
வசதி இல்லாத உடைகளை அணிந்தேன் - அனுபமா!
நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் 'பரதா' என்ற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் அண்மையில் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் நடித்திருந்த 'டிராகன்' படமும் வெளியாகியிருக்கிறது. இதைத் தாண்டி மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'பைசன்' படமும் தீபாவளி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இப்படி பரபரப்பான 'லைன்-அப்'களுடன் சுற்றி வரும் அனுபமா பரமேஸ்வரன், 'டில்லு ஸ்கொயர்' படத்தில் நடித்ததனால் மக்கள் அவரை வெறுத்ததாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அனுபமா பரமேஸ்வரன் பேசும்போது, 'டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் கிடைத்திருந்தது. கமர்ஷியல் படங்களில் வருவது போன்ற ஒரு கேரக்டர் அது கிடையாது. நான் அப்படியான கதாபாத்திரங்களையும் தவறு எனக் குறிப்பிடவில்லை.
அந்தத் திரைப்படத்தில் வரும் என் கதாபாத்திரம் என்னுடைய ரியல் கேரக்டருக்கு நேரெதிரானது. எனக்கு வசதி இல்லாத ஆடைகளையே படத்தில் நான் அணிந்திருந்தேன். அந்தப் படத்தின் அந்தக் கதாபாத்திரத்துக்கு அப்படியான ஆடைகள்தான் தேவைப்பட்டன.
அப்படியான ஆடைகளை அணிந்து அந்தத் திரைப்படத்தில் நடித்தது எனக்குக் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அதில் நடிக்கும் முடிவை எடுப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. சொல்லப் போனால், அதில் நடிப்பதற்குத் தயக்கமாகவும் இருந்தது. அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக மக்கள் பலரும் என்னை வெறுத்தார்கள்' எனக் கூறியிருக்கிறார்.
பிபாஷா பாசுவிடம் வருத்தம் தெரிவித்த மிருணாள்!
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த மிருணாள் தாகூர் ஆரம்பக் காலத்தில் பல பேட்டிகளை அளித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் ஒருமுறை நடிகை பிபாஷா பாசு குறித்து பேசியிருக்கிறார். அதுதொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
அதாவது, பிபாஷா பாசு பார்ப்பதற்கு ஆண் போல் இருப்பதாகப் பொருள்படுவதைப் போன்று மிருணாள் தாகூர் பேசியிருக்கிறார். நடிகை பிபாஷா பாசுவை உருவக் கேலி செய்து மிருணாள் தாகூர் பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில், 'டீன் ஏஜ் பெண்ணாக எனது 19 வயதில் சில சமயங்களில் முட்டாள்தனமாக பேசி இருக்கிறேன். நான் பேசும் விஷயங்கள் எந்தளவுக்கு ஒருவரை காயப்படுத்தும் என்பதை அப்போது நான் புரிந்திருக்கவில்லை.
ஒருவரை உருவக் கேலி செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது. நான் விளையாட்டிற்கு கூட அப்படி பேசியிருக்க கூடாது. நான் விவரம் தெரியாமல் அப்படி பேசியிருக்க கூடாது. அது தவறுதான். அந்த வயதில் தெரியாமல் பேசி விட்டேன்' என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
'கீதா கோவிந்தம்' படத்தை நினைவு கூர்ந்த ராஷ்மிகா!
கன்னடத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, பின்னர் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். 2018-ஆம் ஆண்டில் வெளியான 'கீதா கோவிந்தம்' என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர்.
அவர்களது 'லவ் கெமிஸ்ட்ரி' நன்கு 'ஒர்க்கவுட்' ஆன நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்றனர். 2019-இல் வெளியான 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். அவர்களைப் பற்றிய வதந்திகள் பரவிவருகின்றன.
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் 'கீதா கோவிந்தம்' படம் குறித்து கூறுகையில், '7 வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் என்கிட்ட இருக்குன்னு நம்பவே முடியல. 'கீதா கோவிந்தம்' எனக்கு எப்பவும் ரொம்ப ஸ்பெஷல் படமா இருக்கும்.
இந்தப் படத்தோட மேக்கிங்ல ஈடுபட்ட எல்லாரையும் நான் நினைச்சுட்டு இருந்தேன். நாம எல்லாரும் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு... ஆனா அவங்க எல்லோரும் சூப்பரா, நல்லா இருப்பாங்கன்னு நம்புறேன். கீதா கோவிந்தம் வெளியாகி 7 வருஷம் ஆகுதுன்னு நம்பவே முடியல... 7 வருஷம் கீதா கோவிந்தம்' என்று பதிவிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.