
அலுவலகத்திலிருந்து வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த எனக்கு நல்ல பசி எடுத்தது. நான் நுழைந்தது கந்தன் பவனில். வேக, வேகமாகச் சென்று ஒரு டேபிளில் அமர்ந்து நிமிர்ந்தபோது என் எதிரே தயாராக ஒரு வெயிட்டர்.
'என்ன சாப்பிடறீங்க, சார்?'
'என்ன இருக்குப்பா?'
'இட்லி, வடை, தோசை, மசால் தோசை, பூரி...' என்று வெயிட்டரின் ஒப்பிக்கும் திறனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், முழுவதுமாகக் கேட்டேன். பின்னர், அமைதியாக, 'ஒரு ப்ளேட் இட்லி கொண்டு வாப்பா' என்று சொன்னபோது, இளக்காரமான எண்ணம் என் மீது வந்திருக்க வேண்டும்.
இதை முதலிலேயே சொல்லி இருந்தால் வாய் வலிக்க, எல்லா அயிட்டங்களின் பெயரையும் அவன் ஒப்பித்திருக்க வேண்டாம்தான். ஆனால் ஒன்றும் செய்ய முடியாமல் என்னை ஒரு சூடான பார்வை பார்த்துவிட்டு இட்லி கொண்டு வரச் சென்றான்.
அலுவலக விஷயமாக நான் வெளியே வந்திருந்த
தனால் இன்னும் போக வேண்டிய இடங்களின் பட்டியலை மனத் திரையில் பதிவு செய்து கொண்டு அமர்ந்திருந்தேன்.
வெயிட்டருக்கு என் மேல் இருந்த கோபம் தணிய வெகுநேரம் பிடித்ததோ என்னவோ... பத்து நிமிடமாகியும் இட்லி ப்ளேட் வரவில்லை. அதை என் பசி எனக்கு நினைவுபடுத்த ஆரம்பித்தபோதுதான் பொறுமை கசப்பானது. ஒரு ப்ளேட் இட்லி கொண்டு வந்து வைத்தான் அந்த வெயிட்டர். இட்லி, சாம்பார் மிகவும் சூடாக இருக்க, அவற்றை என் பசி வேக, வேகமாக சாப்பிட ஆரம்பித்தது.
'இன்னொரு ப்ளேட் இட்லி கொண்டு வாப்பா' என்று நான் சொல்ல, 'இதை முதல்லேயே சேர்த்து சொல்லக் கூடாதா சார்?' என்று அவன் தன் பார்வையால் என்னை கேள்வி கேட்டவாறே, கிச்சனை நோக்கிச் சென்றான். ஒரு இட்லியை வாய் வழியாக வயிற்றுக்கு அனுப்பி முடித்துவிட்டு அடுத்த இட்லியையும் அதே போலச் செய்ய எத்தனித்தபடியே தலை நிமிர்ந்த போதுதான் என் டேபிளின் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஒரு பெண்மணி.
அவளுடன் ஒரு சிறுவன். சிறுவனுக்கு மிகவும் பசி போலும். வந்து அமர்ந்த உடனே சர்வரை அழைத்தாள். 'பையனுக்கு ஒரு மசால்தோசை கொண்டு வாங்க' என்றவள் எதிரே அமர்ந்திருந்த என்னைப் பார்த்தாள்.
இட்லி உண்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த என் மனது அவள் வந்து உட்கார்ந்ததும் திடீரென்று அவள் யார் என்பதில் முழுவதும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. அவளை நிச்சயம் எங்கேயோ இதற்கு முன் பார்த்திருக்கிறேன். எங்கு என்றுதான் நினைவுக்கு வர மறுக்கிறது. என் மூளையின் கடைசி செல்லுக்கும்கூட சென்று கேட்டுவிட்டேன். நான் இவ்வாறு தீவிரமாக யோசிக்கும்போது, அவளும் என்னைப் பார்த்த உடனே ஏதோ யோசிக்கத் தொடங்கியது போல எனக்குத் தோன்றியது. 'என் மூளைக்கு வேலை கொடுத்து சிறிதும் உபயோகம் இல்லை' என முடிவெடுத்தேன். அவள் யார் என்று தெரிந்து கொள்ள என் வாயைத் துணைக்கு அழைத்தேன்.
'எக்ஸ்க்யூஸ்மீ... நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா ஒண்ணு கேட்கலாமா? உங்களை எங்கேயோ பார்த்திருக்கற மாதிரி இருக்கே. நீங்க வந்து உட்கார்ந்ததுலேயிருந்து என் மூளையைப் போட்டுக் கசக்கிப் பிழிஞ்சும் நினைவுக்கு வர மாட்டேங்குது. எங்கேன்னு தெரியலை. நீங்க?' என்று கேட்டுவிட்டேன்.
நான் இப்படிக் கேட்டதுதான் தாமதம், அவள் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. 'நீங்க குமரன்தானே. உங்க அம்மா பெயர் சீதாலஷ்மி. அப்பா பெயர் சீனிவாசன்...' என்று அவள் உடனுக்குடன் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
நான் அவளை மீண்டும் கேட்டே விட்டேன். என் கேள்விக்கு அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. உடன் வந்த பையன் டிஃபன் சாப்பிடுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அவள் அமைதியாக தலையைக் குனிந்து உட்கார்ந்திருந்தாள். நான் விடவில்லை. எப்படி விட முடியும்?
'ஏங்க, நான் கேட்டதுக்கு நீங்கள் பதில் எதுவும் சொல்லவில்லையே. என் பெயர், என் அம்மா அப்பா பெயர் எல்லாம் இவ்வளவு கரெக்டா சொல்றீங்க? நீங்க யாருங்க? தெரிஞ்சுக்கலேன்னா என் தலைவெடிச்சுடும். சொல்லுங்க உடனே?' என்று கேட்ட என் மனது, அவள் சொல்லப் போகும் பதிலுக்காகத் துடிதுடித்தது.
என்னை நிமிர்ந்து பார்த்த அவள் கொஞ்சம் உணர்ச்சி வசத்தில் இருந்ததுபோன்று தோன்றியது. 'என்னைத் தெரியலையா? உங்களைப் பார்த்த அடுத்த விநாடியே நீங்க யாருன்னு பட்டுன்னு தெரிஞ்சுண்டுட்டேன். உங்களை எப்படி என்னால மறக்க முடியும்?'
'புதிர் போடாம சொல்லுங்க உடனே' என்ற எனது ஆவல் அவசரப்பட்டது.
'நீங்க என்னைப் பெண் பார்க்க வந்தீங்க! அப்ப நாங்க இருந்தது ஆலந்தூர்ல, நடேசன் தெருவில, காம்பெளண்ட் முழுக்க, தென்னை மரம், மாமரம்னு நிறைஞ்சிருக்கும். இன்டிவிஜூவல் ஹவுஸ்...' என்று அவள் சொல்ல, எனக்கு உடனே பட்டென்று ஞாபகம் வந்தது. இப்பொழுது மிகவும் தெளிவாக, ஏனென்றால் எங்கள் எல்லாருக்கும் அவர்கள் வீட்டுத் தென்னை மரத்தில் இருந்து பறித்த அருமையான இளநீர் கொடுத்தார்களே. அதன் சுவை இப்பொழுதும் என் நாவில் இருக்கிறது. ஆனால் கொடுத்தவர்களைத்தான் மறந்து விட்டிருந்தேன்.
நாங்கள் அவர்கள் வீட்டுக்கு அவளைப் பெண் பார்க்கச் சென்றபோது, ஒரு விஷயம் என்னவோ தெளிவாகக் கவனித்தேன். என் அம்மா, அப்பா உள்பட யார் முகத்திலும் உற்சாகம் துளியும் காணப்படவில்லை. அமைதியாக இருந்தனர். 'இந்த அனிச்சைச் செயல்' என்று சொல்வார்களே அதன் வரையறையை செயல்முறை வடிவில் அவர்கள் குடும்பத்தவர்கள் அனைவர் முகங்களும் தெளிவாகச் செய்து காட்டிக் கொண்டிருந்தன. அது அவர்கள் வீட்டுப் பெண்ணை ஒரு குடும்பம் பெண் பார்க்க வந்திருப்பதனால் வரும் பதற்றம் என்பது போல் தெரியவில்லை. எங்களை வரவேற்பதில் இருந்து ஆரம்பித்து எல்லாவற்றிலும் ஒருவித இயந்திரத் தனம் மட்டுமே காணப்பட்டது.
'பெண்ணை வரச் சொல்லுங்க' என் அம்மா சொல்ல, வீட்டின் உள்அறையில் இருந்து நாணம் என்ற ஒன்று முகத்தில் துளியும் தென்படாமல் எங்கள் முன்னால் ப்ரத்யட்சமானது இப்பொழுது என் முன்னே இந்த ஓட்டலில் என் மேஜையில் எதிர் இருக்கையில் பையனுடன் அமர்ந்திருக்கும் இதே மங்கைதான். அருணா.
பொதுவாக, பையன் வீட்டார் வந்தால் பெண் அவர்கள் முன்னால் வந்து அமரும்போது முகம் முழுக்க நாணம் நிறைந்திருக்கும். அவள் முகம் தரையையே பார்க்கும். ஆனால், அருணா விஷயத்தில், ஏதோ எல்.ஐ.சி. ஏஜென்ட் முன்பு பாலிஸி எடுக்க தன் விவரங்களைச் சொல்ல வந்தவள் போல் வந்து நின்றுகொண்டாள்.
'என்ன இந்தப் பெண், முகத்துல நாணம்கறது துளியும் காணுமே' என்று என் அம்மா என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட என் மனசு, 'அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை' என உடனே எனக்குச் சொன்னது.
காரணம் என்னவென்றால் எனக்கு அருணாவை துளியும் பிடிக்கவில்லை. அருணாவிடம் நான் பார்த்த மூன்று விஷயங்கள். முதலாவது அவள் உடல்நிறம். இரண்டாவது அவள் இடது கால் சற்று தாங்கித் தாங்கி நடந்து வந்தாள். மூன்றாவது உயரம். 'நான் அவளைப் பிடித்திருக்கிறது எனச் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை' என முடிவு செய்தேன். எனது பெற்றோருக்கும் அருணாவை துளியும் பிடிக்கவில்லை என்றே நினைத்தேன்.
இன்னொரு அறையில் இருந்து ஒரு பெண், அருணாவின் ஜாடையிலேயே இன்னும் கொஞ்சம் சிறியவளாக வந்து எங்கள் அறையில் ஓர் ஓரமாக அவள் அப்பா, அம்மாவின் அருகில் நின்றாள். அடுத்த விநாடி என் மனதுக்கு மிக அருகில் வந்து நின்றுவிட்டாள். 'அருணாவின் தங்கை' என நான் சந்தேகப்பட, அந்தப் பெண் அருணாவின் தங்கைதான் அகிலா.
அகிலாவோ நல்ல சிவப்பு. காந்தக் கண்கள். வசீகரமான முகம். நான் அவளையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு, அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு விட்டாள்.
'டேய் குமரா, என்னடா சொல்றே நீ' என்று அம்மா என்னைக் கேட்க, 'என்ன சொல்லணும்மா?' என்று கேட்டேன். 'அருணாவைப் பிடிச்சிருக்காடா?' என்று கேட்டபோது அம்மாவின் முகத்தில் தெம்பே இல்லை. உடனே அம்மாவோ, அப்பாவைப் பார்க்க இருவரும் சில நொடிகள் தங்களுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு நிமிடங்கள் கழித்து அப்பா வாயைத் திறந்தார்.
'சார், வந்து அது என்னன்னா... நாங்க எங்க வீட்டுக்குப் போய் கலந்து ஆலோசிச்சு எங்களுக்குள்ள பேசி ஒரு முடிவெடுத்து உங்களுக்குத் தெரியப்படுத்தறோம். என்ன சரியா?'
அப்பாவின் இந்த வார்த்தைகளுக்கு அந்த அறையில் எந்தப் பதிலும் கிடைத்ததாக எனக்கு நினைவில்லை. அருணாவின் பெற்றோரது முகங்கள், என் அப்பாவின் இந்த வார்த்தைகளுக்குப் பின் தரையைப் பார்த்து அமைதியாக இருக்க ஆரம்பித்துவிட்டன.
நாங்கள் மெதுமெதுவாக எழுந்து அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பியபோது, அகிலா என் மனதை விடாப்பிடியாக முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டிருந்தாள். 'அகிலாவை நான் கல்யாணம் பண்ணிக்க இப்பொழுதே ரெடி என்பது மட்டும் இல்லை. அவள் என் மனைவியாக வந்துவிட வேண்டுமே? இதை அப்பா அம்மாவிடம் எப்படிச் சொல்வது? எங்கள் மூவருக்கும் அருணாவை என்னவோ பிடிக்கவில்லை. அதை சொல்லும் வேலையை அப்பா அம்மா எனக்கு வைக்கவில்லை. ஆனால் அகிலாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசை' என்ற விஷயத்தை எப்படிச் சொல்வது?
'டேய் குமரா... அருணாவோட தங்கை அகிலாவை பார்த்தே இல்லை. எனக்கும், உன் அப்பாவுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சுடா! எவ்வளவு லட்சணமா இருக்கா? நீயும் அகிலாவைப் பார்த்தே இல்ல. உனக்கு அவளைப் பிடிச்சிருந்ததாடா?' என்று அம்மா என்னைக் கேட்டார். மனதினில் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி வர, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், 'ஏன் கேட்கறேம்மா?' என்று நல்ல பிள்ளையைப் போல அமைதியாகக் கேட்டேன்.
'என்னடா இது... எதுக்குடா கேட்போம். அகிலாவைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமாடா?' என்று அம்மா கேட்க, திரண்டு வரும் அழுகையை அடக்குவதைவிட, அளவுக்கு அதிகமாக மனதில் பொங்கி வரும் சந்தோஷத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்தேன்.
அம்மாவுக்கு நன்கு விளங்கும் விதமாக, 'எனக்கு பரிபூரண சம்மதம்' என பலமாகத் தலையாட்டிவிட்டு அதை அம்மா உணர்ந்து கொண்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்டுவிட்டு சந்தோஷமாய் பெருமூச்சு விட்டேன்.
'உங்கள் இரண்டாவது பெண் அகிலாவை எங்கள் பையனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறோம். தயாராக இருக்கிறோம்' என என் அப்பா தகவல் அனுப்பினார். 'தங்கள் முடிவுக்கு நாங்கள் சம்மதிக்கிறோம். திருமணம் எப்போது நடத்தலாம்?' என்ற அவர்களின் பதில் செய்திக்காக என் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.
நான் இரண்டாம் இட்லியைத் தொடக் கூட இல்லை. வெயிட்டர் அடுத்த ப்ளேட் இட்லியைக் கொண்டு வைத்துவிட்டு அருணாவைப் பார்த்து, 'இன்னும் என்ன வேண்டும்மா?' எனக் கேட்க, அந்தச் சிறுவன் 'ஐஸ் க்ரீம்' என்று சொல்ல, அதைக் கொண்டு வர உள்ளே சென்றார். என் கண்கள் அருணாவை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தயங்கின. எதிரெதிர் இருக்கையில் அமர்ந்துவிட்டோம். நான் உட்கார்ந்திருந்த டேபிளில் எதிர் இருக்கையில் அவள் வந்து அமர்ந்துவிட்டாள். இப்பொழுது என்ன செய்ய முடியும்?
'அருணா.. .இப்ப எப்படி இருக்கீங்க?'
'ம்... பரவாயில்லையே... என் பெயரை ஞாபகம் வைச்சிருக்கீங்களே...'
வெயிட்டர் கொண்டு வந்து வைத்த ஐஸ் க்ரீமை சிறுவன் ஆசையாகச் சாப்பிடத் தொடங்கினான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதயத் துடிப்பு சற்றே அதிகமாவதாக எனக்குப் பட்டது. அது ஏதோ குற்ற உணர்வின் காரணத்தாலோ, 'அது வந்து அருணா, நான் உங்களைப் பெண் பார்த்துட்டுப் போய், உங்க தங்கை அகிலாவை... சாரி உங்க மனதைப் புண்படுத்தி... ரியலி சாரி...' என்று என் உடம்பில் வியர்வை வழிய, நான் தயங்கித் தயங்கிச் சொல்லி முடிக்க, அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. மெளனம் வளரத் தொடங்கியது.
அந்த மெளனத்தைத் தாங்க முடியாமல் அதை உடைக்கும் விதமாக, 'உங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணறார்? உங்க பையன் என்ன படிக்கறான்? என்ன பெயர்?' என்று கேட்டேன், என் குரலில் உற்சாகத்தைக் கலக்க முயற்சித்தபடி. நான் இப்படிக் கேட்டதும் அருணா என்னைப் பார்த்தாள். அவள் முகத்தில் அமைதி பரவியது. இன்னும் சொல்லப் போனால் அமைதியின் வடிவமாகவே ஆனது அவள் முகம்.
'சார்... ஹஸ்பண்டா... எனக்கா? எனக்குக் கல்யாணமே ஆகலையே?' என்று அருணா சொல்ல, நான் திடுக்கிட்டேன்.
ஓ, அடக் கடவுளே. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் என்ன நினைப்பது என்றே கூட தெரியவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகாததற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனே. என் முகத்தில் வியர்வை வழிந்தோடியது. துடைக்க முயன்று தோற்றேன்.
'அப்ப இந்தப் பையன்?'
'நீங்க கல்யாணம் பண்ணிக்கத் தயாரான என் தங்கை அகிலாவோட பையன் ரோஹித்...' என்று அவள் சொன்ன வார்த்தைகள் என் மனதைத் துளைத்தன. இதயம் வலித்தது.
'ஏன் அதுக்கு அப்புறம் உங்களைப் பெண் பார்க்க... யாரும்?'
'ம்... உங்களுக்கு முன்னாடியே என்னை ஒரு இருபது, இருபத்தைஞ்சு பேர் வந்து பெண் பார்த்துட்டுப் போனாங்க. கால் ஊனம், நிறம் கம்பி, உயரம் குறைவு என்று சொல்லிட்டாங்க. என் தங்கை கொள்ளை அழகு. என்னைப் பெண் பார்க்க வந்தவங்க எல்லாருமே என்னைக் கல்யாணம் பண்ணிக்க முன் வரலை. அந்த இருபத்தைஞ்சு பேர்ல பாதியாவது என் தங்கையைக்
கல்யாணம் பண்ணிக்க ரெடின்னு சொன்னாங்க. நீங்களும் அந்த வகை...' என்று அருணா சொல்ல, என் குற்ற உணர்வு என் இதயத்தைத் துளைத்து சுக்குநூறாக்கி விடும் போலத் தோன்றியது.
'வந்து... ஐ ஆம். . .சாரி...' என்று தலை குனிந்திருந்த
படியே சொன்னேன். அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
'ஆனா ஒண்ணு, நீங்க ஸ்பெஷல் குமரன்' என்று லேசான இழையோடிய புன்னகை தோய்ந்த முகத்தோடு சொன்னாள் அருணா.
'ஸ்பெஷலா... நானா... என்ன சொல்றீங்க?'
'என்னை வந்து பெண் பார்த்த கடைசி பையன் நீங்கள்தான்.'
அவள் சொன்னவுடன் ஒரு நிமிடம் பிடித்தது என்னைச் சுதாரித்துக் கொள்வதற்கு. எதுவும் பேசுவதற்குக் கூட தைரியம் வரவில்லை.
'வெறுத்துப் போச்சு குமரன். எத்தனை தடவை அலங்காரம் செஞ்சுட்டு வந்து உட்கார்றது? வர்ற பையன் எல்லாம் என்னைப் பிடிக்கலைன்னு சொல்றது? எனக்கு ரொம்பன்னா ரொம்பவே வெறுத்துப் போச்சு. சில பெண்களை இதைவிட பல மடங்கு பெண் பார்த்துட்டுப் பிடிக்கலைன்னு சொல்லிட்டுப் போன கதையெல்லாம் இருக்கலாம்தான். ஆனா என் விஷயத்துல வேற மாதிரி. நான் ரொம்ப சுமாரா இருந்து என் தங்கை ரொம்ப அழகா இருந்தது. என்னைப் பார்க்க வர்றவன் எல்லாம் அவளைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறது. எனக்குக் கல்யாணம் நடக்கும்கற நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமா என் மனத்தை விட்டுப் போக ஆரம்பிச்சுடுத்து குமரன்.
நீங்க அந்த மாதிரி பதில் போட்டதும் என் அப்பா, அம்மாகிட்ட உங்களுக்கு அகிலாவையே கல்யாணம் பண்ணி வைச்சுடுங்கன்னு சொன்னேன். அவங்க ஏற்கவில்லை. அவங்க ஒத்துண்டிருந்தா நீங்க என் தங்கையோட கணவர் ஆயிருக்கலாம். அதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமே இல்லாமப் போச்சு. வெறுத்துப் போறதுக்கு ஒரு அளவு இல்லையா குமரன். அகிலாவுக்கு உடனே மாப்பிளை தேட ஆரம்பிச்சாங்க. அவளைப் பார்த்த முதல் வரனே டபுள் ஓ.கே. சொல்ல உடனே அகிலாவுக்குக் கல்யாணம் ஆச்சு. இதோ இவன் அவள் பையன்தான். ரோஹித். ஆறாம் க்ளாஸ் படிக்கறான்' என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியானாள்.
ஆனால் அவள் மனது என்னவோ ஒரு உணர்ச்சி நிலையில் இருந்ததை என்னால் நன்றாக உணர முடிந்தது.
'உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா குமரன்? மனைவி, குழந்தைகள் எல்லாரும் செளக்கியமா?'
'கல்யாணம் ஆயிடுச்சு அருணா. ஒரு பெண், ஒரு பையன்' என்று சொன்ன என் நெஞ்சு கனத்திருந்தது. நானே தொடர்ந்து, 'எல்லாம் சரிதான் அருணா. ஆனா உங்க தங்கை அகிலாவுக்குக் கல்யாணமானவுடன் நீங்கள் கல்யாணம் பண்ணின்டு இருந்திருக்கலாமே?' என்றபோது இடைமறித்தாள் அருணா.
'அப்புறம் என்னைப் பெண் பார்க்க வர்றவங்க எல்லாம் தங்கைக்குக் கல்யாணம் பண்ணினப்புறம் அக்காவுக்குப் பண்ணறீங்களே ஏன் அது இதுன்னு வேற ஏதாவது புதுசா கேட்டு டார்ச்சர் பண்ணனுமா? போங்க குமரன். வெறுத்துப் போச்சுன்னு சொன்னேனே' என்று சொன்ன அருணாவின் குரலில் அமைதியான சோகம் இழையோடியது.
'உங்க இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க அருணா' என்று நான் மன்னிப்புக் கேட்டேன்.
புன்னகைத்தாள் அருணா.
'எதுக்குங்க சாரி. நீங்க என்ன தப்புப் பண்ணினீங்க? நீங்க என்னைப் பார்த்தீங்க... பிடிக்கலை. அதைச் சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கு. சமுதாயம் வைத்த சடங்குதானே பெண் பார்க்கறது. மத்தபடி நான் ரொம்ப சந்தோஷமாய் இருக்கேன் குமரன். கல்யாணம் பண்ணின்டாதான் வாழ்க்கைன்னா அப்ப கல்யாணம் பண்ணிக்காதவங்க எல்லாம் வாழவே இல்லையா என்ன? என்ன, கணவன், குழந்தைகள்னு இருந்தா வாழ்க்கையில தானா ஒரு பிடிப்பு, லட்சியம் வந்துடும். இதோ ரோஹித் எப்பவும் பெரியம்மா, பெரியம்மான்னு என்கிட்டேயேதான் ஒட்டிப்பான்.
வேலைக்குப் போயிட்டு வர நேரம் தவிர இவனைப் பார்த்துக்கறதுக்கே நேரம் சரியா இருக்கு. வாழ்க்கை ஓடிண்டு இருக்கு குமரன். நான் பிறக்கும்போதே நிறம் கம்மியாகப் பிறந்ததுக்கு யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. அதே மாதிரி ஒரு சின்ன விபத்துல என் இடது கால் இப்படி ஆனதுக்கும் யாரைக் குற்றம் சொல்ல முடியும்? இதுதான் என் வாழ்க்கை. இருக்கறதைக் கொண்டு திருப்தி அடையணும். நாம மறுபடியும் சந்திச்சதே ஒரு புதுமையான அனுபவமா இருக்கு எனக்கு.
நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களைப் பார்த்தது என் மனசுல சாதாரணமா பார்த்தா ஒரு வேதனையைத்தான் கிளப்பி விட்டிருக்கணும். ஆனா உண்மையைச் சொல்லணும்னா ஒரு இனம் புரியாத அமைதியை என் மனசுல உண்டு பண்ணி இருக்கு குமரன். நான் உண்மையைத்தான் சொல்றேன். இவன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிடணும்னு அடம்பிடிச்சான்.
அதுதான் கூட்டிண்டு வந்தேன். சாப்பிட்டுட்டான். நான் வரேன். அப்புறம் எப்பொழுதாவது நாம சந்திக்கணும்னு எழுதி இருந்தா சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு ரோஹித்தை அழைத்தபடியே மெதுவாக ஓட்டலை விட்டு வெளியே சென்று, தெருவில் இறங்கி இடது பக்கம் திரும்பி என் பார்வையை விட்டு மறைந்தாள்.
என் டேபிளில் அந்த முதல் ப்ளேட்டின் இரண்டாவது இட்லி முதல் இரண்டாவது ப்ளேட்டின் இரண்டாவது இட்லி வரை அப்படியே இருந்தன. சில நிமிடங்களில் அவை என் வயிற்றில் சென்று அழிந்து விடும். ஆனால் என் மனதில் அருணா கிளறி விட்ட பழைய நினைவுகளும் வேதனையும் அப்படியே இருந்தன. அப்படியேதான் இருக்கும். நிரந்தரமாய்... அழியவே அழியாமல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.