உலகின் சிறந்த நீதிபதி...

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாகப் பணிபுரிந்த ஃபிராங்க் காப்ரியோ அண்மையில் தனது எண்பத்து எட்டாவது வயதில் மறைவுற்றார்.
ஃபிராங்க் காப்ரியோ
ஃபிராங்க் காப்ரியோ
Published on
Updated on
2 min read

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாகப் பணிபுரிந்த ஃபிராங்க் காப்ரியோ அண்மையில் தனது எண்பத்து எட்டாவது வயதில் மறைவுற்றார். 'உலகின் சிறந்த நீதிபதி' என்று அழைக்கப்பட்ட அவருக்கு அஞ்சலிக் கட்டுரைகளை உலக அளவில் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

'கருணை, கனிவு, இரக்கம், அன்பு, ஹாஸ்யம் கலந்த தாயுள்ளம் கொண்ட நீதிபதியான ஃபிராங்க் காப்ரியோ கணையப் புற்றுநோயுடன் போராடி வந்தார்.

மரணிக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பு, தான் குணமாகப் பிரார்த்தனை செய்ததற்காக அவர் நன்றி தெரிவிக்கும் காணொளி வெளியானது. 

காப்ரியோ நீதிபதியாகப் பணிபுரிந்த 'ரோட் தீவு' என்பது வடகிழக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணம். 'நியூ இங்கிலாந்து' பகுதியில் அமைந்துள்ளது. வடக்கு, கிழக்கில் மாசசூசெட்ஸையும், மேற்கில் கனெக்டிகட்டையும், தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

'பெருங்கடல் மாகாணம்' என்று அழைக்கப்படும் இந்த மாகாணம், அமெரிக்காவின் மிகச் சிறிய மாகாணமாகும். நீண்ட கடற்கரையையும், பல தீவுகளையும் கொண்டுள்ளது.

வழக்குகளில் நீதிபதி காப்ரியோ தன்னை குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்தானத்தில் வைத்து மனிதநேயத்துடன் தீர்ப்புகளை வழங்கினார். 'வேண்டுமென்றே குற்றம் செய்தாலும், மனிதாபிமான அணுகுமுறை குற்றம் செய்தவரின் மாற்றங்களை உருவாக்கும்' என நம்பினார். நீதி வழங்குவதில் கருணையுள்ள அணுகுமுறைக்காகப் பேசப்பட்டவர்.

அவரது தொலைக்காட்சித் தொடரான 'காட் இன் பிராவிடன்ஸ்', குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் அவர் காட்டிய அணுகுமுறை குறித்தது. கேப்ரியோ தனது நீதிமன்ற அறையை 'மக்களும் வழக்குகளை கருணையுடனும் இரக்கத்துடனும் சந்திக்கும் இடம்' என்று கூறிவந்தார். அதனால்தான் அவரது விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பாயின. நூறு கோடி உலக மக்கள் ஆர்வத்துடன் கண்டுவந்தனர்.

'விசாரணை எப்படி இருக்குமோ? நீதிபதி என்ன கேட்பாரோ?' என்று  மன அழுத்தத்தில் பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு நீதிபதியின் கேள்விகள் மயில் இறகு கொண்டு வருடுவதுபோன்று, மென்மையாக இருக்கும். நீதிபதியின் இதமான  கேள்விகள்  குற்றம் சாட்டப்பட்டவர்களின்  பலரது மன அழுத்தங்களைக் குறைத்தே விடும். 

ஒரு வயதானவர் மீது வழக்கு. அவரோ, 'தன்னை எப்படியும் விடமாட்டார்கள். தண்டனை நிச்சயம். எதற்காக ஏதாவது சொல்லி  நேரத்தை வீணடிக்க வேண்டாம்'  என்று விசாரணையின் தொடக்கத்திலேயே  தான் குற்றவாளி என்று  ஒப்புக் கொண்டார். நீதிபதி கேப்ரியோ குறும்பாக, 'இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது' என்று சொல்லி, அபராதங்களைக் குறைத்ததோடு , தவணை முறையில் அபராதத்தைக் கட்டச் சொன்னார்.

கல்லூரி மாணவி பார்க்கிங் விதிமீறலுக்காக ஒரு அற்பமான காரணத்தைக் கூறினார், 'சரி... சொன்ன காரணத்தை நம்புகிறேன். ஏனென்றால் அந்தக் காரணத்தை நீ அற்புதமான புன்னகையுடன் கூறினாய்.

அந்தப் புன்னகை போலியாக எனக்குத் தோன்றவில்லை. அதனால் வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன்' என்றார் காப்ரியோ.

ஐந்து குழந்தைகளின் தாய் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு.  அந்தத் தாய் தன் மகளுடன் நீதிபதி முன் ஆஜரானார். 'விதியை அம்மா மீறியிருப்பதால் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று குட்டி மகளிடம் காப்ரியோ கேட்டார். சிறுமியோ  அப்பாவித்தனமாக, 'ஐந்து நாள்கள் சிறை' என்று கூறினார்,  'ஐயா... அம்மாவை மன்னித்து,  விட்டுவிடுங்கள்' என்று சிறுமி கேட்பார் என்று எதிர்பார்த்த நீதிபதி சிரித்துவிட்டார்.  'இனிமேல் விதிகளை மீறக் கூடாது' என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்.

பள்ளி வளாகத்துக்கு அருகில் வேகமாக வாகனம் ஓட்டினார் 96 வயது முதியவர். அவர் தனது ஊனமுற்ற மகனை மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்ல விரைவாக   வாகனம் ஓட்டியதாக விளக்கினார். காப்ரியோவும் புகாரை நிராகரித்து  அபராதம் விதிக்காமல் வயதானவரை விடுவித்தார்.

தாயின் பார்க்கிங் விதிமீறலைத் தண்டிக்க  ஆறு வயதுச் சிறுமியிடம், 'உனது அம்மாவுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?' என்று காப்ரியோ கேட்டார். அந்தச் சிறுமி குறைந்தபட்ச, அதிகபட்ச அபராதத் தொகையைத் தவிர்த்து நடுத்தர அபராதத்தைச் சொன்னார். அவள் புத்திசாலித்தனமாக ஒரு நடுத்தர அளவிலான அபராதத்தைத் தேர்ந்தெடுத்தாள். அதையே அபராதமாக விதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com