
'பொம்மைகள் இல்லாத நவராத்திரி விழாவா?' என்று கேட்போர் உண்டு. அந்த வகையில், பொம்மைகள் தயாரிப்பு இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது.
தஞ்சாவூரில்...:
தஞ்சாவூர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பொம்மைகள் தயாரிப்பது அதிகம். அதிலும், 'தலையாட்டி பொம்மைகள்', 'மரப்பாச்சி பொம்மைகள்' போன்றவை விசேஷம். சரபோஜி மன்னர் இந்தக் கலையை ஆதரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
'தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்' களிமண்ணால் செய்யப்படுகின்றன. மேல், கீழ் என தனித்தனியாய் செய்து கீழே எடைக்காக களிமண் வைத்தவுடன் இணைப்பர். உப்பு பேப்பரால் தேய்த்து வண்ணம் பூசுவர். காவிரி ஆற்றில்தான் களிமண் எடுப்பர். ராஜா ராணி பொம்மை மிகவும் பிரபலம்.
தஞ்சாவூர் பொம்மைக்கு 2008 செப்டம்பரில் புவிசார் குறியீடு கிடைத்தது. முன்பு களிமண்ணால் செய்யப்பட்ட நிலைமை மாறி, இன்று பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகிதக் கூழ், மரத்தூளால் செய்கின்றனர்.
திருமணத்தின்போது தாய் வீட்டு சீராக மரப்பாச்சி பொம்மைகளைத் தருவர். இதனை மணமகன் மணமகள் போல் அலங்கரித்திருப்பர்.
தஞ்சையில் சாய்ந்தாடும் பொம்மைகள், தலையாட்டி பொம்மைகள், நடனப் பொம்மைகள் என ரக வாரியாக செய்வர்.
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், அம்மாபேட்டை, கீழ் அலங்கம் போன்ற இடங்களில் பொது பொம்மைகள் செய்யப்படுகின்றன.
கும்பகோணத்திலும் களிமண் பொம்மைகள் செய்யப் படுகின்றன.
மதுரையில்...
மதுரை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் செட் பொம்மைகள் பிரபலம். சோட்டா பீம், சுட்சி ராஜி, டோலுடோலு, ஜக்கு பந்தர் காலியா போன்ற பொம்மைகளையும் தயாரித்து விற்கின்றனர். இவற்றிற்கு வட மாநிலங்களில் நல்ல டிமான்ட். இங்கு பாரம்பரியம், நவீன காலம் என இரு வகை பொம்மைகளும் செய்யப்படுகின்றன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி திருநீலகண்ட தெருவில் வசிக்கும் மண்பாண்டக் கலைஞர்களும் பொம்மை செய்கின்றனர். மகாபாரதம், ராமாயணக் கதாபாத்திரங்களை பொம்மை செய்து விற்கின்றனர். இவர்களுக்கு கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆர்டர்கள் குவிகின்றன.
தருமபுரியில்...:
தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டையில் பொம்மைக் கலைஞர்கள் அழகான பொம்மைகளைத் தயார் செய்து விற்கின்றனர். இவர்களுடைய பொம்மைகளுக்கும் கர்நாடகத்தில் நல்ல மதிப்பு உள்ளது. கும்பாபிஷேக செட், ராமர் கல்யாண செட், தசாவதாரம், மீனாட்சி கல்யாணம், ஸ்ரீரங்கம் செட், சந்திராயன்-3, நடராஜர்-சிவகாமி செட் என ஏகப்பட்ட செட் விற்பனைக்கு கிடைக்கும்.
பிற இடங்களில்...:
கடலூர், பண்ருட்டி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.
கர்நாடகாவில் சென்னபட்னா மர பொம்மைகளுக்கு பிரபலம். 'பளிச்' சென்ற நிறங்கள்தான் இதன் சிறப்பாகும். கர்நாடகாவில் கொலுவை 'கொம்ப கப்பா', 'பொம்மை கொலு' என அழைப்பர்.
ஆந்திரத்தில் மகா சங்கராந்தியின்போது கொலு வைக்கும் பழக்கம் உள்ளது. இதனை அங்கு 'சங்கராந்தி பொம்மல கொலுவு' என அழைப்பர். சில குஜராத்தி அந்தணர்கள் கோகுலாஷ்டமியின்போது கொலு வைப்பது உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.