காலை எழுந்தவுடன் பல் துலக்கியதும் அடுத்த வேலை காபி அல்லது டீ குடிப்பதுதான் நமது வழக்கம். மாட்டுப் பாலில் காபி, டீ குடிப்பவர்கள்தான் பெரும்பாலானோர். மகாத்மா காந்தி ஆட்டுப் பால் பருகினார். ராஜஸ்தானில் ஒட்டகப் பால் பிரபலம். சென்னையை அடுத்த குன்றத்தூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், ராஜஸ்தானிலிருந்து ஒட்டகப் பாலை வரவழைத்து வியாபாரம் செய்கிறார்.
'தமிழ்நாட்டில் ஒட்டகப் பாலுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?' என்று அவரிடம் பேசியபோது:
'நான் ஒரு யோகா, இயற்கை மருத்துவர். சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக ஒட்டகப் பால் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் பயன்களை அறிந்தேன்.
ஒட்டகத்தின் பால் சத்தானது. அதில் மருத்துவக் குணங்கள் அதிகமாக உள்ளன. ஒட்டகம் விரும்பிச் சாப்பிடுவது வேப்பிலைதான். ஒட்டகப் பாலை மனிதர்கள் குடிக்கலாம். ஒட்டகப் பால் இனிப்பாக இல்லாமல், சிறிது உப்புச் சுவையோடு இருக்கும். லாக்டோஸில் அளவு குறைவாக இருப்பதால், கெட்டியான தயிர் ஒட்டகப் பாலில் கிடைக்காது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம் போன்ற மூளை வளர்ச்சிக் குன்றியவர்கள் ஒட்டகப் பால் அருந்தலாம்.
ஒட்டகப் பாலில் காபி, டீ, பாதாம் பால் ஆகியன தயாரித்துப் பருகலாம். ரோஸ் மில்க், குல்ஃபி போன்றவையும் தயாரிக்கலாம். கரோனா காலத்துக்கு முன்பாக நான் ராஜஸ்தான் சென்று சில ஒட்டகங்களை வாங்கிவந்து, இங்கேயே ஒட்டகப் பால் வியாபாரம் செய்தேன். அப்போது ஒட்டகங்கள் சில இறந்தன. மீதி ஒட்டகங்களை விற்றுவிட்டேன். மீண்டும் எப்படியாவது ஒட்டகப்பாலை விற்பனை செய்ய முடிவு செய்தேன்.
ராஜஸ்தானில் பிக்கானீர் பகுதியில்தான் ஒட்டகங்கள் மிகவும் அதிகம். அங்கேதான் மத்திய அரசின் ஒட்டக ஆராய்ச்சி மையமும் செயல்படுகிறது. எனவே நான் அங்குச் சென்று, சென்னைக்கு ஒட்டகப் பாலை வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்தேன். ராஜஸ்தானில் இருந்து குளிர்சாதன வசதியுடைய ரயில் பெட்டிகளில் ஒட்டகப் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அவசரமாகத் தேவைப்பட்டால் விமானத்திலும் அனுப்பி வைக்கிறார்கள். ஆரம்பத்தில் மாதத்துக்கு 50 லிட்டர் என்று இருந்த விற்பனை தற்போது மாதத்துக்கு 250 லிட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் ஒட்டகப் பால் ரூ.450-க்கு விற்பனை செய்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, குன்றத்தூரில் 'வா ஒட்டகப் பால் நிலையம்' என்ற பெயரில் கடை நடத்தி வருகிறேன். ஒட்டகப் பாலில் தயாரிக்கப்பட்ட தேநீரை அறிமுகச் சலுகையாக, மிகவும் மலிவாக இருபது ரூபாய் விலையில் அளித்துவருகிறேன். சென்னையில் கே.கே.
நகரில் மொத்த விற்பனை நிலையம் ஒன்றும் நடத்தி வருகிறேன். மதுரை, சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட ஊர்களில் இருப்போர் தேவைக்கேற்ப ஒட்டகப் பால் விநியோகம் செய்து வருகிறேன்.
எதிர்காலத்தில் இங்கேயே ஒரு ஒட்டகப் பண்ணையை அமைத்து, ஒட்டகப் பால், பால் பொருள்கள் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்' என்கிறார் ஸ்ரீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.