
அருள்செல்வன்
'ஒரு சிறந்த புகைப்படத்தை ஒளிதான் முடிவு செய்யும். என் படங்களில் நான் இல்லை. என் படங்களில் இருப்பது அவர்கள்தான். நான் எடுக்கும் ஒவ்வொரு ஒளிப்படத்திலும் நான் ஒரு கருவி தான். சம்பந்தப்பட்ட ஆளுமைகள் அவர்களது படங்களைத் தானே உருவாக்கிக் கொண்டு தோன்றுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
திட்டமிட்டு நாம் எடுத்தால், எடுக்க நினைத்தால், தோல்வியில்தான் முடியும். அது உண்மையாக இருக்காது. பெரும்பாலும் 'போஸ்' கொடுத்து எடுக்க நான் விரும்புவதில்லை. அவர்கள் விரும்பினால் எடுப்பேன்.இயற்கை ஒளியில் தான் நான் எப்போதுமே எடுப்பேன்.
பிரெஞ்சு போட்டோகிராபர் ப்ரோசோன் தான் இதில் எனக்கு முன்னோடி. உலகத்தில் சிறந்த படங்கள் எல்லாமே இப்படி இயல்பாக இயற்கை ஒளியில் எடுக்கப்பட்டவைதான்' என்கிறார் புதுவை இளவேனில்.
எழுத்தாளர்கள், கலைஞர்கள்.. என்று ஏராளமான ஆளுமைகளைப் புகைப்படங்களாக எடுத்து ஆவணப்படுத்தி வரும் இவர், எழுத்தாளர் கி.ரா. வால் தனது மகன்களோடு வாரிசாக அறிவிக்கப்பட்டவர்.
அவருடன் ஒரு சந்திப்பு:
நீங்கள் எப்படி புகைப்படத் துறைக்கு வந்தீர்கள்?
எனக்கு பத்திரிகைகளில் வந்த ஓவியங்களைப் பார்த்து நாமும் அதுபோல் ஓவியராக வேண்டும் என்ற ஆசை ஆரம்பத்தில் இருந்தது. பின்னர், கவிதைகள் எழுதினேன். ஒரு கட்டத்தில் விட்டுவிட்டேன். புதுச்சேரியில் ரோமன் ரோலண்ட் நூலகத்துக்குச் சென்றபோது, அங்கே புகைப்படக் கலைஞர் ரகுராய் உருவாக்கிய 'தாஜ்மஹால்' என்ற புத்தகத்தைப் பார்த்தேன்.
அதில், 'தாஜ்மஹால்' பின்னணியில் கழிவுகள், சாணம் போன்றவை இருக்கும் . அப்படிப்பட்ட தாஜ்மஹாலை யாருமே பார்த்திருக்க முடியாது. தாஜ்மஹாலின் சீர்கேட்டைக் கூறும் அந்தப் படங்கள் பேசும் படங்களாகவே எனக்குத் தோன்றின. புகைப்படத்தில் ஆர்வம் வந்த எனக்கு, எடுத்தால் அது இப்படிப் பட்ட பேசும் படமாகவே இருக்க வேண்டும் என்று 16 வயதிலேயே தோன்றியது.
அதற்குப் பிறகு, 'புகைப்படம் எடுப்பது எப்படி?' என்ற புத்தகத்தை வாங்கினேன். ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. பிறகு ஒன்றரை ஆண்டு ஸ்டுடியோவில் வேலை பார்த்தேன் . அங்கே என்னை கேமராவையே தொட விடவில்லை . நான் வேலைக்குப் போய் சீட்டு போட்டு ஐந்தாயிரம் ரூபாய் சீட்டை 4,500-க்கு எடுத்து நிக்கான் எஃப். எம். 10 கேமரா வாங்கினேன். அதை இன்றும் வைத்துள்ளேன்.
ஒருநாள் கி.ரா. வைச் சந்தித்தேன்.அவரை முதலில் படம் எடுத்தேன்.அவர் மூலம் பலரும் எனக்கு அறிமுகமானார்கள்.என் வாழ்க்கையில் எல்லாமே மாறியது.
எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?
அந்த ரோலண்ட் நூலகத்தில் 'புயலிலே ஒரு தோணி' புத்தகத்தைப் பார்த்தேன். அதில் அந்த எழுத்தாளரின் புகைப்படம் சிறிதாக இருந்தது. தெளிவாகவும் இல்லை. இப்படிப்பட்ட நாவலை எழுதியவருக்குச் சரியான புகைப்படம் இல்லை என்று வருந்தினேன்.
அதேபோல, தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன் போன்றவர்களுக்கெல்லாம் அதேபோன்று படங்கள்தான் உள்ளன. அது முதல் எழுத்தாளர்களைப் படங்கள் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
எத்தனை எழுத்தாளர்களை, கலைஞர்களை படம் எடுத்திருக்கிறீர்கள்?
நூற்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களை, கலைஞர்களை ஒளிப்படங்கள் எடுத்து இருக்கிறேன். ஒவ்வொருவரது படங்களும் ஆயிரத்துக்கு மேல் இருக்கும்.
மேலைநாடுகளில் எழுத்தாளர்களுக்கு 'போட்டோ செஷன்' என்று வைப்பார்கள். சரியான ஒளி அமைப்புடன் போஸ் கொடுக்கச் செய்து எடுப்பார்கள். இங்கே அந்தப் பழக்கம் இல்லை. இருந்தாலும் அப்படி நடிக்கச் சொல்லி எடுப்பது நன்றாக அமையாது என்பது என்னுடைய எண்ணம்.நான் அதில் ஆர்வம் காட்டுவதில்லை.
கிடைக்கும் ஒளியில் எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?
ஒளி ஒரு கடவுளைப் போன்றது. ஒளியே ஒரு புகைப்படத்தின் அத்தனை அற்புதங்களை நிகழ்த்துகிறது. இந்த நம்பிக்கையை பிரெஞ்சு போட்டோகிராபர் ப்ரோúஸான் படங்களில் இருந்து நான் பெற்றேன்.
ஒரு புகைப்படம் நன்றாக இருக்க நான் எடுக்கும் குறிப்பிட்ட அந்த ஆளுமைதான் காரணம். நான் அல்ல. படம் நன்றாக அமைவது புகைப்படக்காரர் கையில் இல்லை. அந்தத் தருணத்தின் கையில்தான் இருக்கிறது. தருணம் தான் அந்தப் படத்தை முடிவு செய்கிறது என்பேன்.
நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தற்செயல் தருணங்கள் செய்த மாயம் பற்றி?
சுந்தரராமசாமியின் கைகளை விரிக்கும் மாதிரியான ஒரு படம் பலருக்கும் பிடித்த படமாய் இருக்கிறது. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பேசியபோது, அவர் அப்படிக் கையை விரித்த அந்த தருணத்தில் நான் எடுத்த படம் தான் அது . அதை நான் திட்டமிட்டு உருவாக்கவில்லை.
தருணம் தான் அதை உருவாக்கிக் கொண்டது. காலத்தை உறைய வைக்கும்படியான இப்படியான படங்கள்தான் என்றும் நிற்கும்.
படத்தில் அந்தப் படைப்பாளியின் சுபாவம் வெளிப்பட என்ன செய்வீர்கள்?
ஒரு படைப்பாளி மிகவும் மகிழ்ச்சி அடைவது அவர் படைப்புகள் வாசிக்கப்படும் போதுதான். நான் எந்த எழுத்தாளரை சந்திக்கச் சென்றாலும், அவர்களின் படைப்பை வாசித்து விட்டே செல்வேன். ஓர் எழுத்தாளர் புகைப்படக்காரரைவிட தனது வாசகனைச் சந்திக்கவே விரும்புவார்.
அப்படி நான் ஒரு வாசகனாகத்தான் படைப்பாளிகளிடம் செல்வேன். அப்படி நான் வாசகனாகச் செல்லும்போது அவர்கள் குழந்தையாக மாறிவிடுவார்கள். அப்போது நாங்கள் ஒரே புள்ளியில் இணைந்து இருப்போம். அப்போது எனக்குள் இருக்கும் புகைப்படக்காரர் அவர்களை ஒரு கைப்பாவையாக மாற்றி விடுவார்.
நாஞ்சில்நாடனை இதுவரை ஒரு உயர் அதிகாரி போல் தோற்றத்தில் எல்லோரும் எடுத்திருப்பார்கள். என் படங்களில் மட்டும் அவர் இயல்பாக இருப்பார். ஆளுமையின் சுபாவம், குணச்சித்திரம் வெளிப்படுவது ஒளியால் தான். ஒளி தரும் விசித்திரமே அந்தக் குணச்சித்திரத்தை ஒளிப்படமாக வெளிப்படுத்துகிறது.
மறக்க முடியாத அனுபவங்கள்?
நான் சுந்தர ராமசாமியை சந்தித்தபோது, அவர் தந்த மதிப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் வீட்டில் நான் பத்து நாள் தங்கி இருந்தேன். அப்போது ஒவ்வொரு நாளும் என்னிடம் அவர் காட்டிய அன்பும் மதிப்பும் மறக்க முடியாது.
கனிமொழியை நான் ஒரு படம் எடுத்திருந்தேன். அது எனக்கு மிகவும் பிடித்த படம். எனது புகைப்படத் தொகுப்பு நூலில் அந்த படத்தை வெளியிடக் கேட்டபோது, கூச்சப்பட்டுக் கொண்டு மறுத்தார்.
ஆனால் எல்லாரும் அந்தப் படத்தைப் பாராட்டினார்கள். அவர் தனது தந்தையிடம் என்னை அறிமுகப்படுத்தியபோது, 'இவர் எழுத்தாளர்களைப் படம் எடுக்கிறவர்' என்றார். அப்போது கருணாநிதி உடனே, 'நான் எழுத்தாளர் இல்லையா?' என்றார்.
அதே கருணாநிதியிடம் கையில் எனது பழைய கேமராவை வைத்து இருக்குமாறு கூறினேன். ஒரு குழந்தையைப் போல் அதை வைத்திருந்தவாறு பார்த்தார். அப்போது நான் எடுத்த அந்தப் படத்தை என்னால் மறக்க முடியாது.
பிரபஞ்சன் என்னைப்பற்றி இன்னொரு நண்பரிடம், 'எல்லாரும் இருக்க வச்சு படம் எடுப்பார்கள். இளவேனில்தான் இருக்கிறதைப் படம் எடுப்பவர்' என்று கூறினாராம். அதை மறக்க முடியாது.
கி.ரா.வோ, 'இவன் கிடைத்தது என் அதிர்ஷ்டம். இவன் படம் எப்போதும் பேசிக் கொண்டே இருக்கும்' என்று கூறியிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரிக்கு வந்தால் என்னைச் சந்திக்காமல் செல்லவே மாட்டார் அவ்வளவு அன்பு கொண்டவர்.
உங்களைத் தூண்டிய தோற்றங்கள் கொண்டவர்கள் ?
கி.ரா.வை மட்டுமே நான் பத்தாயிரம் படங்களுக்கு மேல் எடுத்திருக்கிறேன். அவரைப் பார்க்கும் போதெல்லாம் படம் எடுக்க வேண்டும் என்று தோன்றும் . எடுத்த பிறகு அது புதிய தோற்றம் கொண்ட படமாகத்தான் இருக்கும்.
கி.ரா. பற்றி இப்போது இந்தத் தருணத்தில் நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
எனக்கான அனைத்து புகழிலும் பெயரிலும் கி.ரா.வின் பங்கு உண்டு. அவரைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரம் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன் அவரை முதலில் பார்த்தபோது, 'என்ன செய்கிறாய்?' என்றார். 'ஆட்டோ ஓட்டுகிறேன்' என்று சொன்னேன். அது ஒரு பொய்தான். அதை நம்பி எனக்கு ஆட்டோ வாங்க ஒரு லட்ச ம் ரூபாய் கொடுத்தார். என் முகவரி கூட அவருக்குத் தெரியாது. அப்போது அந்தப் பணத்தில்தான் ஆட்டோ வாங்கினேன்.
எழுத்தின் காப்புரிமையில் தன் இரு மகன்களைப் போலவே எனக்கும் ஒரு பங்கைக் கொடுத்திருக்கிறார். மூன்று புத்தகத்தின் முழு காப்புரிமையையும் கொடுத்துள்ளார். தமிழில் இப்படி நடக்குமா ?ஆனால் கி.ரா செய்திருக்கிறார். இப்பொழுது சொல்லுங்கள், கி.ரா தாராள பிரபு தானே?
உங்கள் புகைப்படங்களின் தொகுப்பு நூல் 'நிச்சலனத்தின் நிகழ்வெளி'க்கு வந்த எதிர்வினை எப்படி இருந்தது ?
நான் நினைத்த மாதிரி அது கண்டுகொள்ளப்படவும் இல்லை. கொண்டாடப்படவும் இல்லை. ஆனால் இதில் எனக்கு வருத்தமில்லை.அப்படித்தான் அதைக் கடந்து போகிறேன். எனக்கு சந்தேகம் வரவில்லை. எதிர்காலத்தில் கொண்டாடப்படலாம். அவ்வளவுதான். ஆனாலும் நான் என் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
'பெருவாழ்வு பேசுதல்' என்கிற ஆவணக் காணொலி முயற்சி பற்றி? அடுத்த நிலை என்ன?
புகைப்படத்துக்கு அடுத்த முயற்சியாக படைப்பாளிகளை வீடியோவில் பதிவு செய்து ஆவணப்படமாக உருவாக்கி வருகிறேன். முதலில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனை எடுத்தேன். அந்தப் படம் பற்றி ஜெயமோகன், 'நாங்கள் எடுக்க நினைத்த மாதிரி மிகச் சரியாக எடுத்து இருக்கிறார்' என்று குறிப்பிட்டதை மறக்க முடியாது.இப்போது கவிஞர் சுகுமாரனை எடுத்திருக்கிறேன். இப்படி 50 எழுத்தாளர்கள் பற்றியாவது சரியான ஆவணப்படம் உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது.
எதிர்காலத் திட்டமாக இன்னொரு நூலை உருவாக்கும் வகையில், இளைய படைப்பாளிகளின் படங்களை அதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்கிற திட்டம் உள்ளது .
ஆத்ம திருப்தி அடைந்த அனுபவம் எப்போது?
என்னை மற்றவர்கள் ஒரு சாதாரண புகைப்படக்காரராக நினைக்காமல் இருப்பது எனக்கு ஒரு பெரிய திருப்தி. எனது புகைப்படங்கள்தான் எனக்கு இப்போது கிடைத்திருக்கும் புகழ். இதுவே திருப்தி தரும் ஒன்றுதான். இவ்வளவு பேரை புகைப்படம் எடுத்து இருப்பதே ஒரு பெருமைதான். எப்போதும் படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார் என்று பேசப்படவே விரும்புகிறேன். எப்போதும் நான் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.
எல்லாரும் பார்வையிலும் என் புகைப்படங்கள் இருக்க வேண்டும். எனவே எனது புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு எந்தவித காப்புரிமையும் நான் கேட்கவில்லை. விருப்பப்பட்டவர்கள் எடுத்துப் பயன்படுத்தலாம். அதில் என் பெயரைக் கூட போட வேண்டாம். ஏனென்றால் அந்த படங்களில் இருப்பவர் நான் அல்ல; அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.