மழை இல்லாமல் மனிதர்களால் வாழ இயலாது. வறட்சி, பூமி வெடிப்பு, பஞ்சம் வந்து வாழ்க்கையில் பல சங்கடங்கள் தலைதூக்கிவிடும். அதேசமயம் மழை அதிகமாகப் பொழிந்தாலும் கஷ்டம். மேக வெடிப்பு, புயல், வெள்ளம், நிலச்சரிவு என ஏற்பட்டு பல உயிர்களையும் உடமைகளையும் இழக்க வேண்டி வரும். இதனிடையே, இந்தியாவில் சில இடங்களில் ஆண்டு முழுவதும் நச, நசவென மழை பொழியும் இடங்களும் உண்டு.
மெளன்சிராம் (மேகாலயா)
மேகாலயாவில் உள்ள ஒரு கிராமம். மிக ஈரமான இடம். ஆண்டுதோறும் இங்கு சராசரியாக 11,872 மி.மீ. மழை பொழியும். உலகின் வேறு எந்த இடத்தையும்விட இங்குதான் மழை அதிகம். பசுமையான நிலப்பரப்புகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள் கூடுதல் கவர்ச்சி. காசி பழங்குடியினர் இங்கு ஏராளமாய் வசிக்கின்றனர். மழை அருங்காட்சியகம் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது. சுற்றிப் பார்க்க ஜூன்-செப்டம்பர் சிறந்த மாதங்கள். தினமும் மழை உண்டு.
அம்போலி (மகாராஷ்டிரா)
மகாராஷ்டிராவின் சிந்த் துர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு கோடை வாசஸ்தலம். ஆண்டுக்கு சராசரியாக 7,500 மி.மீ. மழை பொழியும். குளுமையான பச்சைப்பசேல் பூமி. அம்போலி நீர்வீழ்ச்சி மிகவும் பாப்புலர். சகாயாத்ரி மலைத்தொடரின் ஒரு பகுதி. கோவா எல்லையில் உள்ளது.
'மகாராஷ்டிராவின் சிரபுஞ்சி' என அழைப்பர்.
ஆகும்பே (கர்நாடகா)
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஈரப் பகுதியில் உள்ளது. ஆண்டுக்கு இங்கு சராசரியாக 7,620 மி.மீ. மழை பொழியும். புவியியல், மலையேற்றத்துக்குச் சிறந்த இடம். ஷிமோகா மாவட்டம் மலநாடு பகுதியில் உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், நாகப் பாம்புகள் சரணாலயம் உள்ளது. மழைக்காடு ஆராய்ச்சி நிலையம், தானியங்கி வானிலை நிலையங்கள் உள்ளன. அடர்த்தியான பனியைக் காணலாம். யுனெஸ்கோ பாரம்பரியத் தளம்.
சிரபுஞ்சி (மேகாலயா)
ஒருகாலத்தில் இந்தியாவில் மிக அதிக மழை பெய்த இடம். தற்போது ஆண்டுக்கு 11,430 மி.மீ. மழை பொழிகிறது. உலக சாதனையாக ஒரு சமயம் 25,467 மி.மீ. மழை பொழிந்துள்ளது. இதன் புதுப்பெயர் 'சோரா'. இயற்கை அழகு அருவிகள், கலாசாரத்துக்கு பிரபலமான இடம்.கெளகாத்தியிலிருந்து மூன்று மணி நேரத்தில் இந்த இடத்தை அடையலாம்.
மகாபலேஸ்வர் (மகாராஷ்டிரா)
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம். ஆண்டுக்கு சராசரியாக 5,600 மி.மீ. மழை பொழியும் இடம். பள்ளத்தாக்கின்அழகு அட்டகாசம். ஸ்டிராபெர்ரி பண்ணைகள் அதிகம்.
பாசிகாட் (அருணாசலப் பிரதேசம்)
கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைமையகம். சியாங் ஆற்றின் கரையோரத்தில் 80 சதவீதம் காடுகள் கொண்ட பகுதி. இங்கு சராசரியாக ஆண்டுக்கு 3,900-4,500 மி.மீ. வரை மழை பொழியும். விடியற்காலையில் ஒளிரும் மலைகளைக் கொண்ட பகுதி. ஈரப் பதமான துணை வெப்ப மண்டல காலநிலை கொண்ட பகுதி. அருமையான எழில் சூழ்ந்த பூமி.
ஹூலிகல் (கர்நாடகா)
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஷிமோகா மாவட்டத்தில் ஹோசநகரா அருகேயுள்ள கிராமம். இங்கு ஆண்டுக்கு 7,800 மி.மீ. மழை பொழிகிறது. மிக ஈரமான வெப்ப மண்டல பருவகால நிலையைக் கொண்டுள்ளது. மே-நவம்பர் மாதங்களில் கன மழை, மிக அதிக கனமழை பொழியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.