
என் மகன், மகள் பள்ளியில் படிக்கின்றனர். சிறுவர்களாக இருப்பதால், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ளதாக எண்ணுகிறேன். காரணம் அவர்களுக்கு வருடத்தில் இருமுறையாவது கண் சிவந்து தண்ணீர்முட்டிக் கொண்டு உப்பிவிடும்.
கண்களைத் திறந்து பார்க்கவும், வெளிச்சத்தைக் காணவும் முடியாமல் கண்களில் பீளை கட்டிக் கொண்டு அவதியுறுவார்கள். வராமல் இருக்கவும், வந்ததைக் குணப்படுத்தவும் எளிய வழிமுறைகள் உள்ளதா?
-சுந்தரம், நாகப்பட்டினம்.
இதுபோன்ற நிலைகளில் பிள்ளைகள் காலையில் எழும்போது, இரைப்பைகள் ஒட்டி உலர்ந்திருக்கும். ஈரத் துணியினால் இரைப்பைகளை நனைத்து, உலர்ந்து போன பீளைகளை விடுவித்து கண்களைத் திறக்க வைப்பது பெரும்பாடாகிவிடும். கிராமப்புறங்களில் சுடச் சுட ஒரு கவளம் சோற்றில் சிறிது வெண்ணெயோ, நெய்யோ கூட்டி ஒரு சிறிய துணிக் கந்தையில் கட்டிக் கொண்டு அதனால் இக்கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.
கடுக்காயைத் தண்ணீர் விட்டு, சந்தனக் கல்லில் இழைத்து அதை இரவில் படுக்கும்போது கண்ணின் இரைப்பைகளின் மேலும் கண்ணைச் சுற்றியும் பற்றிட்டுப் பிள்ளைகளைத் தூங்கச் செய்வர். அவ்வாறே நாமக் கட்டியையும் குழைத்துப் பற்றிடுவதுமுண்டு. இதனால் எல்லாம் கண்களில் முட்டிக் கொண்டிருக்கும் நீர்வற்றிக் கண்ணின் வீக்கம் குறையும். பீளை ஒழுகுவதும் குறையும். மற்றுமுள்ள கோளாறுகள் படிப்படியாகக் குறையும்.
இவ்வகைக் கண் நோவில் கடுக்காய்த் தோலை வெண்ணெய்போல் அம்மியில் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு கிண்ணத்தில் இட்டு மூடி, தண்ணீர்த் தொட்டியில் பகலெல்லாம் மிதக்க விட்டிருக்க வேண்டும். இரவில் கண்நோய் உள்ளவர் படுத்த பிறகு கண்களை மூடச் சொல்லி - நன்றாக வெளுத்த, மெல்லிய ஒரு சீலையை கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடிய கண்களின் மேல் இட வேண்டும்.
இந்தச் சீலையின் மேல் முன் சொன்ன கடுக்காய் விழுதைக் கனமாகப் பரப்பிக் கண்ணின் குழி நிரம்பி புருவத்தின் உயரம் வரும்படியாகவும், கண் முழுவதும் பரவியதாகவும் வைத்து, அதன் மேல் இரண்டு மூன்று சீலைத் துண்டுகளை வைத்துக் கட்டி விடவும். இராப்பொழுது அப்படியே இருக்கவிடவும்.
ஜிலுஜிலுவென்று இதமாக இருக்கும். பிள்ளைகள் இதை விரும்பி ஏற்பர். மறுநாள் காலைக் கட்டை அவிழ்த்துவிட்டு, விழுதையும் நீக்கி, திரிபலா கஷாயத்தால் கண்ணின் இரைப்பைகள் முதலிய பகுதிகளைக் கழுவி சுத்தமாக்கிவிடவும். கண்ணிலுள்ள நீர் முட்டலும், வீக்கமும் சிவப்பு நிறமும் இதனால் நன்கு குறைந்துவிடும். வெளிச்சத்தையும் ஓரளவு பார்க்க முடியும். இரண்டொரு நாள் இதைச் செய்தால் முழுதும் குணமாகும்.
சோற்றுக் கற்றாழையைச் சுமார் இரண்டு அங்குல நீளம் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதன் அகலம் ஏறத்தாழ கண்ணின் அளவுக்குச் சரியாக இருக்கும். இந்த இரண்டங்குலத் துண்டை நீளவாக்கில் இரண்டாகக் கத்தியில் பிளந்து கொள்ளவும்.
வெளிப்புறத்தில் கற்றாழையின் தோல் இருக்கும். உட்புறத்தில் அதன் சோறு இருக்கும். மேல் குறிப்பிட்டதுபோல், கண்ணின் மேல் சீலையை இநட்டு அச்சீலையின் மேல் கற்றாழையின் சோறுள்ள பகுதி இருக்குமாறு பொருத்தி வைக்கவும். பிறகு முன் சொன்னதுபோலவே சீலையால் மூடி, கட்டுகட்டி விடவும்.
இதைக் கட்டிக் கொண்டவருக்குச் சிறிது நேரத்திலேயே நெஞ்சில் சிறிது கசப்பு ருசி தோன்றும். ஆனால் அவர் விரைவில் தூங்கிவிடுவார். கற்றாழையை நறுக்கியவர் கையிலுள்ள கசப்பு எளிதில் போகாது. அக்கையால் தொட்டதெல்லாம் கசக்கும். ஆனால் என்ன? இதையும் ஒருவர் செய்துதானே ஆக வேண்டும்.
மறுநாள் காலையில் கட்டை அவிழ்த்து முகத்தையும், கண்ணையும் அலம்பிச் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். கடுக்காய்ப் பற்றினால் 4 நாட்களில் கிடைக்கும் பலன் கற்றாழையினால் ஒரே நாளில் கிடைக்கும். முக்கியமாகச் சிவப்பு நிறம் மாறுவதும் கண் கூச்சம் மாறுவதும் வியப்பைத் தரும். நல்ல மருந்து. செலவில்லாத மருந்து. நல்ல குணத்தையும் தரும் மருந்து.
கண் நோய் வராமல் தடுப்பதில் பசுநெய் சிறந்தது. கண்களுக்கு பலஹீனம் ஏற்படாமல் முழுத்திறமையுடன் செயலாற்றக் கூடிய பசு நெய்யை உருக்கி, சூடான சாதத்துடன் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளவும். அரை டீ ஸ்பூன் (சுமார் 3 கிராம்) திரிபலா சூரணத்தில் சில துளிகள் தேனும், நிரம்ப உருக்கிய பசு நெய் அல்லது திரிபலாகிருதம் எனும் மூலிகை நெய் மருந்தைக் கூட்டிக் குழைத்து நக்கிச் சாப்பிடும் வகையிலுள்ள போது, தினந்தோறும் இரவில் படுக்கும் முன்பு சாப்பிட்டு வருவது கண்களுக்குப் பலத்தைக் கொடுக்கும்.
தேனும் நெய்யும் சமமாக இருக்கக் கூடாது. மேலும், கண்ணுக்காக, உள்ளுக்குச் சாப்பிடும் மருந்துகளில் நெய் சிறந்தது என்பதால், நெய்யின் அளவு கூடுதலாக இருக்க வேண்டும். பலவித கண் உபாதைகள் உள்ளவரும் இதைச் சாப்பிட்டு வரலாம். தலைக்கு 'திரிபலாதிதைலம்' தேய்த்துக் குளிப்பதாலும் கண் நரம்புகளை வலுப்படுத்தி, கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.