பேல் பூரி

ஏற்றம்- முன்னேற்றம் எதையும் கல்வியே மாற்றும்
பேல் பூரி
Published on
Updated on
1 min read

கண்டது

(சென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா தெருவில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகையில் எழுதப்பட்டிருந்தது)

'ஏற்றம்- முன்னேற்றம் எதையும் கல்வியே மாற்றும்.'

-நாகலட்சுமி விசாகன், கிழக்கு தாம்பரம்.

(திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஓடும் ஆட்டோ ஒன்றில்)

'சந்தேகம் தீயாய் மூளுமிடத்தில் சந்தோஷம் சாம்பலாகிவிடும்.'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சுவாமியின் பெயர்)

'சார்ந்தாரை காத்த சுவாமி'

-சங்கீத.சரவணன், மயிலாடுதுறை.

கேட்டது

(திருச்சி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியில் இருவர்...)

'வரும் தேர்தலில் யார் ஜெயிப்பாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?'

'மக்கள்தான்...'

'என்ன சொல்றீங்க?'

'எல்லா 'ரோடு ஷோ'வுக்கும் கூட்டம் கூட்டமாய் வர்றாங்களே!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(மதுரையில் நகரப் பேருந்தில் இரு மாணவிகள்...)

'என்னடி... காலேஜில் சேர்ந்து ஒன்றரை வருஷமாச்சு... எவனாவது செட் ஆனானா இல்லையா?'

'உன் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கலைடி. இன்னும் என் மொபைலுக்கு என் காசில்தான் ரீசார்ஜ் செஞ்சிட்டிருக்கேன்.'

-பெ.நா.மாறன், மதுரை.

(திருநெல்வேலியில் நகரப் பேருந்து ஒன்றில் இருவர் பேசியது...)

'இந்த பஸ் எந்த ஊருக்குப் போவுது?'

'போற ஊருக்குப் போவுது. நீ எந்த ஊருக்குப் போறே?'

'நானும் போற ஊருக்குத்தான் போறேன்...!'

-ஏ.ஜி.முகமது தவ்பீக், மேலப்பாளையம்.

யோசிக்கிறாங்கப்பா!

சுறுசுறுப்பானவர்கள் எப்போதும் நேரத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

மற்றவர்கள் காரணத்தை அறிகிறார்கள்.

-குலசை நஜ்முதீன், செங்கல்பட்டு.

மைக்ரோ கதை

புஷ்பா கண்களில் கண்ணீரோடு வர கணவர் கோவிந்தன், 'ஏம்மா, இப்போ அம்மா ஊருக்குப் போறதாலே அழறீயா?' என்றான். அதற்கு புஷ்பா, 'ஆமாம். உங்க அம்மா இன்னிக்கு ஊருக்குப் போறேன்னு சொன்னாங்க. இப்போ வந்து அடுத்த மாசம் போறேன்னு சொன்னா அழுகை வராமல், சிரிப்பா வரும்...?' என்றாள்.

இதைக் கேட்ட கோவிந்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான்.

-மரகதம் சிம்ஹன், திருவல்லிக்கேணி.

எஸ்எம்எஸ்

உலகில் சிறந்த ஜோடி சிரிப்பும், கண்ணீரும்தான்!

-த.நாகராஜன், சிவகாசி.

அப்படீங்களா!

தொலைபேசி அழைப்புகளில் முறைகேடு செய்து பண மோசடி செய்து வந்த நிலையில், வாட்ஸ் ஆப், டெலிகிராம் ஆகியவற்றை மோசடியாளர்கள் பெரிய அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தென் கிழக்கு ஆசியாவில் இருந்து செயல்

படும் இந்த மோசடி கும்பல்கள் கிரிப்டோ முதலீடு, போலி பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு போலி விளம்பரத் திட்டங்களை செய்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றன. நிகழாண்டில் இதுவரையில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் சுமார் 70 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மோசடிகளுக்கு மோசடியாளர்கள் செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்தி அசல் போன்று காண்பிக்கின்றனர்.

இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வாட்ஸ்ஆப் இரு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. நமது தொலைபேசியில் சேமிக்கப்பட்ட எண்களில் இல்லாத வெளி எண்ணில் இருந்து உங்களை குழுவில் இணைக்க முயன்றால், எச்சரிக்கை தகவலை வாட்ஸ்ஆப் அனுப்பிவிடும்.

இதைக் கண்ட உடன் அந்த வாட்ஸ்ஆப் குழுவில் சேராமல் விலகி விட வேண்டும். இதேபோல், சேமிப்பு எண்ணில் இல்லாத தனிபர் தகவல் அனுப்பினாலும் எச்சரிக்கை தகவல் வரும். அதற்குள் தகவலை அனுப்பிய நபருக்கு பதில் அளிக்க வேண்டுமா வேண்டாமா என்று யோசித்து முடிவு எடுக்க இது உதவும்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com