ஒருநாள் விஞ்ஞானி

அறிவியல் ஆர்வமுடைய பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல்...
ஒருநாள் விஞ்ஞானி
Published on
Updated on
2 min read

அறிவியல் ஆர்வமுடைய பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, கேரள மாநிலத்துக்கு உள்பட்ட திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தேசிய அறிவியல், தொழில்நுட்பத் துறையிடை நிறுவனத்தில் ஒரு நாள் விஞ்ஞானியாகப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார் பத்தாம் வகுப்பு மாணவர் அல்தாஃப்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட களியக்காவிளையைச் சேர்ந்த தனியார் நிறுவன பணியாளர் பசுகுதீன் நூகு- தனியார் பள்ளி ஆசிரியை அனூபா தம்பதியின் மகனான இவர், தனது அனுபவம் குறித்து கூறியது:

'நான் களியக்காவிளை பதறுல் இஸ்லாம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். அருகாமையில் உள்ள தேசிய ஆய்வுக் கூடத்தில் ஒருநாள் விஞ்ஞானிக்கான பயிற்சி அளிப்பதை அறிந்தேன். எனது பெற்றோர், தாய்வழி தாத்தா எஸ். மாகீன் அபுபக்கர், வகுப்பு ஆசிரியை எழில்மதி உள்ளிட்டோரின் ஆலோசனையைப் பெற்று விண்ணப்பித்தேன்.

இணையவழித் தேர்வில் 'நோய்களும் அதன் காரணிகளும்' என்ற தலைப்பில் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 7 கேள்விகளுக்குச் சரியான விடை அளித்ததால், பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டேன்.

எங்கள் ஊரிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய அறிவியல் - தொழில்நுட்ப துறையிடை நிறுவனத்தில் கடந்த ஜூலை 24-இல் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எனது பெற்றோருடன் சென்றேன். இந்தப் பயிற்சிக்கு 200 மாணவர்கள் வந்திருந்தனர். என்னைத் தவிர மற்ற அனைவரும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சியளிக்கப்பட்டது. வெவ்வேறு ஆய்வுக்கூட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

வேளாண் செயலாக்க தொழில்நுட்ப ஆய்வகத்தில், உமியிலிருந்து தட்டு, குவளைகள் போன்றவை தயாரிப்பது குறித்து, விஞ்ஞானி ஜோசப் ஜோஷி விளக்கினார்.

உயிரி எரிபொருள் ஆய்வகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அணுகாந்த அதிர்வு மைய ஆய்வகத்தில் கருவிகள், அதன் பயன்பாடுகள் குறித்தும், அசுத்த நீரை தூய்மையான நீராக மாற்றுவதையும் விஞ்ஞானிகள் விளக்கினர்.

பின்னர், மாணவர்கள் 5 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அறிவியல் தொழில்நுட்பப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு திட்ட இயக்குநர் அருண் இந்த ஆய்வகத்தின் பயன்பாடுகள் குறித்து விளக்கியதோடு, நெகிழ்வான மின்னணுவியல் பொருள்கள், மின்னணு கூறுகளை நெகிழ்வான மூலக்கூறுகளில் பொருத்தி வளைக்க, மடிக்கக்கூடிய மின்னணு பொருள்களை உருவாக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை விளக்கினார்.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ஜிபி ஜானுடன் நேர்காணல் நடைபெற்றது. 'மருத்துவத் துறை வளர்ச்சி அடைந்திருந்தும் நிபா போன்ற நோய்க்கு ஏன் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை?' என்ற எனது கேள்விக்கு விஞ்ஞானி ஜிபி ஜான் பதில் அளிக்கும்போது, 'திடீரென ஒரு நோய்க்கு மருத்து கண்டுபிடிக்க இயலாது. ஒவ்வொரு மனிதரின் உடலிலும் அது வெவ்வேறு பிறழ்வுநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே ஒரு மருந்தை கண்டு

பிடிப்பதற்கான கால அளவு மிகவும் அதிகம்' எனத் தெரிவித்தார். அனுபவம் மிகவும் உற்சாகமாகவும், அறிவை மேம்படுத்தும் விதத்திலும் இருந்தது. எதிர்காலத்தில் விஞ்ஞானியாகி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது' என்கிறார் அல்தாஃப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com