' என்று ஆராய்ச்சிக் கூடத்தினர் ஓர் அறையைக் காண்பித்தனர். அப்போது ஐன்ஸ்டீன் அங்கிருந்த சிறு குப்பைக் கூடையைக் காட்டி, 'இதைவிட பெரிய குப்பைக் கூடை கிடைக்குமா?' என்று கேட்டார். 'எதற்கு?' என்று அவர்கள் கேட்டனர். அதற்கு ஐன்ஸ்டீன், 'நான் கணக்கு போட்டு பார்க்கும்போது அடிக்கடி தவறுகள் ஏற்படும். உடனே அந்தக் காகிதத்தைக் கசக்கி ஏறிந்துவிட்டு மீண்டும் இன்னொரு காகிதத்தில் கணக்கு போடுவேன். பின்னர், அதையும் கசக்கிவிட்டு, இன்னொரு காகிதம் எடுப்பேன். நான் என்ன மேதாவியா? அதனால் எனக்கு சரியான விடை வருவதற்குள் குப்பைக் கூடை நிரம்பிவிடும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com