இந்த மாதம், தனது 90-ஆவது வயதில் எம்.என்.ராஜம் அளித்த பேட்டி ஒன்றில் 'மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு அவரை சந்திக்கவில்லை' என்று சொன்னார். இதைக் கேட்ட முதல்வர் தனது மனைவியுடன், ராஜத்தின் வீடு சென்று நலம் விசாரித்துப் பேசி வந்திருக்கிறார் என்றால், அது அவர் நடிப்பின் பெருமைதானே.
வறுமையின் காரணமாக, ஏழு வயதில் யதார்த்தம் பொன்னுசாமியின் மங்களகான சபாவில் 'மதுரை நரசிம்மாச்சாரி' என்ற எம்.என். ராஜம் சேர்ந்தார். பிறகு 15-ஆவது வயதில் டி.கே.எஸ். நாடகக் குழு, சேவா ஸ்டேஜ், சிவாஜி நாடக மன்றம் என்று நடித்து 1,500 மேடைகளைக் கண்டார். அண்ணா, கருணாநிதி என்று அவர்களின் நாடகங்களிலும் பயணித்தார்.
திரை உலகில் என்.எஸ்.கே. தயாரிப்பில், அண்ணாவின் கதை, வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1949-இல் 'நல்ல தம்பி' படத்தில் அறிமுகமானார்.
எம்.ஆர்.ராதாவுடன் காந்தாவாக நடித்து புகழின் உச்சியைத் தொட ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து 'ரங்கோன் ராதா', 'புதையல்', 'பெண்ணின் பெருமை', 'தங்கப்பதுமை', 'மகாதேவி', 'தெய்வப்பிறவி', 'பதிபக்தி', 'பாசமலர்', 'பாவை விளக்கு', 'சம்பூர்ண ராமாயணம்', 'தாலி பாக்கியம்' என்று தொடர்ந்து சிறந்த தமிழ் உச்சரிப்பாலும் அழகிய சிரிப்பாலும்,
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் என்று புகழ் பெற்ற கதாநாயகர்களுடன் எல்லாம் மறக்க முடியாத படங்களில் நடித்தார்.
சாரங்கபாணி, தங்கவேலு, சந்திரபாபு என்று நகைச்சுவை நடிகர்களோடும் நடித்து 'இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி' வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நடித்து கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் திரையுலகில் சாதிப்பது என்பது சாதாரண விஷயமா என்ன?
எம்.ஜி.ஆர். இரண்டாவதாக இயக்கித் தயாரிக்க நினைத்த கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாக நடிக்க முடிவு செய்யப்பட்டு, 1958-இல் படம் எடுக்க முடியாமல் போனது மட்டுமே இவர் வாழ்வின் எதிர்பாராத ஏமாற்றம். இவர் 1960-இல் பிரபல பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவனை மணந்தார். 1995-களில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 1997-இல் 'கலைச் செல்வம்' விருது எனக்கு அளிக்கப்பட்ட போது, மேடையில் ராதாரவியுடன் இருந்த இவர் எனக்கு வாழ்த்துச் சொல்லி விருதைத் தந்தார்.
சில காலத்துக்குப் பிறகு, சக்தி நாடக சபாவை நடத்திய சக்தி கிருஷ்ணசாமியின் பேத்தி திருமண நிச்சயதார்த்தத்துக்கு தி.நகரில் ஒரு ஹோட்டலுக்கு சென்றேன். சக்தி கிருஷ்ணசாமியின் நாடக சபாவில் சிவாஜி சிறு வயதிலேயே நாடகத்தில் நடித்தார். இவரை சிவாஜி 'சக்தி அண்ணன்' என்றும், 'முதலாளி' என்றும் சொல்லுவார். எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப் படம் 'பெரிய இடத்துப் பெண்' இவர் எழுதியதுதான்.
இதுதான் பிறகு பல பெயர்களில் வெளிவந்தது. இவர் எழுதிய 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் கெய்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் படம்.
இவரது பேத்தியின் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு எம்.என். ராஜம் தனது கணவர் ஏ.எல். ராகவனுடன் ஏற்கெனவே முன் கூட்டியே வந்து அமர்ந்திருந்தார்கள்.
நான் அங்கே போனதும் எம்.என். ராஜம் என்னை அழைத்து கும்பிட்டு தனது கணவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். என்னிடம், 'உங்கள் ஜெயா டி.வி. பேட்டியைக் கண்டேன். மலைப்பாக இருந்தது. நீங்கள் எழுதிய 'சொந்தம்', 'தீர்க்க சுமங்கலி' ரொம்பவே நல்ல படங்கள்' என்று வாயாரப் பாராட்டினார். நான் மகிழ்ந்து போனேன். நெகிழ்ந்து போனேன். பத்தாயிரம் கோடியை விட ஒரு நல்ல கலைஞரின் பாராட்டு மிக உயர்ந்தது என்று உணர்ந்தேன். அவருக்கு என் நன்றியையும் தலை சாய்ந்த வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண்மணி உறுப்பினராக 1953-இல் பதிவு பெற்றார். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார். சிறிதும் கர்வமும், தற்பெருமையும் இல்லாத இவரைப் போன்ற கலைஞர்களை இந்தத் திரையுலகம் இப்போது காண முடியுமா? இவர் நூறாண்டு காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.