பொ.ஜெயச்சந்திரன்
புதுக்கோட்டை தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இளைஞர் ம.கஜேந்திரன் (எ) சீனு, ஆணழகன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுவருகிறார். அதோடு, கிரிக்கெட் போட்டிகளிலும் சாதித்துவருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'இலங்கைப் போரின் காரணமாக, 1990-ஆம் ஆண்டில் எங்கள் குடும்பத்தினர் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்ந்தனர்.
பெரியநாயகிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கேப்பரை லிட்டில் ஃப்ளவர் பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நான் பள்ளிப் படிப்புகளைப் படித்தேன்.
பள்ளியில் நான் படிக்கும்போது, என் தந்தை மருதமுத்து உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். தாய் ரத்தினமாலாவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலிலும் தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் இளநிலைப் படிப்பை முடித்தேன். 'மல்டி மீடியா' டிப்ளமோவையும் முடித்தேன். 2017- ஆம் ஆண்டில் அருண் போட்டோ ஸ்டூடியோவில் வேலைக்குச் சென்றேன்.
ஓய்வு நேரத்தில் முகாமில் கிரிக்கெட் விளையாடுவேன். தமிழ்நாட்டில் முகாம்கள் அளவிலான மாவட்ட, மாநிலப் போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றேன். ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது.
புதுக்கோட்டை அய்யனார்புரத்தில் உள்ள யூஜின் உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளர்கள் கிருஷ்ணமுனி, சத்யா ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில், ஆணழகன் போட்டியில் பங்கேற்றேன். முதல் போட்டியிலேயே ஐந்தாம் இடம் கிடைத்தது. இதனால் மனதுக்குள் புதிய உத்வேகம் உண்டானது.
கரோனா காலத்துக்குப் பின்னர், கிரிக்கெட் பயிற்சி, உடற்பயிற்சி, கடை வேலை ஆகிய மூன்றுக்கும் நேரம் ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
'ராயல் பிட்னஸ்' உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர் மு.ராஜகோபால், எந்தக் கட்டணமும் இல்லாமல் எனக்குப் பயிற்சி அளித்தார். அவரே என்னை பல போட்டிகளுக்கு, தனது சொந்த செலவில் அழைத்துச் செல்வார்.
ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற முடிவு செய்து விட்டால், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். அந்த 6 மாதங்களுக்கும் கிரியேட்டின், வைட்டமின் மாத்திரைகள், கிழங்கு வகைகள் என மாதம்தோறும் குறைந்தபட்சம் தலா 7ஆயிரம் ரூபாய் செலவாகும்.
2022- ஆம் ஆண்டில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் உடற்பயிற்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் நான் முதலிடம் பெற்றேன். அதே அமைப்பு நடத்திய மாவட்ட அளவிலான ஆண் உடலமைப்புப் போட்டியில் 50 முதல் 85 கிலோ எடைப் பிரிவில் 'சாம்பியன் ஆஃப் சாம்பியன்' என்ற பட்டத்தையும் பெற்றேன்.
சென்னை பிட் சிட்டி கிளாசிக் சார்பில், தி.நகரில் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆண் உடலமைப்புப் போட்டியில் ஐந்தாம் இடத்தைப் பெற்றேன். இவ்வாறு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுவருகிறேன்.
எனது வெற்றிக்கு, சகோதரர்கள் அ.வரதராஜன், நாதன், நேசமணி, ரீனோஜ், கார்த்திக், சகோதரி ஹேமா, உஷா ஆகியோர் உறுதுணையாக இருந்துவருகின்றனர். இலங்கைத் தமிழர் முகாம்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும்' என்கிறார் கஜேந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.