புதுப்பொலிவுடன் புலவர் குழு!

தமிழைக் காப்பதையும், அதன் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் சென்றவர் 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம்.
முத்தமிழ்க் காவலர்  கி.ஆ.பெ. விசுவநாதம்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்
Updated on
2 min read

தமிழானவன்

தமிழைக் காப்பதையும், அதன் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் சென்றவர் 'முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ. விசுவநாதம். இதற்கு சோமசுந்தர பாரதியார் ஆலோசனை அளிக்க, அதன்படி கி.ஆ.பெ.விசுவநாதத்தின் மணி விழாவில் 'தமிழகப் புலவர் குழு' உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவின் சார்பில் அவர் சுமார் 7 ஆயிரம் தமிழ்த் திருமணங்களை நடத்தியதோடு, ஆண்-பெண் சமநிலையை உருவாக்கினார். 97-ஆவது வயதில், மருத்துவமனையில் அவர் இருந்தபோது , இந்தக் குழுவைக் கலைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

அப்போது உடனிருந்த மகள் மணிமேகலையோ, 'குழுவை நாங்கள் நடத்துகிறோம்' என்று சொன்னார்.

தமிழகப் புலவர் குழுவின் செயலாளரான எண்பது வயதான மணிமேகலை கண்ணன், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற் புலத்தின் சார்பில் குழுவின் 118-ஆவது கூட்டத்தை அண்மையில் நடத்தினார். அப்போது, கி.ஆ.பெ. விசுவநாதம் 127 -ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், மணிமேகலை கண்ணனுடன் ஒரு சந்திப்பு:

தமிழகப் புலவர் குழுவின் செயல்பாடு பற்றி ?

1899 டிசம்பர் 1-இல் என் தந்தை கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்தார். அவர் இல்லையென்ற குறையைத் தவிர வேறொன்றும் இல்லை. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன். பல்வேறு பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் ஏ.சி. சண்முகம், ஐசரி கணேசன், பாரிவேந்தர், ஸ்ரீதரன் உள்ளிட்டோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தற்போது 9 பல்கலைக்கழகங்களில் புலவர் குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளோம். அடுத்த கூட்டத்தை சென்னை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளோம்.

என்னுடைய தந்தை கி.ஆ.பெ. விசுவநாதம் காலத்திலேயே குழுவுக்கு என்று திருச்சியில் பெரும் சொத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதைப் பாதுகாத்து வருகிறோம்.

சென்னையில் அனைவரும் வந்து செல்லும் வகையில் முக்கிய இடத்தில் குழுவுக்கு ஒரு நிரந்தரமான கட்டடத்துக்கான இடத்தைத் தேடி வருகிறோம்.

முதல்வர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எங்கள் குழுவை அழைத்துப் பேசும்போது, நாங்களும் ஆலோசனைகளை அளித்து வந்தோம்.

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கு முன்பாக தமிழகப் புலவர் குழுவின் ஆலோசனையை அறிய வேண்டும் என்று அரசுக்கு கோ. விசுவநாதன் கோரிக்கை வைத்துள்ளார்.

குழுவில் இளையத் தலைமுறையினர் இல்லையே?

அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இளையத் தலைமுறையினரை உறுப்பினர்களாகச் சேர்ப்பது என்றும், வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் ஆலோசனை மட்டும் அளிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழகப் புலவர் குழுவில் தமிழ் மட்டுமின்றி வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்களா?

என்னுடைய தந்தையின் காலத்தில் 'தைப் பிறந்தால் வழி பிறக்கும்' திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.கே. வேலன் உறுப்பினராக இருந்தார். பண்டிதர், வித்வான், புலவர் உள்ளிட்ட 7 துறைகளில் ஒவ்வொரு துறைக்கும் 7 பேர் வீதம் மொத்தம் 49 பேர் உறுப்பினர்கள்.

தற்போது பண்டிதர், வித்வான், புலவர் உள்ளிட்ட பட்டயங்கள் இல்லாத நிலையில் தமிழ் படித்தவர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அனைவரும் தமிழ் உணர்வாளர்களாக இருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.பி. முத்துராமனும் உறுப்பினராக உள்ளார்.

கி.ஆ.பெ. விசுவநாதத்தால் நிறைவேறாத செயல்திட்டம் என்ன?

'நான் உயிரோடு இருக்கும்போதே தமிழ் ஆட்சி மொழி, பயிற்று மொழியாக இருந்தால் மகிழ்ச்சியோடு இறப்பேன். இதுதான் என்னுடைய நிறைவேறாத ஆசை' என்று 1994- ஆம் ஆண்டு டிசம்பர் 28 -இல் சொன்னார்.

ஐம்பதாண்டு காலமாக தமிழ்நாட்டில் இரண்டு மாபெரும் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் இதைச் செயல்படுத்த முடியவில்லை. எங்கோ தடை இருக்கிறது என்பது தெரிகிறது.

'நான் சொல்லுகிற மாதிரி செய்தால் இந்த ஆண்டிலேயே தமிழ் பயிற்று மொழி, ஆட்சி மொழியாக மாறும். தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு முதல் மொழியாக தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும்.

இரண்டாவது மொழி தொடர்பு மொழியாக ஆங்கில மொழி. மூன்றாவது மொழிப்பாடமாக அவரவர் தாய் மொழியோ அல்லது அவர்கள் விரும்பும் வேறு எந்த மொழியாகவோ படிக்கலாம் என்ற திட்டம் வந்தால் இதற்குத் தடை இருக்காது என்று நம்புகிறேன்' என்று சொன்னவர் கி.ஆ.பெ. விசுவநாதம்.

தற்காலத்தில் தமிழ் மீதான தாக்குதல் எப்படி இருக்கிறது ?

தற்போது தமிழ் மீதான தாக்குதல் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஒருகாலத்தில், 'மணிப்பிரவாள நடை' என்றெல்லாம் இருந்தது. இப்போது இல்லை. தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பு இருக்கத்தான் செய்கிறது. அதுவும் மாறிவிடும்.

தமிழ்த் திருமணங்களில் கி.ஆ.பெ.விசுவநாதம் பயன்படுத்திய உத்தி என்ன ?

ஆண்-பெண் சமம் என்ற கருத்தின் அடிப்படையில் செயல்பட்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம். 'தமிழ்த் திருமணங்களில் இணையும் ஆணும் பெண்ணும் காதை நான்காகவும், கண்ணை நான்காகவும் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், வாயை மட்டும் ஒன்றாக சுருக்கிக் கொள்ள வேண்டும்' என்று வலியுறுத்தியவர் என் தந்தை கி.ஆ.பெ.விசுவநாதம்.

கணவன் கொடுத்த வாக்குறுதியை மனைவியும், மனைவி கொடுத்த வாக்குறுதியை கணவனும் நிறைவேற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என் தந்தையின் கருத்து. இப்போது நானும் பல்வேறு தமிழ்த் திருமணங்களை நடத்தி வருகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com