மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் பெறவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணி தெருவில் தினமும் நடந்தேன். 1970-களில் நான் நாடகாசிரியனாகப் பிரபலமானபோது, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று பிரபல கதாநாயகர்களோடு நடித்து வந்த நடிகை ஜி. வரலட்சுமி என்னை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
வெள்ளி விழா இயக்குநர் ஏ.பீம்சிங்கிடம் நான் உதவியாளராகப் பணிபுரிந்ததிலிருந்தே இவரைத் தெரியும். ஜி.வரலட்சுமி என்னிடம், 'பாபு என் குடும்பத்துப் பெண்கள் இருவரை உங்கள் நாடகத்தில் நடிக்க வையுங்கள்' என்று கூறி படாபட் ஜெயலட்சுமியையும், கனக
துர்காவையும் அறிமுகம் செய்தார். அப்போது நான் நடிகை சந்திரகாந்தாவுக்கு எழுதிய 'மனோரஞ்சிதம்' என்ற நாடகத்தில் சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முக சுந்தரம் நடித்தார். இதில் படாபட் ஜெயலட்சுமியும்
கனகதுர்காவும் அறிமுகம் ஆனார்கள். அதில் நாகபூஷணம் என்பவரும் நடித்தார். இவர் என்னை தனது சகோதரி ஹம்சத்வனியிடம் அறிமுகம் செய்து வைத்து, எனது நாடகங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து ஹம்சத்வனி எனது கவிதைகளை வாங்கிப் படித்தார். நாகபூஷணத்திடம், என்னைக் கவியோகி சுத்தானந்த பாரதியாரிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடையாறில் ஒரு ஆசிரமம் போன்ற வீட்டில் கதர் வேட்டி, துண்டுடன் ஒரு துறவி போல இருந்தவரைச் சந்தித்தேன். நாக பூஷணம் அவருக்கு என்னை அறிமுகம் செய்தார். நாகபூஷணம், பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய உறவினர் என்பதால் கவியோகி பல ஆண்டுகள் பழகியது போலப் பழகினார்.
கவியோகி, சிவகுரு ஜடாதரய்யர் - காமாட்சி அம்மையாரின் நான்காவது குழந்தையாக 1897-இல் சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணிபுரிந்த போது 'பாரத சக்தி' என்னும் மகா காவியத்தைப் படைத்தார். இவர் எழுதிய 'யோக சித்தி', 'கீர்த்தானஞ்சலி', ' மேளராக மாலை' தமிழின் வரலாற்றுச் சிறப்பானது. இவர் 'பொன்வயல்' என்ற படத்தில் எழுதிய 'சிரிப்புதான் வருகுதய்யா...' என்ற பாடலில்தான் சீர்காழி கோவிந்தராஜன் அறிமுகமானார்.
விக்டர் க்யூகோ எழுதிய 'லே மிஸரபிள்' என்ற பிரெஞ்சு நாவலைத் தமிழில் மொழி பெயர்த்தார். இதுதான் என் எழுத்தின் குரு ஜாவர் சீதாராமனை தமிழ்த்திரை உலகுக்கு அடையாளம் காட்டிய படம் 'ஏழை படும் பாடு'. 1950-இல் வந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் நாகய்யா வேடத்தில் சிவாஜியும், ஜாவர் வேடத்தில் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்து பி. மாதவன் இயக்கிய வெற்றிப் படம் 'ஞான ஒளி'. அதன் பின் வெற்றி அடைந்த நாடகங்களின் கருவை கேட்டார்.
'அச்சாணி. 'ஏழ்மையிலும் எந்த நிலையிலும் கடன் வாங்காத ஒரு தையல்காரன்' என்றேன். 'அது அரிச்சந்திரனின் இன்னொரு முகம்' என்றார். 'தன் செல்வத்தை எல்லாம் கொடுத்துத் தெருவுக்கு வந்தவன் கதை வெளிச்சம்' என்றேன். 'இது கர்ணன்' என்றார். 'முன் கோபத்தால் முதலிரவே வாழ்க்கையை இழந்த கணவன் சொந்தம்' என்றேன். 'இது சூர்ப்பனகையின் வேறு பக்கம்' என்றார். எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது. மேலே சொல்வதை நிறுத்தினேன்.
அப்போது அவர் சொன்னது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. 'யாரும் கதையைப் புதிதாய்க் கண்டுபிடிக்க முடியாது. இது விஞ்ஞானம் இல்லை. பழைய கழிதலும் புதியன புகுதலும்தான் கதையின் அஸ்திவாரம். நீ அதில் நடைமுறை வாழ்க்கையை அடையாளம் காட்டு. அதுதான் மாளிகை ஆகும். திஸ் இஸ் கால்டூ ஸ்கீரின்பிளே. பெஸ்ட் ஸ்டோரி டெல்லர் இஸ் ஏ பெஸ்ட் டைரக்டர்' என்று பலவற்றை உதாரணம் காட்டினார். அவர் அனுபவம், அறிவின் முதிர்ச்சி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நாடக உலகில் வங்காளப் படைப்பாளர்களைச் சொன்னவர், 'ஸ்ரீராம கிருஷ்ணரை வணங்கிய பின்னே நாடகத்தைத் துவங்கும் பழக்கம் இருந்தது' என்றார். எனக்குப் புரியவில்லை. 'நாடகத்துக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன். உடனே ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் படித்தார்.
1884 செப்டம்பர் 24-இல் கல்கத்தாவின் புகழ் பெற்ற ஸ்டார் தியேட்டரில் கிரீஷ் சந்திரகோஷின் 'சைதன்ய லீலா' நாடகம் நடந்தது. அதற்கு அவதார புருஷர் ஸ்ரீராம கிருஷ்ணர் வந்தார். எல்லோரையும் ஆசிர்வதித்தார்.
நடிகைகள் சிலர் அவரைப் பார்க்கவும், பக்கத்தில் வர அஞ்சியும் சில காரணங்களால் ஒதுங்கி நிற்க, அவர்களைத் தானே தேடிச் சென்று ஆசிர்வதித்தார். 'அவர் வந்ததால் அன்றிலிருந்து நாடக மேடை வைகுந்தமாகியது' என்று பத்திரிகையாளர்கள் பாராட்டினார்கள். அதைப் பார்த்த விவேகானந்தர், 'பலவீனப்பட்ட மனிதர்களே உங்களுக்காக பகவான் ராமகிருஷ்ணர் அவதரித்திருக்கிறார்' என்று கசிந்துருகினார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் வங்காள நாடகத்தின் புரவலரானார். ஆம், நாட்டிய மங்கை ஆம்ரபாலியிடம் பகவான் புத்தரும், நெறி தவறிய பெண்ணிடம் ஏசுபிரானும் காட்டிய கருணை இவரிடம் இருந்ததால் வங்காள மேடைகளில் ஸ்ரீராமகிருஷ்ணர் படம் உள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு நல்ல கருத்துள்ள நாடகங்களை எழுதச் சொல்லி வாழ்த்தினார்.
இவர் எழுதிய 'பாரத சக்தி' நூலுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது கிடைத்தது. இவர் 92 வயதில் காலமானார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.