அவள், வாசலில் கோலத்தைப் போட்டுவிட்டு நிமிரவும், 'தேன்மொழி...' என்ற குரல் கேட்கவும் சரியாக இருந்தது. இங்கு எல்லாரும் 'தேன்மொளி' என்றல்லவா கூப்பிடுவார்கள். 'இவ்வளவு அழகாகத் தன்னை அழைப்பது யார்?' என்ற ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தவள், பாலுவைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.
'அண்ணே! வாண்ணே! என்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்கே!'
'ஒரு வேலையா வந்தேம்மா. அப்படியே ஒன்னப் பாத்துட்டுப் போகலாம்னு தோணுச்சு...'
'வாண்ணே...' என்று அழைத்தபடி, தேன்மொழி உள்ளே சென்றாள்.
நான்கு வீடுகள் இருக்கும் லைன் வீட்டில் அவர்கள் கடைசி வீட்டில் இருந்தார்கள். கோயம்புத்தூரின் மார்கழி மாதக் குளிரில் அக்கம்பக்கம் இன்னும் உறங்கிக் கொண்டிருந்தது.
'மாப்பிள்ளை எந்திரிச்சிட்டாரா? ஒம் புள்ள நல்லாருக்கானா? என்ன பேரு வெச்சிருக்க?'
'அவுங்க மெதுவாத்தாண்ணே எந்திரிப்பாங்க. நம்ம ஊரு மாதிரி இல்லண்ணே. பையனுக்கு குமர
வேலுன்னு பேரு வெச்சிருக்கோம்.'
கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவள், 'கொஞ்ச நேரம் படுக்கிறியாண்ணே?' என்று கேட்டாள்.
'இல்ல தேன்மொழி. பல்லு வெளக்கிட்டு வந்திடறேன்.'
'அந்தா, கடைசீல இருக்கிறதுதான் நம்ம பாத்ரூமு. வெந்நீர் வேணுமா?'
'அதெல்லாம் வேணாம்.'
'இந்தா துண்டு..' என்று கொடியில் கிடந்த துண்டை உருவிக் கொடுக்க, பாலு வாங்கிக் கொண்டு சென்றான்.
பாலை அடுப்பில் வைத்தவள் யோசனையில் ஆழ்ந்தாள். 'இவன் எதற்கு இப்போது திடீரென்று வந்திருக்கிறான்? ஒன்றும் வேலையில்லாமல் உதவாக்கரை என்று பேரெடுத்துத் திரிந்து கொண்டிருக்கிறான்' என்று கேள்வி. 'பத்தாததற்கு வீட்டிலிருந்து பணம் திருடிச் செலவு செய்கிறான்' என்றும் சொல்கிறார்கள். நம்மிடம் ஏதும் பண உதவி கேட்பதற்காக வந்திருக்கிறானோ? நம் பாடே திண்டாட்டம்; இதில் இவனுக்கு எங்கே?
'இந்தாண்ணே காபி.'
இதற்குள் சத்தம் கேட்டு, 'அம்மா...' என்று அழைத்தவாறு குமரவேலு வந்துவிட்டான்.
'குமாரு! இங்க வாடி தங்கம்! யாரு வந்திருக்காங்கன்னு பாரு...'
'அப்புட்டு! மாமாக்கிட்ட வா...' என்று கையை நீட்டினான் பாலு.
குமரவேலு வெட்கப்பட்டு அம்மாவிடம் ஒட்டிக் கொண்டான்.
'கொஞ்ச நேரம் போனா தானா வருவாண்ணே.'
'புள்ளைக்கு ஒண்ணுமே வாங்கிட்டு வரலைம்மா. கடைகண்ணி ஒண்ணும் தெறக்கலை.'
'அதனால என்ன? ஊருல பெரியம்மா, பெரியப்பா, அக்காங்க எல்லாம் செளக்கியமாண்ணே? என்ன திடீர்னு?'
'வேலை விஷயமாத்தான் வந்தேன். சின்னத்தான் அவருக்குத் தெரிஞ்ச எடத்துல சொல்லி இருந்தாரு. அவுங்க சொந்தக்காரங்க இங்க கம்பெனி வச்சிருக்காங்களாம். அதான் பார்த்துட்டுப் போலாம்னு.'
பாண்டியன் அறையிலிருந்து வெளியே வந்தான்.
'அப்பா...' என்று குமரவேலு ஓடிச் சென்று அவன் கால்களைக் கட்டிக் கொண்டான்.
'தஞ்சாவூர்லேருந்து எங்க அண்ணன் வந்திருக்கு.'
'வாங்க! வாங்க!'
'செளக்கியமா அத்தான்?'
'ம்! ஊருல எல்லாரும் செளக்கியம் தானே?'
'வேலை விஷயமா வந்திருக்கு. அந்த கம்பெனி அட்ரஸ் இருக்குதாண்ணே?'
பாலு சட்டைப் பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்துக் காட்டினான்.
'சரவணம்பட்டியில இருக்கு. இந்த போன் நம்பருக்குப் பேசினீங்களா?'
'இன்னும் இல்லை.'
'இப்பத்தான் அண்ணன் வந்துச்சு. காப்பி குடிச்சிது.'
'அத்தான்! நீங்களும் காப்பி குடிங்க. அப்புறம் பேசிக்கலாம்.'
பாண்டியன் துண்டை எடுத்துக் கொண்டு வெளியே போனான். குமரவேலு இப்போது பாலுவின் மடியில் அமர்ந்தான்.
'குமாரு! இந்தா பாலைக் குடி' என்று பால் புட்டியை அவனிடம் கொடுத்தாள். அவனும் பாலுவின் மடியில் படுத்தவாறு பாலைக் குடிக்க ஆரம்பித்தான்.
'அவுங்க வந்ததும் நீயும் குளிச்சிட்டு வந்துடு. சாப்பிட்டுட்டு அவங்களோடயே கிளம்பு. சரவணம்பட்டிக்குப் போற பஸ்ல ஏத்திவிடச் சொல்றேன். அங்க போயி விசாரிச்சுக்குவேயில்ல?'
'அதெல்லாம் விசாரிச்சுக்குவேம்மா.'
பாண்டியன் வந்ததும் பாலு குளிக்கச் சென்றான். தேன்மொழியும் பாண்டியனுக்கு காப்பி கலந்து
கொடுத்தாள்.
'மாவு சுத்தமா இல்லைங்க. கடையில இடியாப்பம் ரெண்டு பாக்கெட் வாங்கிட்டு வந்தீங்கன்னா தாளிச்சி சட்னி அரைச்சிடுவேன்.'
பாண்டியன் தனது மகனைத் தூக்கிக் கொண்டு கடைக்குச் சென்றான்.
தேன்மொழி அவசரமாக அவள் அம்மாவைக் கைப்பேசியில் அழைத்தாள்.
'அம்மா! தஞ்சாவூர்லேருந்து பாலு அண்ணன் வந்திருக்கும்மா!'
'ஐயையோ! அவன் எதுக்குடி அங்க வந்தான்?'
'ஏதோ வேலை விஷயமாம்.'
'ம்க்கும்! வெட்டிப்பயலுக்கு யாரு வேலை குடுப்பாங்க?'
'அட்ரஸ் காமிச்சிதும்மா...'
'பொய்யாயிருக்கும். ஜாக்கிரதைடீ! ஏதாச்சும் திருடிப்புடப் போறான்...'
'அடப் போம்மா! இங்க திருட என்ன இருக்கு?'
'புள்ளைய அவங்கிட்ட தனியா விடாதடீ! அரணாக் கொடியத் திருடிக்கிறப் போறான். வெள்ளி இன்னிக்கி விக்கிற வெலைக்கு அது போதுமே!'
'சரி! சரி! நான் அப்புறம் பேசறேன். உன் மாப்பிள்ளை வந்துட்டாங்க...'
அவள் நினைவலைகள் பின்னோக்கி ஓடின. பெரியப்பா மளிகைக் கடை ஒன்றை நடத்தி ஓரளவு வசதியாகவே இருந்தார். 'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி தான்' என்று சும்மாவா சொன்னார்கள்? போதாததற்கு கேட்டவர்க்கெல்லாம் உதவிகளைச் செய்து, பணத்தைச் சேர்த்து வைக்காமல் புண்ணியத்தைச் சேர்த்து வைத்தார். இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்த பிறகு உண்மையிலேயே ஆண்டியாகிப் போனார். ஆனால், அவர் செய்த புண்ணியம் கைகொடுத்தது.
அடுத்த இரண்டு பெண்களை அவர் உதவியில் படித்த பையன்கள் தேடி வந்து ஒரு பைசா செலவில்லாமல் கல்யாணம் செய்துகொண்டு போனார்கள். பெரியம்மா உடம்பு முடியாமல் படுத்தாள். பெரியப்பா கடையை அடமானம் வைத்து மருத்துவம் பார்த்தார். தேன்மொழியின் அம்மாவும் அக்காவுக்குத் தன்னாலியன்ற உதவிகளைச் செய்தாள். பெரியம்மா பிழைத்துக்கொண்டாள். ஆனால், மளிகைக்கடை கடனில் மூழ்கிப் போனது. கடையை விற்க வேண்டி வந்தது.
வாங்கியவர் பெரியப்பாவால் முன்னுக்கு வந்தவர். பெரியப்பாவைக் கடையிலேயே வேலைக்கு வைத்துக்கொண்டு போதிய சம்பளமும், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் கொடுத்து வருவதால் குடும்பம் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. கடைசிப் பெண் மலர்க்கொடி மாவரைத்துக் கொடுத்தும், ஒயர்க்கூடை பின்னிக் கொடுத்தும் சம்பாதிக்கிறாள். பாலு ஊர்சுற்றித் திரிந்து கொண்டு, எல்லாக் கெட்ட பழக்கங்களும் பழகி, வீட்டிலேயே திருட ஆரம்பித்து விட்டதாகக் கேள்வி.
இடியாப்பத்தைத் தாளித்து, பத்து நிமிடத்தில் பரிமாறினாள்.
'தேன்மொழி! கொஞ்ச நேரத்துல இடியாப்பம் புழிஞ்சி சட்னி அரைச்சிட்டியே... அத்தான்! தேன்மொழி சின்னப் புள்ளையிலேயே கெட்டிக்காரிதான். லீவுக்கு எங்க வீட்டுக்கு வரும். பாட்டு, டான்சு, வெளையாட்டு... வீடே கலகலப்பா இருக்கும். ஞாபகமிருக்காம்மா?'
'இருக்குண்ணே!'
அவள் நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றன. விடுமுறையின்போது, அம்மா தேன்மொழியைப் பெரியம்மா வீட்டில் விட்டுவிட்டு அவள் அம்மாவின் ஊருக்குச் சென்று விடுவாள். பெரியப்பா கடனில் இருந்த நேரம். இவர்கள் அவர்களைவிடச் சற்றே வசதியாக இருந்தார்கள். 'பணமாகக் கொடுத்தால் பெரியம்மா வாங்க மாட்டாள்' என்று அம்மா அரிசி, காய்கறி என்று வாங்கிப் போட்டுவிட்டுப் போவாள்.
தேன்மொழியை மகாராணி போல் கொண்டாடுவார்கள். காலையில் எல்லோருக்கும் ஒரு கிண்ணம் பழைய சோறும், ஊறுகாயும் தான். இவளுக்கு மட்டும் பலகாரம்.
'பாலு! கடையில போயி தேன்மொழிக்கு மூணு இட்லி வாங்கிட்டு வா' என்று அனுப்புவாள் பெரியம்மா. பாலு தினமும் சலிக்காது வாங்கி வருவான்.
'எனக்கு இட்லி?' என்று ஒரு குழந்தையாவது கேட்க வேண்டுமே! பெரியம்மா சொல்லி வைத்திருப்பாள் போல. தேன்மொழிக்கு அப்போது புரியவில்லை. பிறகுதான் அவர்களது வறுமையும், வறுமையிலும் தவறாத விருந்தோம்பலும் புரிந்தன.
'அம்மா! நானும் சாப்பு...' என்ற குமரவேலின் குரல் தேன்மொழியை மீட்டது.
'இந்தா! மாமாகிட்ட ஒரு வாய் வாங்கிக்க...' என்று பாலு தன்னுடைய தட்டிலிருந்து ஊட்டிவிட்டான்.
அப்போதும் அப்படித்தான். காலையில் இட்லி, மதியத்துக்கு இவளுக்கு மட்டும் ஒரு டப்பாவில் கெட்டித் தயிர் வாங்கி வருவான். எல்லோரையும் முதுகில் உப்பு மூட்டை சுமப்பான். பன்னீர்க் காய்களைக் கொண்டு தேர் செய்து தருவான். ஏனோ பின்னாளில் படிப்பு வராமல் கூடா நட்பால் வீணாகிப் போனான். தேன்மொழி பெருமூச்சு விட்டாள். சாப்பிட்டுவிட்டு இருவரும் கிளம்பினார்கள்.
'சாப்பிட வந்துடுண்ணே!'
'சரிம்மா. அத்தான், சாயங்காலம் நீங்க வர நேரமாகுமா?'
'ஆமாம்! எட்டு எட்டரை ஆயிடும்.'
'அப்படின்னா நான் இப்பவே சொல்லிக்கிறேன். ஆறு மணிக்கு திருச்சி பஸ் ஏறுனா பன்னெண்டுக்கெல்லாம் வீடு போய்ச் சேர்ந்துடுவேன்.'
பாலு வருவதற்குள் தேன்மொழி சமைத்து, குமரவேலுவைக் குளிப்பாட்டி, தானும் குளித்து முடித்தாள். இரண்டு மணிக்கு வந்தான்.
'போன விஷயம் என்னாச்சுண்ணே?'
'ஒண்ணும் சரியா வரலம்மா! கம்பெனிக்காரரைப் பாக்கவே ஒரு மணி ஆயிட்டுது. போய்ட்டு வாங்க பெறவு சொல்றோம்னு சொல்லிட்டாரு! அத வுடு! புள்ள சாப்பிட்டானா? குமாரு, இங்க வாடா!'
'பருப்பு சாதம் சாப்பிட்டான். நீ உக்காரு.'
'நீயும் உக்காரு.'
சாப்பிட்டவாறே பழைய கதைகள் பேசினார்கள்.
'ஒனக்கு ஞாபகமிருக்கா? ஒளிஞ்சி புடிச்சி வெளையாடுறப்ப நான் அலமாரி மேல் தட்டுலயும், நீ கீழயும் ஒளிஞ்சிருந்தோம். எறங்கறப்ப நான் ஒம்மேல விழுந்து, நீ ஓன்னு அழுது..'
'பெரியம்மா ஒனக்கு நல்லா பூசை குடுத்துச்சில்ல?'
இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். குமரவேலுவும் சிரித்தான்.
பாலு சட்டென்று யோசனையில் ஆழ்ந்தான்.
'ஊருக்குப் போகவே பயம்மா இருக்கு. அப்பா என்னோட பேசறதே இல்லை. அம்மா என்னைக் கண்டாலே வையுது.'
'நீ ஏதாச்சும் வேலைக்குப் போகவேண்டியதுதானே?'
'யாரும் எனக்கு வேலை குடுக்க மாட்டேங்
கிறாங்கம்மா..'
'நீ ஒழுங்கா இருந்தாத்தானே குடுப்பாங்க?'
'தேன்மொழி! கெட்டவன்னு பேரு வாங்குனதுக்கப்புறம் நல்லவன்னு பேரு வாங்குறது ரொம்பக் கஷ்டம்மா. நான் இப்பத் திருந்திட்டேன். ஆனா யாரும் என்னை நம்புறது இல்லை.'
பாலுவின் கண்கள் கலங்கின. தேன்
மொழிக்கும் அழுகையாக வந்தது.
'கவலைப்படாதண்ணே! எல்லாம் சரியாயிடும்.'
குமாரைத் தூக்கி மடியில் வைத்த தேன்மொழியின் கையில் நூறு ரூபாய் நோட்டு ஒன்றைத் திணித்தான் அவன்.
'எதுக்குண்ணே?'
'அவனுக்குப் பொம்மை ஏதாச்சும் வாங்கிக் குடு.'
வாங்கி காப்பித் தூள் டப்பாவுக்கடியில் வைத்தாள். குமாரைத் தொட்டிலில் போட்டுத் தூங்க வைத்தாள். பாலு தொட்டிலுக்கருகில் படுத்துத் தூங்கினான். இவள் கொட்டுக் கொட்டென்று முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். 'தூங்கிப் போய்விட்டால் பாலு குழந்தையின் அரணாக்கொடியையோ, தொங்கட்டானையோ எடுத்துவிட்டால்... இப்படி நினைக்கிறோமே' என்று அவளுக்கு அவள் மீதே கோபம்
வந்தது.
'பாவம் அவனிடம் செலவுக்குக் காசு இருக்கோ என்னவோ? இருப்பதையும் கொடுத்துவிட்டானோ?'
அவளிடம் ஒரே ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டு இருந்தது.
குமரவேலுவுக்கு தடுப்பூசி போடுவதற்காக வைத்திருந்தாள்.
'அவசரமில்லை. அடுத்த வாரம் போட்டுக் கொள்ளலாம். அண்ணனிடம் கொடுத்துவிடலாம். டிக்கெட்டுக்கு முந்நூறு ரூபாய்... சாப்பாட்டுக்கு நூறு. அவன் குமாருக்குக் கொடுத்தது நூறு; கணக்கு சரி.'
தூங்கி எழுந்து காப்பி குடித்தார்கள். பாலு குமரவேலுவை முதுகில் உப்பு மூட்டை சுமந்தான். பிறகு யானை போல மண்டியிட்டு நகர, குமார் 'ஹை! ஹை! ஓது!' என்று சவாரி செய்தான். வீடே கலகலப்பானது.
'ஏப்ப நான் போயிட்டு வரேம்மா. அப்பு!' என்று குமாரை வாரியணைத்து முத்தமிட்டான்.
'அண்ணே! இந்தா. செலவுக்கு வெச்சுக்க!' என்று ஐந்நூறு ரூபாயைக் கொடுத்தாள். அவன் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். ஏனோ இருவர் கண்களிலும் கண்ணீர்!
மறுநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் அவள் கைப்பேசி ஒலித்தது.
'ஏம்மா இந்த நேரம் கூப்பிடுறே?'
'பாலு மருந்தக் குடிச்சிட்டானான்டீ! இப்பதான் சேதி வந்துச்சு.'
'என்னம்மா சொல்றே?' என்று அதிர்ச்சியோடு கேட்டாள்.
'ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தானாம். அக்கா திட்டுச்சாம். ரூமுக்குள்ள போயிப்படுத்தவன் ஆறாகியும் எந்திரிக்கலையாம். மலரு உள்ள ஏதோ எடுக்க லைட்ட போட்டுருக்கா. பாத்தா வாயில நொரை தள்ளிக் கெடந்திருக்கான். பெரியாஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க!'
'ஐயையோ!'
'சரி, நானும் அப்பாவும் கிளம்புறோம். நீ கைப்புள்ளையைத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டாம். அப்புறமா இந்தப் பக்கம் வர்றப்ப விசாரிச்சுக்கலாம். வைக்கிறேன்.
தேன்மொழியின் கை அனிச்சையாக காப்பித் தூள் டப்பாவை எடுத்தது. பாலு தந்த நூறு ரூபாய் நோட்டு அவளைப் பார்த்துச் சிரித்தது.
'கணக்கு சரியென்று நினைத்தேனே! கணக்கு தப்பாகிவிடக் கூடாதே' என்று மனசு வீட்டு தெய்வத்தை நினைக்க ஆரம்பித்தது. இருந்தாலும், தேன்மொழியின் மனது வலித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.