தனியார் பள்ளிகளின் மீது மக்கள் கொண்டிருந்த ஈர்ப்பு குறைந்து, அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்புகின்றனர். இந்த முயற்சியை வெற்றியாக்கியதற்கு ஒரு சிறந்த உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு உள்பட்ட பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விளங்குகிறது.
2015-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளி 176 மாணவர்களுடன் செயல்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக, தற்போது 223 மாணவர்கள், 192 மாணவியர் என மொத்தம் 415 மாணவர்களுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், 415 மாணவர்களில் 88 பேர் அரசு ஊழியர்களின் குழந்தைகளாகும்.
'இந்தச் சாதனைகளை நிகழ்த்தியது எப்படி?' என்பது குறித்து தலைமை ஆசிரியர் ஜெ.ஜெயந்தியிடம் பேசியபோது:
'2011-இல் ரூ.7 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. 2023-24 -ஆம் ஆண்டில் ரூ.71.35 லட்சத்தில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. மாணவர்கள் அதிக அளவில் சேருவதற்கு தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருவதால், தற்போது, 2025-26 நிதியாண்டில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பள்ளியில் ஆசிரியர்கள் 11 பேர் உள்ளனர். இசை, ஓவியம் மற்றும் எல்.கே.ஜி.க்கும் ஆசிரியர்கள் உள்ளனர். சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாணவர்களுக்கு 3, மாணவியருக்கு 6, சிறப்புக் குழந்தைகளுக்காகத் தனியாக 2 கழிவறைகள் உள்ளன.
மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வி நிலை குறித்த தகவல்கள் பெற்றோருக்குத் தொடர்ச்சியாகப் பகிரப்படுகின்றன. ஓ.என்.ஜி.சி., தன்னார்வலர்கள், காவல் துறை, பெற்றோர்கள் வழங்கும் உதவிகள் மூலம் பள்ளியில் தரைத்தளம், சி.சி. டி.வி. கேமராக்கள், குடிநீர் வசதி, நூலகம், சிறார் மன்றங்கள் போன்றவை சிறப்பாகச் செயல்படுகின்றன.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணனின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவியால் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டன. தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஸ்மார்ட் டி.வி. வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி தற்போது தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது.
மாணவர்கள் கராத்தே, சிலம்பம், வில்வித்தை, நீச்சல், தடகளப் போட்டிகளில் மாநில அளவில் சாதித்துள்ளனர். பேச்சு, கவிதை, அறிவியல், வானவில் மன்றம் போன்ற போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளனர்' என்கிறார் ஜெயந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.