புள்ளிகள்

மகாத்மா காந்தியை முதலில் டாக்குமென்டரி படம் எடுத்தவர் ஏ.கே.செட்டியார்.
புள்ளிகள்
Published on
Updated on
1 min read

மகாத்மா காந்தியை முதலில் டாக்குமென்டரி படம் எடுத்தவர் ஏ.கே.செட்டியார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளிவந்தது. தமிழ் விளக்க உரை அளித்தவர் எழுத்தாளர் த.நா.குமாரசுவாமி. அதில் இடம்பெற்ற பாடல்களைப் பாடியவர் டி.கே.பட்டம்மாள்.

முதல் பட்டதாரி பின்னணிப் பாடகர் என்ற பெருமையைப் பெற்றவர் ஏ.எம்.ராஜா.

எழுத்தாளர் சாண்டில்யன் தனது நண்பர்களுடன் இணைந்து 'கமலம்' என்ற வார இதழைத் தொடங்கினார். எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால், பத்திரிகை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து நண்பர்கள், 'உங்களுக்குப் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள். உங்கள் எழுத்துக்கு யானைப் பலம் உண்டு. ஆனால், கமலத்துக்கு ஏன் இப்படி?' என்றனர். அதற்கு சாண்டில்யன், 'யானைக்குத் தரையில்தான் பலம். தண்ணீரில் இல்லை' என்றார்.

-த.சீ.பாலு, அத்திப்பட்டு.

ஜெர்மனி எழுத்தாளர் 'ஓ ஹென்றி'யின் இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்டர். சிறையில் இவர் இருந்தபோது, 'நேரம் போதவில்லை' என்று எழுதினார். இவரது கதையின் முடிவுக்காக நூல்களைத் தேடித் தேடி வாசகர்கள் படித்தனர். சிறுகதைக்குத் தனி வடிவம் கொடுத்த இவருடைய கதைகளின் முடிவுகள் எதிர்பாராதவையாக இருந்தன.

எழுத்தாளர் குஷ்வந்த் சிங் தான் எழுதும்போது வாய் நிறைய வெற்றிலைப் பாக்கு போட்டு மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.

பம்மல் சம்பந்த முதலியாருக்கு 'நாடகத் தந்தை' என்ற பட்டத்தை அளித்தவர் ஞானியார் அடிகளார். இவரது இயற்பெயர் 'பழம் நீ'.

'பருத்திக்கொட்டையை தின்றுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை' என்ற வார்த்தையை புதுமைப்பித்தன் அடிக்கடி உபயோகிப்பார். அதாவது செய்ய விரும்பாத ஒன்றைச் செய்யச் சொல்லி அவர் யாரையும் கட்டாயப்படுத்தும்போது, இவ்வாறு சொல்லுவார்.

'ஆட்டுக்கல் பொளிஞ்சா (புள்ளிகளாகச் செதுக்கி சொரசொரப்பாக்குவது) மாவு நன்றாக அரைபடும். இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியாக இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போலத்தான் ஆண்டவன் அம்மை என்ற உளியை வைத்து முகம் முழுக்க நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால்தான் நடிப்பு என்ற இட்லி நன்றாக வருது' என்று நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது அம்மை போட்ட முகத்தைப் பற்றிச் சொல்வார். சோகத்திலும் நகைச்சுவை.

தேவர், 'நீ இல்லாமல் நான் இல்லை' என்ற படம் தயாரித்தபோது, தலைப்பை மாற்றச் சொல்லி பலரும் சொன்னதை அவர் கேட்கவில்லை. படம் வெளிவந்தபோது, அவர் உயிருடன் இல்லை.

-முக்கிமலை நஞ்சன்

'நானும் ஒரு பெண்' என்ற படம் கருப்பாக இருக்கும் ஒரு பெண் படும் சோதனைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் சிதம்பரம் என்ற நகைச்சுவை வேடத்தில் நாகேஷ் நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் தனது தங்கையைக் காணாமல் கண்ணீர்விட்டு அழ வேண்டும். இந்தக் காட்சியை இயக்குநர் திருலோக

சந்தர் சொன்னபோது முதலில் மறுத்த நாகேஷ், 'நான் அழுதால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். வேண்டாமே?' என்றார். ஆனால் திருலோகசந்தர் பிடிவாதமாக இருக்க, அந்தக் காட்சியில் அற்புதமாகவே நடித்தார் நாகேஷ். படம் வெளியானபோது, அழுகைக்காட்சிக்கு அவ்வளவு வரவேற்பு.

-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com