குடியரசுத்தலைவர் ராமநாத் கோவிந்திடம் இருந்து பத்ம விருது பெறுதல்.
குடியரசுத்தலைவர் ராமநாத் கோவிந்திடம் இருந்து பத்ம விருது பெறுதல்.

சிற்பி 90

மரபில் காலூன்றி, புதுமையில் கிளை பரப்பி, மகாகவி பாரதியார் மரபில் கவிதை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, எழுத்து, சொற்பொழிவு... என ஓய்வின்றி இயங்கிவருகிறார் சிற்பி.
Published on

மரபில் காலூன்றி, புதுமையில் கிளை பரப்பி, மகாகவி பாரதியார் மரபில் கவிதை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, எழுத்து, சொற்பொழிவு... என ஓய்வின்றி இயங்கிவருகிறார் சிற்பி.

உன்னதப் படைப்பாளி, பேராசிரியர், கவிஞர், படைப்பிலக்கியத்துக்கும் மொழிபெயர்ப்பாக்கத்துக்குமாக சாகித்திய அகாதெமியின் இரு விருதுகள் பெற்றவர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், அகவை 90-லும் எந்த நேரத்திலும் எது குறித்தும் புதிதுபுதிதான கருத்துகளை முன்வைக்கும் சிந்தனையாளர், பொள்ளாச்சியில் இருந்தபடி உலகத் தரமான தமிழ்க் கவிதைகளை எழுதிவரும் இந்தியப் பெருங்கவிஞர்.. என்ற பன்முகத் தன்மைகளைக் கொண்டவர்.

தன் காலத்துக் கவிஞர்களுக்கு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் அவரிடம் பேசும்போது, 'அறிவியலும், மனிதமும், இலக்கியமும் ஏற்படுத்திய தாக்கங்கள்தான் நானும் என் எழுத்துகளும்...' என்கிறார்.

அவருடன் ஒர் சந்திப்பு:

கடந்து வந்த காலத்தைப் பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? கடக்க வேண்டிய காலத்துக்கான திட்டங்கள் எவை?

நிறைவான ஆசிரியர் பணி அமைந்தது. விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, துணைவேந்தராக இருந்த சி.சுப்பிரமணியம், மகாராஷ்டிர காவல் துறை அதிகாரி சிவானந்தன், தமிழ்நாடு அரசுச் செயலராக இருந்த கார்மேகம் உள்ளிட்ட அரிய மாணவர்கள் உருவாகத் துணை நின்றேன். கவிஞர் மஞ்சுளாதேவி, மொழிபெயர்ப்பாளர் செந்தில்குமார் போன்றோர் என் இலக்கிய வாரிசுகளாக வளர்ந்து வருவதும் எனக்குப் பெருமை.

ஏ.யூ.டி. கல்லூரி ஆசிரியர் சங்க உருவாக்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் பங்களிப்பு, சாகித்திய அகாதெமியில் மும்முறை பயனுள்ள பணிகள் செய்த வாய்ப்பு எனப் பல முனைகளில் செயலாற்றினேன். இடையே கவிதை, கட்டுரைப் படைப்பு முயற்சிகளும் தொடர்ந்தன.

பல விருதுகளைப் பெற்றேன். இவை நிறைவு அளித்தவையே கடந்தகாலம். வருங்காலம் குறுகியதாகையால் திருக்குறள், தொல்காப்பியம், சங்க இலக்கியம் எனச் சில ஆய்வுகள் செய்ய ஆசை. இத்துடன் மொழிபெயர்ப்புக்குக் குவியும் பெருநூல்கள். கடைசி மூச்சு வரை இவற்றை முன்னிறுத்துவேன்.

இடையறாத வாசிப்பு, சலிப்பில்லாமல் தங்களுக்கு எப்படிச் சாத்தியமாகிறது?

என் வாசிப்புப் பழக்கம் என் சிறிய கிராமத்தில் இருந்த காந்தி வாசகச் சாலையில் 1940-களில் என் பத்தாம் வயதில் தொடங்கியது. கேரளத்தில் என் பள்ளிப் பருவத்தில் நூலக வகுப்பு வாரத்துக்கு ஒரு நாள் ஆங்கில, மலையாள நூல்களோடு தொடர்பு ஏற்படுத்தியது. 'கல்கி', 'தினமணி', 'கல்கண்டு' உள்ளிட்ட இதழ்களால் தமிழ் வாசிக்கத் தொடங்கினேன். அன்றுமுதல் வாசிப்பு இன்றுவரை அலைக்கழிக்கிறது. எழுத்தின் வசீகரம் வயதின் எல்லை கடந்தது.

தொடர்வாசிப்பால் பெற்ற பயன்?

'அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம்' என்ற அதிசய உலகில் இரவு பத்து மணி வரை படித்தேன். பணிக் காலத்தில் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி நூலகத்தில் அறிவியல், வரலாறு, இலக்கியம் என்ற களஞ்சியங்களில் திளைத்தேன். வாசிப்பு வானம் வரை அறிவை விசாலப்படுத்தியது. உலகப் பேரிலக்கியங்களின் வழியே, மனிதம் எனக்குள் ஊறியது. அறிவியலும், மனிதமும், இலக்கியமும் என்னிடத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்தான் நானும் என் எழுத்தும்.

ஏராளமான கவிஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். எழுதிக் குவிக்கிறார்கள். எதிர்காலக் கவிதை நம்பகமான அளவு மிகுந்து வருகிறதா?

'ஊருக்கு நூறு பேர்' என்ற ஜெயகாந்தன் வாசகமே தமிழ்க் கவிஞர்களின் எண்ணிக்கைக்கும் கூறலாம். எனினும் தனித்துவமான இளம்குரல்களை நான் அடையாளம் காண்கிறேன். எத்தனை தவிடு குவிந்தாலும் அரிசி மணிகள் இல்லாமல் போகுமா? எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்ல கவிதைகள் வெல்லும்.

மரபிலிருந்து புதுமைக்கும்- புதுமையிலிருந்து நவீனத்துக்குமாகக் கவிதையைக் கொண்டு செலுத்துகிற ஆற்றலை, எங்கிருந்து பெறுகிறீர்கள்?

மரபைப் பழைய இலக்கியங்களிலிருந்து கற்றேன். குறிப்பாக, கம்பனிலிருந்து... கற்பார் கம்பனையன்றி மற்றும் கற்பரோ? புதுமையை பாரதியிடமிருந்து பெற்றேன். வடிவிலும் தொனியிலும் நான் நவீனத்துவத்தை உணர்ந்தது கல்கி, ஆசிரியர் கவிஞர் சோமுவின் இளவேனில் தொகுப்பிலிருந்துதான்.

அதனைச் செழுமை செய்தவர்கள் தருமு சிவராம். சுந்தர ராமசாமி, நகுலன் ஆகியோர். இடதுசாரி முன்னோடிகளான நா.வா., ஜே.கே. ஆகியோர் எதிர்த்தபோதும் நான் புதுக்கவிதையை நோக்கிப் பயணித்தேன். என் சக பயணிகள் ரகுமான், மீரா, தமிழன்பன், மு.மேத்தா, புவியரசு மற்றும் சிலர். அவர்களில் கங்கைகொண்டானை மறக்க முடியாது.

குறுங்கவிதை, கதைக்கவிதை, நெடுங்கவிதை, காவியம்.. எனக் கவிதையின் பல்வேறு வடிவுகளைக் கையாண்டு வெற்றி கண்டிருக்கிறீர்கள். சிறார் கவிதைகளிலும் தாங்கள் முத்திரை பதித்தது எவ்வாறு?

எல்லா வடிவங்களுக்கும் முன்மாதிரிகளாகச் சிலவற்றைக் கருதுகிறேன். குறுங்கவிதைக்குச் சங்கப் பாடல், கதைக் கவிதைக்கு வேர்ட்ஸ்வொர்த் , நெடுங்கவிதைக்கு ஷெல்லி, காப்பியத்துக்கு பாஞ்சாலி சபதம். இவையும் இவர்களும் முன்மாதிரிகள். எல்லைக் கற்களை ஏற்கெனவே பெருங்கவிஞர்கள் நட்டுவைத்துப் போயிருக்கிறார்கள்.

ஆத்திசூடி மரபில் புதியன புனைந்த பின்புலம் எது?

பாரதியின் ஆத்திசூடியே காரணம். காலத்தின் தேவையும் ஒளவையின் சிக்கனமும் புதிய ஆத்திசூடியைத் தோற்றுவித்தன. பாரதி சீடர்கள்தானே நாம்.

சுய படைப்புகளுக்கு நிகராகவும் மேலாகவும் மொழிபெயர்ப்பில் தாங்கள் ஈடுபாடு செலுத்தி உழைத்து வருவது எதனால்?

மொழிபெயர்ப்பானது பிற மொழிகளின் படைப்பிலக்கிய வளர்ச்சியையும் நுணுக்கங்களையும் நாம் அறியாத பண்பாடுகளையும் உணர்த்தும் கலை. எனக்கு மலையாளம், கற்றுத் தந்தது அதிகம். என் மொழிக்குச் சில புதுமைகளை அறிமுகம் செய்ய முயல்கிறேன்.

மொழிபெயர்ப்பால் பல புதிய சுய படைப்புகள் உருவாக முடியாது போகுமே. அது உடன்பாடுதானா?

இது பிழையான கூற்று. ஒரு படைப்பாளி மொழி பெயர்ப்புகளின் வழியே புது அனுபவங்களை, புது உத்திகளை, புதுப் பிரயோகங்களைக் கற்று, தன் மொழியைச் செழுமை செய்ய முடியும். ஒரு சிறு எடுத்துக்காட்டு. எம்.டி.யின் 'வாராணசி' என்ற நாவலை மொழிபெயர்த்தேன். பாலகுமாரன் என்னிடம் கேட்டார். 'வாரணாசி என்பதுதானே சரி' என்று. ஆனால், 'சரியான உச்சரிப்பு, வாராணசி' என்று விளக்கினேன். சரியான உச்சரிப்பை 'தஸ்தயேவ்ஸ்கி', 'தல்ஸ்தோய்' என்ற பெயர்களின் உச்சரிப்பைக் கூடப் பிற மொழியால்தான் அறிந்தேன்.

தங்களிடமிருந்து கட்டுரைகளும் வெளிவருகின்றன. கதைகள் எழுத முன்வருவீர்களா?

நான் கட்டுரைகளின் காதலன். கதைகளைவிடக் கட்டுரைகளை நான் நேசிக்கிறேன். கட்டுரைகள் நம்மோடு காதலுடன் உரையாடவல்லவை. தமிழில் கட்டுரை இலக்கியத்தின் எல்லை கண்டவர் அ.முத்துலிங்கம். கட்டுரைகளைத் தமிழ் வாசகர்கள் இன்னும் நெருங்கி அனுபவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்

படுகிறேன். நாவல்களும் சிறுகதைகளும் மட்டுமே இலக்கியம் அல்ல. கதைகள் என் களம் அல்ல- நான் கதைக்கவிதைகள் பல எழுதியிருந்தாலும்.

ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விழா எடுக்கும் தாங்கள், தங்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை எவ்வாறு நடத்தத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

அறிவியல், ஆன்மிகம், இசை, இலக்கியம், வரலாறு... என்று கருத்தரங்குகளை முன்கூட்டியே நடத்த ஆசைப்படுகிறேன். பல நூல்களை வெளியிடுவதாகத் திட்டம். துணையும் உதவியும் இருந்தால் இந்தத் திட்டப்படி நிகழ்த்த விருப்பம்.

இனிவரும் ஆண்டுகளில் எழுதியோ, செய்தோ முடிக்கத் தாங்கள் திட்டமிட்டுள்ள பணிகள் எவை?

நான் முன்னமே குறிப்பிட்டபடி சில ஆய்வு நூல்களை எழுத விரும்புகிறேன். மொழிபெயர்ப்புகளில் ஈடுபட எண்ணம். முதுமை எவ்வளவு தூரம் அனுமதி தருகிறதோ, அவ்வளவு செய்வேன்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தங்களைக் கவர்ந்த வியப்பில் ஆழ்த்துகிற முன்னோடிக் கவிஞர்கள், எழுத்தாளர்கள் யார், யார்?

என்றும் பாரதியே என் துருவ நட்சத்திரம். பாரதியே என் அளவுகோல். மற்றவர்கள் எல்லாம் அவரது நிழல்களே. நவீன எழுத்தாளர்களில் விரலுக்கு முன் நிற்பவர் புதுமைப்பித்தன். தொடர்ந்து என் மனம் கவர்ந்தவர்கள் புனைவிலக்கியத்தில் தி.ஜானகிராமன், கி.ரா., ஜெயகாந்தன், எஸ்.ரா., பூமணி, சு.வேணுகோபால்.

கவிஞர்களில், பாரதிதாசன், ரகுமான், தருமுசிவராம், சுந்தர ராமசாமி, கல்யாண்ஜி, கலாப்ரியா, வானம்பாடிகள். தனித்துவம் மிக்க எழுத்தாளர்கள் ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆர்.கே. கண்ணன். என்னை மிகவும் படிக்க வைத்தவர் கல்கி.

படைப்பாற்றலுக்குச் சவாலான விஷயம்?

அறிவியலை தருமுசிவராம் போல் திறமையாகக் கவிதைக்குள் கொண்டு வருவது; ஒரு போராளியை மாமல்லபுரச் சிற்பம் போல் வடித்தெடுப்பது; குழந்தைகள் நாவில் நித்தமும் பாடத்தக்க பாடலைச் சமைப்பது.

உங்களிடம் நீங்களே கண்ட நிறை - குறை எவை?

'வசைமொழிகளை ஒருபோதும் சொல்லி அறியாதது, பெரியோரை மதிப்பது, பகை பாராட்டுவோரையும் நேசிப்பது, பொன்னையும் பொருளையும் பெரிதாகக் கருதாதது' போன்றவை நிறை. 'மறதி, பெருமைக்குரியவர்களாய்ப் பிள்ளைகளை வளர்க்காதது; இளம் படைப்பாளிகளை ஊக்குவித்துப் பாராட்டாதது, என் குறை என்னவென்று தெரியாதது' போன்றவை என் குறை.

தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழின் எதிர்காலம் தமிழர்களின் கரங்களில் வளமாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. பாரதிதாசன் கனவு கண்டதுபோல், 'கைத்திறச் சித்திரங்கள், கணிதங்கள், வானநூற்கள், மெய்த்திற நூல்கள், சிற்பம், விஞ்ஞானம், காவியங்கள்' உலகம் வியக்க வளரும் எனத் தீவிரமாக எண்ணுகிறேன்.

'கருணைக் கடல் இராமாநுசர் காவியம்' போல் புதிதாய்ப் படைக்கும் திட்டம் உண்டா?

இல்லை. மனித மாண்புகளின் சிகரம் இராமாநுசர். அவர்மீது கொண்ட அன்பால் காவியம் புனைந்தேன். அவருக்கு நிகராக வேறு காப்பியத் தலைவரை நான் காணவில்லை.

அறிவியலிலும் ஆன்மிகத்திலும் தங்கள் கவிதைகள் அழுத்தமாய்த் தடம் பதிப்பதன் பின்புலம் என்ன?

நான் ஆன்மிகப் பின்புலத்தில் வளர்ந்தேன். எனக்கு நாவரசும், மாணிக்கவாசகரும், ஆழ்வார்களும் தந்தவை மிகுதி. அவர்களுக்கு இணையாகவே ஐன்ஸ்டைனையும், கலாமையும், சந்திரசேகரையும், இராமாநுசனையும், டார்வினையும் நான் பார்க்கிறேன். அதனால், ஆன்மிகமும் அறிவியலும் என்னுள் குவிந்திருக்கின்றன. என் ஆன்மிகம், கடவுள் நம்பிக்கை அல்ல- மனிதம்.

வரும் தலைமுறையினருக்குச் சொல்வது என்ன?

இன்னுயிரே நம் மொழி-இயற்கையைக் காப்பது வழி - கிடைத்ததை எல்லாம் படி.

இந்திய மொழிகளில் தங்களது படைப்புகள் எவையெவை மொழிபெயர்க்கப் பெற்றுள்ளன?

தனிக் கவிதைகள் ஆங்கிலத்திலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளன. அகாதெமி விருது பெற்ற 'ஒரு கிராமத்து நதி' ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, சந்தாலி மொழிகளில் வெளிவந்துள்ளது.

குடும்பம் எந்த வகையில் உதவுகிறது?

'வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி' என்ற பாரதியாரின் கவிதையே இதற்கான பதில்.

அமுதபாரதி
அமுதபாரதி

உயரங்களை எட்டியபோதும், எளிமை

'இன்றையப் பெருங்கவிஞர் சிற்பியின் சந்திப்பு அறுபத்து இரண்டு ஆண்டுகட்கு முன்னர் நிகழ்ந்தது. அப்போது, சென்னையில் எனது ஓவிய அறைக்கு (அமரர்) சி.மெய்யப்பனுடன் (மணிவாசகர் நூலகம்) சிற்பியார் வந்த நிகழ்வு இன்றும் என்னுள் பசுமையாக...' என்கிறார் ஓவியக் கவிஞர் அமுதபாரதி. அவர் கூறியது:

'சிற்பியின் 'நிலவுப்பூ' என்னும் முதல் கவிதை நூலின் உட்பக்கத் தலைப்போவியங்கள் வேண்டும் எனக் கேட்டு, கவிதைகளின் மெய்ப்புகளைத் தந்தார்கள். அவற்றை உடனே படிக்கத் தொடங்கிய என்னைப் பார்த்து மெய்யப்பன், 'கவிதைகள் எப்படி இருக்கு அமுதோன்? நீங்களும் கவிஞர் அல்லவா?' என்றார். அதற்குள் இரண்டு மூன்று கவிதைகளில் ஆழ்ந்திருந்த நான், 'அருமையாக இருக்குங்க!' என்றேன்.

'எதனால் சொல்கிறீர்கள்?' எனத் தமது அடுத்த வினாவைச் சொடுக்கினார் மெய்யப்பன்.

நான், 'ஐயா! இப்போது எல்லாக் கவிஞர்களும் பெரும்பான்மையாக 'விருத்தம்' என்ற பாவினத்தில்தான் எழுதுகின்றனர். ஆனால், அவற்றில் இருந்து விலகி, மனத்தை அள்ளும் விதமாக, துள்ளி வருகிற சந்தங்களாக, வலிமையான தனது எண்ணங்களை விரிக்கும் கண்ணிகளாகக் கவிதைகளை யாத்திருப்பதே ஈர்க்கிறது ஐயா! இந்த நூல் மிகுந்த புகழ் பெறும்!' என்றேன்.

'அப்படிச் சொல்லுங்க?' என வரவேற்றார் மெய்யப்பன். நான் சிற்பியைப் பார்க்கிறேன். அவர்தம் விரிந்த கண்களும், முறுவலித்த இதழ்களும் என் கருத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பதால் உணர்கிறேன். நூலுக்கு அன்புரையளித்த பாவேந்தர் பாரதிதாசனின் கருத்தும், அதனையொட்டிய அமைந்ததும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சரி. இன்றைக்குத் தொண்ணூறு அகவையைத் தொடர்கிற கவிஞர் சிற்பியிடம் நான் வியக்கிற செய்தி இதுதான்.

இலக்கியத்திலும் பதவியிலும் இத்துணை உயரங்களை எட்டியபோதும், கவிஞர் எத்துணை எளிமையாக இருக்கிறார்! அதற்கு விடையாய் என்னுள் எதிரொலிக்கும் குறள் இதுதான்.

'வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை' (குறள் 439).' என்கிறார்.

ய.சு.ராஜன்
ய.சு.ராஜன்

ஆயிரம் பிறை கண்ட பேராசான்...

'கவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், இலக்கிய ஆய்வாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்..' என்று -தான் சூடிய அல்லது தனக்குச் சூட்டப்பட்ட ஒவ்வொரு மகுடத்திற்கும் பெருமை சேர்த்த சிற்பி அவர்களின் மகோன்னதமான பணிகளை நினைக்கையில் பிரமிக்க மட்டுமே முடியும் என்கிறார் பாரதி பாஸ்கர். அவர் கூறியது:

'நாமார்க்கும் குடியல்லோம்' என்னும் நிமிர்வும், 'பணியுமாம் என்றும் பெருமை' என்னும் அடக்கமும் ஒருங்கே அமைந்த அபூர்வ ராகம் அவர்.

அடுத்த தலைமுறைக் கவிஞர்களை , பேச்சாளர்களை, எழுத்தாளர்களை , சிந்தனையாளர்களை ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர். அதேநேரம் மிகையான புகழ்ச்சி - இலக்கிய உலகத்தில் மிக அதிகம் காணப்படும் கிருமி, அவரை நெருங்கவும் அச்சப்படும். இலக்கியப் படைப்புகளுக்கான அவரது மதிப்புரைகள் கத்தியின் கூர்மையும் கமலத்தின் மென்மையும் ஒருங்கே கொண்டவை.

1996-இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருகிறது. அவருடைய பல நூறு படைப்புகள் தமிழ் இலக்கிய உலகுக்கு மிக முக்கியமானவை . அவற்றில் கடலூர் சிறையில் மகாகவி கைதியாக இருந்த காலகட்டத்தை ஆய்வு செய்த அவரின் நூல் - 'பாரதி: கைதி எண் 253' , ' கருணைக் கடல் இராமாநுசர் வரலாறு' ஆகிய இரண்டு என் மனதுக்கு மிக மிக நெருக்கமானவை.

கைதி எண் 253 - பாரதியின் வாழ்வைப்பற்றி நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரு பெட்டகம். ராமாநுசரின் வரலாறு , அப்பெருமகனாரின் வாழ்க்கையை ஒரு நாடக அரங்கின் கம்பீரத்தோடு கூடிய பதாகையாக அமைத்து, அதில் ஒரு ஓவியனின் இலாகவத்தோடு சித்திரம் தீட்டுவது போல, சிற்பி அவர்கள் தீட்டியுள்ள அபூர்வமான படைப்பு.பாட்டின் தாளம் ஒருபோதும் தவறாத அவர் கவிதைகள் , லயத்தின் ஆலயம்.

'யமுனையின் நீலக்கூந்தலில் நிகர் இல்லா வைரம்' என்ற சொற்பெருக்கு உள்ளே ஓட , அந்தப் பளிங்கு மாளிகையின் கால் வருடும் யமுனையைப் பார்த்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அழகான அனுபவம் என்கிறார்.

பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

எங்களுக்குள் எப்போதும் பாரதி

'கவிஞர் சிற்பி குறித்து எழுதுவது மிகக் கடினம். அவருடைய பல நூல்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புகள், இலக்கியம், இலக்கியவாதிகள் குறித்து அவர் எழுதியவற்றைப் படித்து இருக்கிறேன். சிலவற்றைத் திரும்பவும் படித்துப் பார்க்கிறேன். பாரதி எங்களுக்குள் எப்போதும் இருக்கிறார்' என்கிறார் விஞ்ஞானியும் கவிஞருமான ய.சு.ராஜன். அவர் கூறியது:

மூன்று மொழிகளில் மிக்க அறிவும் எழுதும் திறமையும் பெற்றவர் சிற்பி; மொழிபெயர்க்கும் திறன் உள்ளவர்; அவற்றில் புது இலக்கியங்களை உருவாக்கும் திறனும் உள்ளவர். அவருக்கு உள் புதைந்த மனிதநேயம், அது மனிதக் குலம் மட்டுமல்லாமல், இயற்கையில் உள்ள எல்லாவற்றுக்கும் பரவும் நேயம்; அன்பு; ஆதங்கம். வாழ்க்கையில் இருந்து விடாமல் படிக்கும் திறன் பெரிது; அரிது; தனித்துவம் உடையது.

'ஒரு கண் பார்வை'யினால் 'ஒரே ஒரு சித்தாந்தம்'தான் என்று முரட்டுப் பிடிகளின் பொறிகளில் சிக்கிக் கொள்ளாமல், குறுகிய நோக்கங்களுக்கு அப்பால் இருந்து இலக்கியம் படைப்பவர்; மேடைகளில் பேசுபவர்; விமரிசனம் செய்பவர். 'இப்படி வளைந்தால் ஒரு திடீர்ப் பரிசு கிடைக்குமே. பதவி கிடைக்குமே' என்ற நப்பாசைகளை அறவே நீக்கிய மன உறுதி இருந்தால்தான் இப்படிச் செய்ய முடியும். மற்ற கவிஞர்களை, அவர்கள் சில அடிகள் எடுத்து வைக்கும் தருணத்தில் ஊக்குவிப்பது ஒரு பெரிய தொண்டு. பலபேருக்கு இப்படித் தொண்டு செய்திருக்கிறார்.

கவிஞர் சிற்பி தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். ஆனால், நாம் அவரைத் தமிழுக்கு மட்டும்தான் சொந்தம் என்று ஒரு பேழையிலே வைப்பது நல்லதல்ல. அவர் உலகக் கவிஞர். ஆங்கிலத்திலும் மற்ற வெளிநாட்டு மொழிகளிலும் அவர் சொற்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

சிற்பியின் கவிதைகளையும், மற்ற படைப்புகளையும் ஆங்கிலத்தில் அழகாகக் கொண்டுவருவது, தமிழ் மொழியை நேசிப்பவர் எல்லோருக்கும் கடமை. இருமொழிவல்லுனர்கள் அத்தொண்டில் இப்பொழுதே முனையட்டும். மற்றவர் இத் தொண்டு நன்றாக, வேகமாக நடத்த நிதியுதவி செய்ய வேண்டும். இதனைப் படிப்போர் இவ்வியக்கத்தை உடனே தொடங்கட்டும்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com