அபூர்வன்
'மொழிபெயர்ப்பு என்றாலே மிக எளிமையாக, சாதாரணமானவரும் படிக்க வேண்டும் என்கிற வகையில் இருக்க வேண்டும் என்றால், அதை பார்வையின் குறைபாடு என்றுதான் சொல்வேன். தமிழில் எழுதப்பட்டது போலவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் வாசகர்கள் வாசிப்பின் ஆரம்பநிலையில் இருக்கிறார்கள் என்றே அர்த்தம்' என்கிறார் மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆரணியைச் சேர்ந்த இவர், ஆங்கிலம் வழியாகத் தமிழில் உலக இலக்கியங்களையும், இந்திய ஆங்கில எழுத்துகளையும் மொழியாக்கம் செய்து வருகிறார். ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி, அருந்ததி ராய் ஆகியோரது படைப்புகளில் இவர்களது மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. மொழிபெயர்ப்பு மட்டுமன்றி, அதுகுறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், கலந்தாய்வுகள், விவாதங்கள், பயிற்சிகள்... என்று தொடர்ந்து இயங்கி வருகிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
'மொழிபெயர்ப்பு ஒரு வேலை - பெரிய படைப்புச் செயல் அல்ல' என்றும்; 'அது மறு ஆக்கம், நிகர்நிலை படைப்புப் பணி' என்றும் வெவ்வேறாகக் கூறப்படுகிறது. நீங்கள் கூறுவது என்ன?
இரண்டுமே ஒரே கருத்தின் இரண்டு பக்கங்கள்தான். மொழிபெயர்ப்பு என்பதில் மறு ஆக்கம், நிகர்நிலைப் படைப்புப் பணி எல்லாமும் சேர்ந்துதான் இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு மொழியில் பெயர்ப்பதுதான்.
ஆனால், புனைவு மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உள்பிரதியை - உணர்வுகளைப் பெயர்ப்பதுதான் புனைவுக்கான மொழிபெயர்ப்பு. மறு ஆக்கம் என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். என்னைப் பொருத்தவரை படைப்பாளர்கள் உயர்ந்தவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் அதற்குக் கீழானவர்கள் என்று நான் ஒருபோதும் நினைப்பதே கிடையாது.
மொழிபெயர்ப்பு நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்து ஒரு மூலப் படைப்பின் ஆசிரியர், 'எல்லாப் புகழும் மொழிபெயர்ப்பாளருக்கே' என்கிறார். இன்னொருவர் ஒரு மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில், மொழிபெயர்ப்பாளருக்குக் கைத்தட்டல் கிடைத்தபோது மிகவும் சினம் கொள்கிறார். மொழிபெயர்ப்பாளரின் இடம் எது?
கர்நாடகாவில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. பானு முஷ்டாக்குக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. அந்தக் கூட்டம் பெரிதும் ஆங்கிலத்தில் நடக்கக் கூடியது. அதனால் மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தியிடம் எல்லாரும் கேள்வி கேட்டபோது, அந்த அம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் தீபா இல்லை என்றால், அந்த அம்மாவுக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்காது.
தில்லியில் இருக்கும் எனது ஹிந்தி நண்பர்கள் கீதாஞ்சலி ஸ்ரீயின் அந்த 'ரெட் சமாதி' இந்தியில் சுமாரான படைப்புதான் என்று சொன்னார்கள். அது டெய்ஸி ராக்வெல்லின் ஆங்கில மொழிபெயர்ப்பால் மிகவும் புகழ் பெற்றதாகிவிட்டது. அந்த மொழிபெயர்ப்பின் மிகச் சிறப்பான ஆங்கிலத்தால்தான் கவனம் அடைந்திருக்கிறது என்றார்கள். மொழிபெயர்ப்பாளர்களையும் படைப்பாளிகள் ஒரே மாதிரி பார்ப்பதில்லை.
ஓரான் பாமுக் தனக்கு நோபல் பரிசு கிடைத்தவுடன் அந்தத் தகவலை முதலில் சொன்னது அவரது மொழிபெயர்ப்பாளர் எர்டாக் கோக்னருக்குத்தான். அவருக்கு முதலில் போன் செய்து, 'இந்த விருது உன்னால்தான் கிடைத்தது' என்றார். மார்க்கேஸ் அவரது, 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கிரிகரி ரபாஸாவிடம், 'எனது ஸ்பானிய மூலத்தைவிட நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரதி மிகவும் நன்றாக இருக்கிறது' என்றார். அது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்.
ஏனென்றால், அசல் படைப்பைவிட ஒரு மொழிபெயர்ப்பு சிறந்ததாகத் தோன்றுவது மொழிபெயர்க்கப்பட்ட மொழியின் தனித்துவ சிறப்பு காரணமாக இருக்கலாம். பலரிடமும் தான் ஒரு படைப்பாளர், அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர்தானே என்கிற இளக்காரம் உள்ளது. மொழிபெயர்ப்பாளரை இளக்காரமாக, மட்டமாகக் கருதும் இச்சூழலில் மொழிபெயர்ப்பாளர் திமிரோடும் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பேன். அதனால் படைப்பாளியை விட உயர்வாகக் காட்டுவதாக அர்த்தம் இல்லை. என்னை யாரும் மேலாதிக்கம் செய்ய விடுவதில்லை.
மொழிபெயர்ப்பு, படிப்பவருக்குச் சிக்கல் இல்லாமல் சரளமாக இருக்க வேண்டுமா? மூல ஆசிரியரின் மொழியின் இயல்புத்தன்மை, தொனி தான் இருக்க வேண்டுமா?
'எழுத்தில் தோல்வி அடைந்தவர்கள்தான் மொழிபெயர்ப்புக்கு வருகிறார்கள்' என்று கிண்டலாகச் சொல்வார்கள். எல்லாரையும் அப்படிச் சொல்ல முடியாது. பெரிய எழுத்தாளர்களும்கூட மொழிபெயர்ப்புக்கு வந்திருக்கிறார்கள். 'மொழிபெயர்ப்பு மட்டுமே செய்வேன்' என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
தமிழில் ஆர்.சிவகுமார் இப்போது இரண்டு நாவல்களை எழுதி இருக்கிறார். வெ.ஸ்ரீராம் சொந்தமாகவும் எழுதியிருக்கிறார். அவரது பிரெஞ்சு கவிதைகள் மொழிபெயர்ப்பு அற்புதமாக இருக்கும். ஒரு காலகட்டத்தில் ஒரு தலைமுறையையே அவரது மொழி பெயர்ப்பு மாற்றி இருக்கிறது. மொழிபெயர்ப்பு வடிவம் சிக்கல் என்பதும், சரளமாக இருப்பதும் மொழிபெயர்ப்பாளரின் மொழி வளத்தைப் பொறுத்தது.
நான் மொழி பெயர்த்த நார்வேஜிய நாவலான 'உடைந்த குடை' என்னைப் பொருத்தவரைக்கும், ஆங்கில எழுத்துக்கு 100% நேர்மையாக தமிழில் மொழி
பெயர்க்கப்பட்ட ஒன்று. ஒரு மொழிபெயர்ப்பு என்பது தேக்கரண்டியால் ஊட்டுவது போல் இருக்க வேண்டும் என்று நினைப்பது பாமரத்தனமானது. அருந்ததிராயை மொழிபெயர்க்கும்போது அருந்ததிராயின் குரல் என்னுடைய மொழிபெயர்ப்பில் வரவேண்டும் என்பதில்தான் நான் கவனமாக இருப்பேன். முரகாமியின் எனது மொழிபெயர்ப்பைப் படித்தால் எளிமையாக இருக்கும்.
ஆனால், ஓரான் பாமுக் எழுத்து அப்படி இருக்காது. நுட்பமானது. ஒரு வரியில் அத்தனை விஷயங்களைப் புகுத்தி எழுதி இருப்பார். அவரது ஒரு வரியில் உள்ளதை பதவுரை போல எளிமைப்படுத்தி தனியே பிரித்து எழுதினால் ஒரு பத்தி வரும். அது சரியான மொழிபெயர்ப்பாக இருக்குமா? பாமுக்கை அவரது மொழித்தன்மையிலேயே மொழிபெயர்ப்பதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும்.
நடிகர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையத்துடன் இணைந்து 2024-இல் மொழிபெயர்ப்பு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடத்திய அனுபவம் எப்படி ?
கமல் பண்பாட்டு மையத்திலிருந்து செல்வேந்திரன் பேசியபோது, 'கமல் சொந்தமாக ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க விரும்புகிறார். அதன் மூலம் திரைத் தொழில்நுட்பங்கள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் கொண்டு வர விரும்புகிறார். சில இலக்கியங்களையும் தமிழில் கொண்டு வர விரும்புகிறார்.
அதற்காக இளம் மொழிபெயர்ப்பாளர்களைத் தமிழில் உருவாக்க வேண்டும்' என்பது அவரது நோக்கமாக இருக்கிறது. அதற்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்ய விரும்பினார். கமல் சார் தான் உங்கள் பெயரைச் சொல்லிக் கேட்கச் சொன்னார்' என்றார்.
இதை நான் ஆமோதித்து, என்னுடைய குரு ஆர்.சிவகுமார் வழிகாட்டுதலின்படி 20 பேரைத் தேர்ந்தெடுத்து எப்படி மொழிபெயர்ப்பது? எதை மொழி பெயர்ப்பது ? செய்யக் கூடியவை, கூடாதவை என்னென்ன என்று இருநாள்கள் பயிற்சி அளித்தேன். தொடர்ச்சியாக வீட்டுப் பயிற்சிகளைக் கொடுத்து வருகிறேன்.
நான் அவர்களுக்குத் தருகின்ற ஆங்கிலக் கதைகளை மாணவர்கள் மொழிபெயர்த்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இணைய வழி ஜூம் மீட்டிங் நடக்கும். அதில் அவர்களது மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகள், திருத்தங்கள் சொல்லப்படும்.
ஓராண்டாக இது நடைபெறுகிறது. சிலர் மட்டும் விலகிவிட்டார்கள், மற்றவர்கள் தொடர்கிறார்கள். பயிற்சி நடைபெற்ற காலத்தில் கமல் அமெரிக்காவில் இருந்தார். அதன்பிறகு மார்ச் 1-ஆம் தேதி எங்களை அவர் சந்தித்தார். அந்தப் பயிற்சி, ஜூம் சந்திப்பு அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டு அனைத்தையும் அவர் பார்த்திருக்கிறார். கலந்து கொண்டவர்கள் பெயர்களை எல்லாம் நினைவு வைத்துக் கொண்டு கேட்டார்.
அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த புத்தகங்களையெல்லாம் எனது மாணவர்கள் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கமலிடம் கூறினேன், 'நான் தமிழ் இலக்கிய உலகத்துக்கு இதுவரை 28 மொழிபெயர்ப்பு நூல்களை அளித்தது பெரிய பங்களிப்பு அல்ல. இந்த 16 மாணவர்களை உருவாக்கியதுதான் என்னுடைய சாதனை' என்றேன்.
இன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல தேவை இருக்கிறது. அந்த மாணவர்களில் 3 பேர் காலச்சுவடுக்காகவும், 2 பேர் ஜீரோ டிகிரி, சிலர் எமரால்டு, ஆழி பதிப்பகங்களுக்கு என்று இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'பெருநகரங்களில் நான் சந்தித்த, உயர்ந்த ரசனை கொண்ட கலாபிமானிகளிடம் பொதிந்திருக்கும் வன்மத்தையும் துவேஷத்தையும் கண்டவுடன் அழகியல் ரசனையல்ல - மனிதத்துவம்தான் உயர்ந்தது என்பது புரிந்திருக்கிறது'என்றதன் பின்னணியில் கசப்பான அனுபவங்கள் உள்ளனவா?
நான் பிறந்து வளர்ந்த ஆரணியை 'இலக்கிய மறைவுப் பிரதேசம்' என்றுதான் சொல்ல வேண்டும். எனது நண்பர் 'அறம் செய்வோம்' சுதாகர் மூலம் ஆரணியில் புத்தகத் திருவிழாக்கள், எழுத்தாளர் சந்திப்புகள், வாசிப்பு இயக்கங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.
ஆரணி தொண்டை மண்டலம். இன்றைய தொண்டை மண்டலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு அறிவுக் கேந்திரமாக இருந்த பகுதி. அருணகிரிநாதர் தொடங்கி நிறைய சொல்லலாம். எனது நண்பர் ரெங்கையா முருகன் இதைப் பற்றிய பெரிய ஆய்வையே செய்திருக்கிறார். ஆரணி நகர மக்கள் மிகவும் எளிமையான மனிதர்கள், வெளிப்படையான மனம் கொண்டவர்கள். சென்னையில் இருக்கிற அறிவுஜீவிகள் எனப்படுபவர்களிடம் இருக்கிற வன்மம் இவர்களிடம் கிடையாது.
நான் வெள்ளந்தியாகப் பழகிய பல படைப்பாளிகளிடம் நான் மிகவும் காயப்பட்டு இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், என்னிடம் பேசும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் 'நீ எல்லாம் ஒரு சாதாரண மொழிபெயர்ப்பாளர்தானே' என்கிற இளக்காரமான தொனியில் பேசுவார்கள். இவை தனிப்பட்ட முறையில் என்னைக் கோபமூட்டுபவை.
எனது அக்கம்பக்கம் உள்ளவர்கள், ஊர்க்காரர்கள் எந்த இலக்கியமும் படிக்காமலேயே மேன்மையான குணத்துடன் இருக்கும்போது இப்படிப்பட்ட அறிவு ஜீவிகள் எனது மதிப்பில் தாழ்ந்து விடுகிறார்கள். அதனால்தான் 'அறிவு ஜீவிகள் சூழ வாழ்வதைவிட, சாத்வீகிகளோடு வாழ்வது மேலானதுதானே!'என்று கூறினேன்.
மொழிபெயர்ப்புப் பணி சார்ந்து அழைப்பின்பேரில் வெளிநாடுகள் சென்று வந்த அனுபவங்கள் பற்றி?
இது வெளிநாடுகளில் சகஜமான ஒன்று. தமிழுக்குத்தான் இது புதிதாக இருக்கிறது. 2009 -இல் காலச்சுவடு கண்ணனிடம் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது. 'நீங்கள் ஜான் பான் வில்லின் 'கடல்' நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதால் உங்களைக் கெளரவிப்பதற்காக அயர்லாந்து அரசாங்கம் உங்களை ஒரு மாதம் டப்ளினுக்கு அழைக்கிறார்கள்' என்றார். அப்போது எனக்கு அது கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. அவர் பிராங்க்பர்ட் சர்வதேச புத்தகச் சந்தைக்குச் சென்றபோது நான் கேட்டுக்கொண்டபடி 'கடல்' நாவலுக்கு மொழிபெயர்ப்பு உரிமை பெற்றார்.
அந்தக் கடல் நாவல் நடக்கும் டப்ளின் நகரம் சென்று கதை நிகழும் பின்னணி இடங்கள் எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டால்தான் அந்த மொழிபெயர்ப்பு நன்றாக வரும் என்று அயர்லாந்து அரசின் இலக்கியப் பரிமாற்றத் துறை என்னை அழைத்து, 'இங்கே வந்து எழுதுங்கள்' என்று கெளரவித்தார்கள். அதுபோல 'ஷகி பெயின்' என்ற புக்கர் பரிசு பெற்ற ஸ்காட்லாந்து நாவலை மொழிபெயர்க்கும் போது ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு சர்வதேச எழுத்தாளர் முகாமுக்கு என்னுடைய பதிப்பாளர் காலச்சுவடு கண்ணன் மூலமாக அழைத்தது.
க்ளாஸ்கோ நகரத்திலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தள்ளி கோவ் என்ற ஒரு வனப் பகுதியில் அமைதியான சூழலில் அமைந்த சர்வதேச எழுத்தாளர் முகாம் அது. அங்கு எந்த வாகன சத்தமும் இருக்காது. நீரோடைகள், பறவைகள், சில்வண்டுகள் ஒலி தான் கேட்கும். உணவுக்கு அடிப்படையான பொருள்களுக்கான பணம் கொடுப்பார்கள். அதற்கான பொருளை வாங்கிக்கொண்டு நாமே சமைத்துச் சாப்பிட வேண்டும்.
அப்படி அங்கே தங்கி இருந்த இரண்டு மாதங்கள் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நமக்கு இது புதிதாக இருக்கிறது. அங்கே வாரா வாரம் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு சர்வதேச புத்தகக் காட்சி நடத்துவது மட்டுமல்லாமல், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வெளிநாட்டு எழுத்தாளர்களையும் வரவழைத்து இப்படிச் செய்ய வேண்டும்.
நீங்கள் எழுதும் கட்டுரைகளே புனைவு மாதிரி உள்ளன. நீங்கள் ஏன் எழுத்துப்பக்கம் செல்லாமல் மொழிபெயர்ப்பில் ஆழ்ந்துவிட்டீர்கள்?
நான் கல்லூரிக் காலத்தில் கதை, கவிதைகள் எழுதி இருக்கிறேன். நான் ஒரு சராசரியான நடுத்தர வர்க்கத்திலிருந்து பிறந்து வளர்ந்தவன். எனக்கு எந்த பெரிய போராட்டங்களும் சிக்கலும் இல்லாத வாழ்க்கை அமைந்தது. மகத்தான இலக்கியங்களை வாசிக்கும்போது நான் எழுதும் கதைகளை அவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். என் அனுபவப் போதாமை விளங்கும். அதுவே என்னை கதைகள் எழுதுவதிலிருந்து நிறுத்திவைத்தது.
ஆனால், என்னிடம் புனைவுக்கான மொழி இருப்பதால்தான் வெற்றிகரமான மொழிபெயர்ப்பாளராக இயங்க முடிகிறது.
பெரிய அங்கீகாரம் இல்லாததும், நேரத்தை விழுங்குவதும், உடல், மன ரீதியில் வலிகள் நிறைந்த இந்தப் பணியைச் செய்வதற்கு எது உங்களைத் தூண்டுகிறது?
பல படைப்புகளைப் படிக்க முடிகிறது. படைப்பாளிகளை அறிய முடிகிறது. அவர்கள் உலகத்தில் வாழ முடிகிறது. அவர்களின் மொழி வளத்தை, அதைப் பயன்படுத்தும் லாகவத்தை அறிய முடிகிறது. அதைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது எனக்கு பெரிய பயிற்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அந்தப் படைப்பில், அந்தப் படைப்பாளிகளுடன் வாழும்போது அவர்கள் ஆன்மாவைப் புரிந்து கொள்ளும்போது எனக்கு இனம் புரியாத மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் கிடைக்கின்றன.
தமிழுக்கு வளம் சேர்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற புரிதலைவிட பெருமிதம் அளிப்பது எதுவாக இருக்க முடியும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.