வருமான வரி 'நோ'

இந்தியர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதித்தால் மத்திய அரசுக்கு வருமான வரியைச் செலுத்த வேண்டும்.
வருமான வரி 'நோ'
Published on
Updated on
2 min read

இந்தியர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதித்தால் மத்திய அரசுக்கு வருமான வரியைச் செலுத்த வேண்டும். ஆனால், வட கிழக்கு மாநிலமான சிக்கிமில் யாரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

சிக்கிம் ராஜ்ஜியம் 17-ஆம் நூற்றாண்டில் நம்கியால் வம்சத்தால் நிறுவப்பட்டது. பின்னர், சோக்கியால் இனத்தைச் சேர்ந்த புத்த மத குரு-மன்னர்களால் ஆளப்பட்டது. 1890-இல் ஆங்கிலேய- இந்தியப் பேரரசின் சமஸ்தானமாக மாறியது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவைச் சார்ந்திருந்தது.

1973-இல் சோக்கியாலின் அரண்மனைக்கு முன்பு அரச எதிர்ப்பு வன்முறை நடக்க, இந்திய ராணுவம் கேங்டாக் நகரைக் கைப்பற்றியது. பின்னர், 1975-இல் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 97.5% மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, சிக்கிமின் முடியாட்சி கலைக்கப்பட்டது. 1975-ஆம் ஆண்டு மே16-இல் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக சிக்கிம் இணைந்தது.

அப்போது சிக்கிமின் இன, மத, மொழி அடையாளத்தைக் காக்கவும், பராமரிக்கவும் சிறப்பு விதிகள் இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்டன. 1961 இந்திய வருமான வரிச் சட்டத்தில் 10(26ஏஏஏ) என்ற சிறப்புப் பிரிவும் சேர்க்கப்பட்டு, சிக்கிம் மக்கள் தங்களது வருமானத்துக்கு வருமான வரி எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்ற உறுதியை மத்திய அரசு வழங்கியது.

இதன் எல்லைகள் வடகிழக்கில் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி, கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளத்தின் கோசி மாநிலம், தெற்கில் மேற்கு வங்காளம் ஆகியன. கிழக்கு இமயமலையில் அமைந்துள்ள சிக்கிம் இந்திய மாநிலங்களில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமாகவும் இரண்டாவது சிறிய மாநிலமாகவும் அறியப்படுகிறது.

நாட்டிலேயே மூன்றாவது மிக உயரமான 'கஞ்சன்ஜங்கா' சிகரம் இங்குதான் அமைந்துள்ளது. சிக்கிமில் 'நேபாள மொழி' அதிகம் பேசப்படுகிறது. ஹிந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் சிக்கிமில் சுற்றுலாப் பயணிகளின் வரவே நிறைய பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், இயற்கை விவசாயம், பொது சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிக்கிமில் பிளாஸ்டிக் பைகளுக்கு ஒட்டுமொத்த

மாகத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில்தான் பொருள்களைத் தருகின்றனர். எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் மேடு பள்ளம் இல்லாமல் இல்லை. இதனால் மக்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்.

அற்புதமான ரும்டெக்

சிக்கிமின் மிகப் பெரிய மடாலயம் ரும்டெக் மடாலயம். அற்புதமான இடங்களுக்கு இது தாயகமாகும். புத்த விகார்கள், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், இயற்கை அழகுக்காக இந்த நகரம் புகழ் பெற்றது.

கண்ணைக் கவரும் காங்டாக்

காங்டாக், அதன் சுற்றுவட்டாரத்தைச் சுற்றிப் பார்த்தால் சிக்கிம் முழுவதையும் சுற்றிப் பார்ப்பதற்குச் சமம். கடல் மட்டத்திலிருந்து 5,500 அடி உயரத்தில் அமைந்துள்ள காங்டாக்கின் பின்னணி சாட்சாத் இமயமலைத் தொடர்தான். எந்தத் திசையில் திரும்பினாலும் பனி மூடிய மலைகள்.

பல அற்புதமான மலையேற்றங்கள், மலைப் பாதைகளுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது. ஆர்க்கிட் சரணாலயத்தில் உள்ள அற்புதமான ஆர்க்கிட் வகைகள், உலகின் மூன்றாவது உயரமான மலைகளான கஞ்சன்ஜங்கா மலைத்தொடரின் மூச்சடைக்கக்

கூடிய காட்சிகளை வழங்கும் அழகிய தாஷிலிங், புத்த மத கலாசாரம் தொடர்பான நம்கியால் ஆராய்ச்சி நிறுவனம், ரோப் கார் பயணம் உள்ளிட்டவை காண வேண்டிய இடங்களாகும்.

காங்டாக்கிலிருந்து 40 கி.மீ. தொலைவில் 12,310 அடி உயரத்தில் அமைந்துள்ள சோம்கோ சாங்கு ஏரி குளிர் காலத்தில் உறைய... இங்கு ஹாக்கி விளையாட்டு நடக்கும். மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான 'நாதுலா பாஸ்' என்பது சிக்கிமை சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் இணைக்கும் ஒரு பாதை.

இந்த அற்புதமான நாதுலா கணவாய், சீனர்களின் நிரந்தரக் கண்காணிப்பில் உள்ளது. யாக் எருமை சவாரியும் இங்கே செய்யலாம். கணவாய் வழியாகப் பயணிக்கும் போது மலைகளின் கம்பீரத்தைப் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.

காங்டாக்கிலிருந்து தெற்கே சுமார் 31 கி.மீ. தொலைவில் பாக்யாங் அமைந்துள்ளது. சிக்கிமின் ஒரே விமான நிலையம். இங்கு தினமும் 2 விமான சேவைகள் கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகின்றன. இன்னொரு விமான நிலையம் மேற்கு வங்காளத்தில் வடஉச்சியில் அமைந்துள்ள பாக்டோக்ரா விமான நிலையம். பாக்டோக்ரா - காங்டாக்கிற்கு இடையில் உள்ள தூரம் சுமார் 150 கி.மீ. பஸ் அல்லது டாக்சியில் பயணிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com