குட்டி குட்டி கதைகள்...

'திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பத்து மாதங்களுக்கு முன் எதிர்பாராதவிதமாகப் பார்த்தபோது இருந்த ரமேஷா இது?
குட்டி குட்டி கதைகள்...
Published on
Updated on
2 min read

மாத்தி யோசி...

'திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பத்து மாதங்களுக்கு முன் எதிர்பாராதவிதமாகப் பார்த்தபோது இருந்த ரமேஷா இது?' என்று நம்ப முடியாத அளவுக்குச் செழிப்போடு இப்போது மாறி இருந்தான். அப்போது வேலை தேடி அலைந்துகொண்டு பரிதாபமாக இருந்தான். இப்போது அவனிடம் 4 பேர் வேலை செய்கிறார்கள் என்று அவனே சொல்லும்போது, ஆச்சரியம் அடைந்தேன்.

'எப்படிடா இது சாத்தியமாயிற்று?' என்றேன்.

'உன்னைப் பார்ப்பதற்கு முன்பு வேலை தேடி அலைந்தேன். வேலை தேடும் இளைஞர்கள் பலரையும் சந்தித்தேன். வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் பாலமாக இருக்கும் வகையில், சிறிய அளவில் நிறுவனத்தைத் தொடங்கினேன். வெற்றியும் பெற்றேன்' என்றான் ரமேஷ்.

வித்தியாசமாகச் சிந்தித்தால் வெற்றி நிச்சயம்தான்!

-இரா.சாந்தகுமார், கூடுவாஞ்சேரி.

ஆயுள் சான்றிதழ்...

'அம்மா வாங்க... தபால்காரர் வந்துட்டார்' என்று உள்ளறையில் படுக்கையில் படுத்தபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவைக் கைத்தாங்கலாய் அழைத்துவந்தான் நாராயணன்.

'வாங்கம்மா... நல்லா இருக்கீங்களா?' புன்னகையுடன் விசாரித்த தபால்காரர், 'ஒண்ணுமில்லைம்மா... வருடம் ஒருமுறை பென்ஷன் ஆபிஸூக்கு நீங்க தர வேண்டிய ஆயுள் சான்றிதழ் எடுக்க நீங்க அங்கே போக வேண்டியிருந்தது... இப்போ அலைச்சல் வேண்டாமுன்னு அரசாங்கம் உங்களைத் தேடி வந்து இந்த ஃபார்மாலிட்டியை முடிக்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க?' என்றார். பின்னர், கைரேகை, கண் இமை அசைவுப் பதிவு என்று முடித்து காபியை ருசித்தார் தபால்காரர்.

காலியான காபி டம்ளரை வைக்க நாராயணன் போன இடைவெளியில், 'என்னம்மா... சோகமா இருக்கீங்க?' என்றார் தபால்காரர்.

'இந்த ஏற்பாட்டை ஏன் வீடு தேடி வந்து செய்யறீங்க? ரூமுக்குள்ளே அடைஞ்சிக் கிடக்கிற எனக்கு இந்தக் காரணத்துக்காக வெளியுலகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் இருந்தது... அதையும் கெடுத்திட்டீங்களே?' என்று முணுமுணுத்தார் அந்தத் தாய்.

-பெ.நா.மாறன், மதுரை.

(ஏ) மாற்றம்...

பெட்டிக்கடை வாசலில் வாழைப்பழத் தார் தொங்கிக் கொண்டிருந்தது. கடைக்காரரிடம் முதியவர், 'மூன்று பழங்கள் என்ன விலை?' என்று கேட்டார். 'முப்பது ரூபாய்' என்று சொன்ன கடைக்காரரரிடம் பேரம் பேசியும் தோல்வியில் முடிந்தது. முதியவர் நூறு ரூபாய் நோட்டை நீட்டி, மூன்று பழங்களை வாங்கினார்.

மீதமுள்ள பணத்தை எண்ணியபோது, புன்னகையுடன் இருந்தார். எழுபது ரூபாய்க்குப் பதில், நூற்று எழுபது ரூபாய் இருந்தது. 'ஐந்து ரூபாய் குறைக்காமல், நூறு ரூபாய் ஏமாந்து அளித்துவிட்டானே' என்று முதியவர் நினைத்துக்கொண்டார்.

நூறு ரூபாயில் நான்கு பொட்டலம் இட்லிகளைக் கட்டிக் கொண்டு, சாலையோரத்தில் பசியோடு இருந்த 4 பேருக்கு அளித்து மகிழ்ந்தார் முதியவர். அவர்கள் பசியாறிய மகிழ்ச்சி இருந்தாலும், அந்த நூறு ரூபாய் கடைக்

காரரின் பணம்தானே என்ற உறுத்தலில், பெட்டிக் கடையை நோக்கி நடந்தார் முதியவர்.

-சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com