உடல் எடையைக் குறைக்க? - மஞ்சிமா மோகன்!
மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 2015-ஆம் ஆண்டு மலையாளச் சினிமாவில் நாயகியாகத் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியவர் மஞ்சிமா மோகன். தமிழில் கெளதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா (2016)' படத்தின் மூலம் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமான மஞ்சிமா, அந்தப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து 'சத்ரு', 'இபோத் எந்நைக்கு', 'தீபம்', 'துருவங்கள் 16' போன்ற படங்களில் நடித்தார். பிறகு, கௌதம் கார்த்திக்குடன் 'தேவராட்டம்' படத்தில் நடித்து, அவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் எடை குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் மஞ்சிமா, 'சினிமா என்னுடைய வாழ்க்கையின் ஓர் அங்கம். நிறையப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. உடல் எடையைக் குறைத்தால் நிறைய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.
நானும் இந்த உடல் பருமனைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். அது நடக்கிற மாதிரி தெரியல. சர்ஜரிகூட பண்ணிடலாம்னு யோசிச்சேன்.
எனக்கு பிசிஒடி பிரச்னை இருக்கு. அதனால கொஞ்சம் எடை அதிகமாக இருக்கிறேன். உடல் எடையைவிடவும், இந்தப் பிரச்னையைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன். அதனால் உடல் எடையைப் பற்றி எனக்கு இப்போது கவலையில்லை' என்று பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, செளபின் ஷாஹிர், சத்யராஜ், ரச்சிதா ராம், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்த கூலி திரைப்படம், ஆகஸ்ட் 14 அன்று திரைக்கு வந்தது.
இந்த நிலையில், நடிகை சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் ரஜினி சாரின் பெரிய ரசிகை. 'கூலி' படத்தைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் ரஜினி சார் நடித்த அனைத்துப் படங்களையும் பார்ப்பேன். மற்றவர்களுக்கு எப்படியோ? எனக்கு அந்தப் படம் வெற்றிப்படம் தான். கதையின் உள்ளடக்கம் நன்றாக இருந்தால் மட்டுமே எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் ரஜினி சார் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். கதையும் எனக்குப் பிடித்திருந்தது' என்கிறார்.
அதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தின் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்வதற்கான வாழ்த்தையும் சிம்ரன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், 'வெள்ளித்திரையிலிருந்து மில்லியன்கணக்கான மக்களின் இதயங்களுக்கு, உங்கள் மாயாஜாலம் வந்து சேர்ந்திருக்கிறது. 'ஸ்டைல், ஸ்டார்' என எப்படியிருந்தாலும், எளிமையையே கைகொள்ளும் மனிதர் ரஜினி சார். உங்களுடன் பணிபுரிவது பெரும் பாக்கியம். சினிமாவில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள்!' எனப் பகிர்ந்திருந்தார்.
மேலும் அவரின் எக்ஸ் பக்கத்தில் 'சில சந்திப்புகள் காலத்துக்கு அப்பாற்பட்டவை. அழகான தருணத்தைப் பகிர்ந்ததற்காக நன்றியுள்ளவளாக இருப்பேன்' எனக் குறிப்பிட்டு ரஜினிகாந்த்தைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
'கூலி' குறித்து நெகிழும் சௌபின்!
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14-இல் திரையரங்குகளில், 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ்த் திரைப்பிரபலங்களைத் தாண்டி, மலையாளத்திலிருந்து சௌபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா, தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, ஹிந்தியிலிருந்து ஆமிர்கான் என பான் இந்திய நட்சத்திரங்களைக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகி திரைக்கு வந்திருந்தது. சௌபின் ஷாஹிர் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுதான்.
'கூலி' திரைப்படம் அவருக்கு எப்படியான ஒரு வாய்ப்பு என அவர் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் பேசிய விஷயங்களை நாம் கேட்டிருப்போம். தற்போது ரஜினிகாந்த், ஆமிர்கான், உபேந்திரா, லோகேஷ் கனகராஜ் எனப் பிரபலங்கள் பலருடனும் 'கூலி' படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தற்போது தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், 'சில சமயங்களில் சினிமா கனவுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. உங்கள் அன்புக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி. தயாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் கதாபாத்திரம். 'கூலி' எப்போதும் என்
இதயத்துக்கு மிக நெருக்கமான திரைப்படமாக என்றும் இருக்கும். அன்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் சௌபின் ஷாஹிர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.