கண்ணாடி பாலங்கள்...

இந்தியாவின் கண்ணாடி பாலங்கள் அற்புதமான கட்டமைப்புகளுடன் வெளிப்படையான தரைகள், மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுடன் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை அள்ளித் தருகின்றன.
கண்ணாடி பாலங்கள்...
Published on
Updated on
3 min read

இந்தியாவின் கண்ணாடி பாலங்கள் அற்புதமான கட்டமைப்புகளுடன் வெளிப்படையான தரைகள், மூச்சடைக்கக் கூடிய காட்சிகளுடன் சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை அள்ளித் தருகின்றன. நீர்வீழ்ச்சிகள் முதல் மலை உச்சி, கடல் உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் பாலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒன்பது கண்ணாடி பாலங்கள் பார்க்க வேண்டியவை.

கன்னியாகுமரி கண்ணாடி பாலம்

தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில், விவேகானந்தர் நினைவு மண்டபப் பாறைக்கும், திருவள்ளுவர் சிலையுள்ள பாறைக்கும் இடையே இந்த பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் அகலம் 10 மீட்டர். நீளம் 97 மீட்டர். பாலத்தின் நடுவில் இரண்டு அங்குல தடிமன் கொண்ட மூன்று அடி அகலமுடைய ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடியால் தரை ஓடுகளும் பக்கவாட்டில் ஒளி புகாத சாதாரண தரை ஓடுகளும் பதிக்கப்பட்டுள்ளன. கண்ணாடி வழியே அடியில் கடலை ரசிக்கலாம்.

நாப்னே நீர்வீழ்ச்சி கண்ணாடி பாலம்

மகாராஷ்டிர மாநிலத்தில், கோலாப்பூர்-தார்லே தேசிய நெடுஞ்சாலையில் சிந்து துர்க் தொலைதூர கிராமத்தில் பிரமிக்க வைக்கும் நாப்னே நீர்வீழ்ச்சியின் மீது கண்ணாடி பாலம் தொங்கவிடப்பட்டுள்ளது. தூரத்தில் அருவிகள், பசுமையான வனப் பகுதி, பஞ்சு போன்ற மேகங்கள் போன்றவற்றை ரசிக்க வைக்கும் இந்தப் பாலம் 22 மீட்டர் நீளம் கொண்டது.

கொங்கன் வனப்பகுதியின் பின்னணியில் நீர்வீழ்ச்சியானது காண்போரை மயக்கும் காட்சியாக மாறுகிறது. கம்பீரமான இருவாட்சிகள், வண்ணமயமான பட்டாம் பூச்சிகள், பலவகையான தாவரங்கள், துடிப்பான வனவிலங்குகளைக் கொண்ட கிராமம். பாலத்தில் கீறல்கள், குறைபாடுகளை தவிர்க்க ஷூ கவரை அணிந்தால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி.

ராஜ்கீர் கண்ணாடி பாலம்

பீகாரின் ராஜ்கீர் வனப் பகுதியில் இந்த 'ஸ்கை வாக்' உள்ளது. இதனுடன் அதிநோக்கு தொங்கு பாலமும் திறக்கப்பட்டுள்ளது. 500 ஹெக்டரில் வைபகிரி, சோங்கிரி மலைகளுக்கு இடையில் உள்ள வனப் பகுதியில் உள்ளது. இங்கு ஜிப் லைனிங், பறக்கும் நரி, ஸ்கை பைக்கிங் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ரசிக்கலாம்.

ராஜ்கீர் இயற்கை கொஞ்சும் இடம். மலையடிவார நகரம். பசுமையான வனப் பகுதிகள். அருகேயுள்ள நாளந்தாவில், புத்தர் பல ஆண்டுகள் தங்கி பிரசங்கங்களைச் செய்தார்.

பாலம் கண்ணாடி, எஃகால் ஆனது. 15 மி.மீ. தடிமன் கண்ணாடியாலான மூன்றடுக்கு கொண்டது. 85 அடி நீளம், 6 அடி அகலம். ஒரே சமயத்தில் 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தொலைதூர முனையில் ஒரே சமயத்தில் 15-20 மட்டுமே நிற்க அனுமதி. அழகிய மலைகளால் சூழப்பட்டிருக்கும் இதில் இருந்தபடி கீழே இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

பெல்லிங் ஸ்கை வாக்கிங்

சிக்கிமில் இமயமலையின் பின்னணியில் காங்டாக்-சிலிகுரி பாதையில் பெல்லிங் நகரம் அமைந்துள்ளது. நாட்டின் முதல் கண்ணாடி பாலம் இங்குதான் உள்ளது. உலகின் மிக உயரமான போதிசித்தர் சென்ரெசிக் சிலை இங்கு தான் உள்ளது. இதனை தலாய் லாமா திறந்து வைத்தார். தீஸ்தா, ரங்கீத் ஆறுகள் கண்ணாடி பாலப் பாதைக்கு அருகில் ஓடுகின்றன. பசுமையான பள்ளத் தாக்குகள், கிழக்கு இமயமலையின் அற்புதமான காட்சிகளைக் காணலாம். இந்த ஸ்கைவாக் ஒரு குன்றின் மீது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மீது நடக்கும்போது காற்றில் ஒரு உற்சாகமும் ஒருவித பதற்றமும் ஏற்படும். கம்பீரமான கஞ்சன் ஜங்கா மலைத் தொடரில் பின்னணியில் இது அமைந்துள்ளது. அக்டோபர், மே மாதங்களில் சிறப்பாக ரசிக்கலாம்.

வாகமன் கண்ணாடி பாலம்

கேரளத்தில் உள்ள வாகமன் நகரில், மணிமாலா ஆற்றங்கரையில் காண்டிலீவர் ஸ்கைலாப் 40 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் மிக நீளமான காண்டி லீவர் பாலமும் இதுதான். ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 மி.மீ. கண்ணாடியின் ஐந்து அடுக்கு கொண்ட பாலம். 35 டன் எஃகு முழு கட்டுமானத்தையும் தாங்குகிறது. மலையின் உச்சியில் உள்ள தூண்கள் பாலத்தைத் தாங்கும் ஆறு உலோக கேபிள்

களால் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏறிப் பார்த்தால் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியிலுள்ள கூட்டக்கல், முண்டகாயம், குட்டிகன்னம் போன்றவற்றை காணலாம்.

விசாகப்பட்டினம் கண்ணாடி ஸ்கை வாக்

ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட விசாகபட்டிணத்தின் கைலாசகிரி டைட்டானிக் வியூ பாயிண்ட் அருகில் 50 மீட்டர் நீளமுடைய இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. கட்டி முடித்தவுடன் நாட்டின் மிக நீளமான காண்டி லீவர் கண்ணாடி பாலமாக இது அமையும். கடல், மலைகளின் அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

தோசி மலை கண்ணாடி பாலம்

ஹரியாணாவில் உள்ள தோசிமலையில் கண்ணாடி பாலத்துக்கு மாறாக, ஒரு ரோப் வே(கம்பி வடம்) பாலம் அமைக்கப் பட்டு வருகிறது. இது 900 மீட்டர் நீளம் கொண்டது.

வயநாடு கண்ணாடி பாலம்

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வயநாட்டில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள 100 அடி நீளமுடைய தனியார் கண்ணாடி பாலம், தென்னிந்தியாவின் முதல் கண்ணாடி பாலம். கீழே உள்ள பள்ளத்தாக்குகளின் அற்புதக் காட்சிகளையும் அதை சுற்றியுள்ள மலைகளையும் கண்களைக் கவரும் வகையில் தரிசிக்கலாம்.

மினி ஊட்டி கண்ணாடி பாலம்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலுள்ள அரிம்பிரா மலைப் பகுதியை 'கேரளாவின் மினி ஊட்டி' என அழைப்பர்.

15 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் மூலம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள், அழகான நீர்வீழ்ச்சிகள், பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் காணலாம். அரவங்கராவிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com