கேக் நாயகி

'இந்தியாவில் எனக்கு கை கொடுத்த 'கேக் தயாரிப்பு' கலையானது என்னை வாழ்வில் உயர்த்திவிடும் என்று, இலங்கையில் இருந்து 1983-இல் குடிபெயர்ந்து சென்னையில் முதலில் நான் கால் பதித்தபோது நினைக்கவில்லை.
கேக் நாயகி
Published on
Updated on
3 min read

'இந்தியாவில் எனக்கு கை கொடுத்த 'கேக் தயாரிப்பு' கலையானது என்னை வாழ்வில் உயர்த்திவிடும் என்று, இலங்கையில் இருந்து 1983-இல் குடிபெயர்ந்து சென்னையில் முதலில் நான் கால் பதித்தபோது நினைக்கவில்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்த ஐந்து ஆண்டுகள் என் வாழ்நாளின் பொற்காலம். தொலைக்காட்சிகளில் 500 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். ஆறு நூல்களை எழுதி இருக்கிறேன்' என்கிறார் சாந்தா ஜெயராஜ்.

தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்ட ஆஸ்திரேலியாவாழ் இலங்கைத் தமிழ் மகள், கேக் செய்முறை அலங்காரத்தில் ஐம்பது ஆண்டுகள் அர்ப்பணித்தவர், நவீன முறையிலான கேக்குகள் தயாரிப்பு நூல்களை தமிழில் முதலில் எழுதியவர், பல்வேறு நாடுகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தியவர், 'சாந்தாஸ் கேக்ஸ்', 'சாந்தாஸ் டேபிள்' எனும் இரு யூடியூப் சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்திவருபவர், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர், ஆஸ்திரேலிய அரசு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்.

அவரிடம் பேசியபோது:

'சிறு வயது முதலே எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம் இருந்தது. என்னுடைய தாய், பாட்டி இருவருமே நன்றாகச் சமையல் செய்பவர்கள். நான் முதல் கேக்கை செய்தபோது, எனக்கு வயது பதினொன்று. திருமணத்துக்குப் பின்னர் கேக் தயாரிப்புக்கான வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தேன். சமையல், மணப்பெண் அலங்காரம், சிகை அலங்காரம், கைவினைக் கலைகளையும் கற்றேன்.

கேக் செய்யும் முறையும் அலங்காரமும் அரிய கலை. இது வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமானது. இந்தக் கலையை தமிழ்க் கலாசாரத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்' என்று 1975-ஆம் ஆண்டிலேயே எனது மனதில் எண்ணம் ஏற்பட்டது. 1975- இல் எனது பெற்றோரின் நாற்பதாவது திருமண நாளன்று, 'அன்புடன் ஒன்றிணைந்த இரண்டு பூமாலைகள் போல்' செய்த கேக் அனைவரையும் கவர்ந்தது.

1983-இல் இலங்கை வன்முறையின்போது, நாங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தோம். நானும், என் கணவர், இரண்டு குழந்தைகள், என் தந்தை ஆகியோர் சென்னை அண்ணா நகரில் பயனியர் காலனியில் குடியேறினோம். 1984 ஜனவரி 17-இல் சென்னையில் கால் பதித்து, அதே ஆண்டு பிப்ரவரி 16-இல் அண்ணா நகரில் கேக் கண்காட்சி நடத்தும் அளவுக்கு உயர்ந்தேன்.

என்னுடைய கேக் தயாரிப்பின் தனித்துவமான உத்திகள் பலரையும் கவரவே என்னிடம் பயிற்சி எடுக்க பலரும் வந்தனர். திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இருந்து கூட பலர் வந்து, என்னிடம் கற்றனர். அவர்களில் சிலர் இன்று பிரபலமான பயிற்சியாளர்களாக இருக்கின்றனர்.

1985-இல் எனது இரண்டாவது கேக் கண்காட்சியை ஆச்சி மனோரமா திறந்து வைத்தார். சென்னையில் 1987-இல் மலர்க் கண்காட்சியை நடிகர் கமலஹாசன் திறந்து வைத்தார். அதன்பின்னர், தொலைக்காட்சியில் கேக் சமையல் அழகுக் குறிப்பு நிகழ்ச்சியை நடத்தினேன். பத்திரிகைகளிலும் எழுதினேன்.

1987- ஆம் ஆண்டு அக்டோபர் 1-இல் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் 60-வது பிறந்தநாள். பத்திரிகைத் துறை நண்பர் ஸ்ரீதர் என்னிடம், 'சிவாஜி கணேசன் பார்த்திராத மாதிரி ஓர் அழகிய கேக் செய்து தர

முடியுமா?' என்று கேட்டார். அவர் கேட்டது ஒரு கேக். ஆனால் நான் செய்ததோ மூன்று கேக். ஒரு குத்துவிளக்கு, ஒரு பூரணக்கும்பம், ஒரு வெற்றிலை பாக்கு தட்டு என மூன்று மங்கலப் பொருள்களாக கேக்குகளை வடிவமைத்தேன். இவற்றை அவரது இல்லத்தில் வைத்தோம். இதைப் பார்த்து, சிவாஜி கணேசன் வியந்தார்.

அப்பொழுது அருகில் இருந்த என் மகனைப் பார்த்து, 'உங்கள் பையனா . பையனோட கண்ணு சரியில்லையே... டாக்டர் கிட்ட காட்டுங்க' என்றார். மறுநாள் டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது, அவனுக்கு மஞ்சள் காமாலை என்று டாக்டர் கூறியது கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவரால் என் மகன் காப்பாற்றப்பட்டது மறக்க முடியாத அனுபவம்.

1989-இல் நாங்கள் குடும்பத்தோடு ஆஸ்திரேலிய நாட்டுக்குப் பயணமானோம். அங்கேயும் கேக் செய்முறைகளைக் கற்றுகொள்ள ஆரம்பித்து, அங்கேயே நான் ஆசிரியராகவும் பணியாற்றினேன். சிட்னி, மெல்பர்ன் நகரங்களிலும் வகுப்புகளை எடுத்தேன். இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்து கலைகளைக் கற்றுக் கொடுத்தேன்.

கேக்குகளின் சிறப்புகள்:

கேக்குகளில் ஐசிங்கில் செய்யும் உருவங்களும், படங்களும் பல ஆண்டுகளுக்குப் பாதுகாத்து வைக்க நினைவுச் சின்னங்களாக அமைப்பதே எனது தனித்துவம். கனடா நாட்டில் கேக் செய்யும் கடைகள் பிரம்மாண்டமானவை. எதை எடுப்பது, எதை விடுவது என்று தெரியாத நிலை. லண்டனில் உள்ள கடைகளில் தேவையான பொருள்கள் மலிவாகவே இருக்கும். ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தும் ஐசிங் வகைகள் கேக் நுணுக்கங்களானது தென்னாப்பிரிக்கா செய்முறைகளுக்கு நிகரானதாகும்.

சிங்கப்பூரில் ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையானது கேக்குகள் செய்வதற்கு இடம் அளிக்கவில்லை. ஆஸ்திரேலியா காலநிலை மிகவும் அற்புதமானது. நான் பிளாஸ்டிக் ஐசிங், பொண்டன்ட் ஐசிங்கில் கேக் அலங்காரங்கள், மலர் உருவங்கள் எல்லாம் செய்து 25 வருடங்களுக்கு மேலாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கேக் தயாரிக்கும் அரிய கலையைத் தமிழ்க் கலாசாரத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டும். கேக்கை நான் ஓர் உணவுப் பொருளாக மட்டுமே பார்க்காமல், கலைப்பொருளாகவும் பார்க்கின்றேன். ஓவியத்தை நாம் வரைந்து பல ஆண்டுகள் கெடாமல் பாதுகாக்கிறோம். அதுபோல ஐசிங்கிலும் உருவங்களை வரைந்து ஐம்பது ஆண்டுகள் பாதுகாக்க இயலும். தமிழ்க் கலாசார கேக்குகள் சம்பந்தமாக ஒரு நூல் எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றேன்' என்கிறார் சாந்தா ஜெயராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com