

மீண்டும் சமந்தா திருமணம்!
நடிகை சமந்தாவும், 'ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவும் காதலித்து வருவதாக சில நாள்களாகத் தகவல்கள் வெளிவந்தன. இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாயின. ஆனால், அதுகுறித்து இருவரும் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. இவர்களுக்கு கடந்த திங்கள்கிழமை அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
வெறும் தகவலாகப் பேசப்பட்டு வந்த செய்தியை, நடிகை சமந்தா உறுதிப்படுத்தி, அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். திருமணம் எளிமையான முறையிலேயே நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டார்களாம்.
ஓய்வு குறித்து கமல்!
ஸ்டண்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்காகத் தயாராகி வருகிறார் கமல்ஹாசன். இந்தப் படத்துக்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல்ஹாசன் அண்மையில் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவர் ரிடையர்மென்ட் பற்றிய கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார். இந்த நிகழ்வில் தொகுப்பாளர், ' தக் லைஃப் போன்ற உங்களின் புதிய படங்களை 'கமலின் கம்பேக்' என்று பிராண்ட் செய்வது சரியா? இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா?' என கமல்ஹாசனிடம் கேட்டார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல்ஹாசன், 'புதிய காம்போக்கள் வரவேண்டும் என்பது முக்கியம். பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் 'நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா?' என இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால், மோசமான படங்களை எடுக்கும்போது எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், 'இப்போது நிறுத்தாதே, ஒரு நல்ல படம் செய்துவிட்டு ரிடையர்மென்ட் எடுத்துக்கொள்' எனச் சொல்வார்கள். இன்னும் நான் அந்த ஒரு நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார்.
சிவகுமார் நெகிழ்ச்சி!
தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இந்தப் பட்டத்தைப் பெற்ற பிறகு, சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
'நான் பிறந்து 10 மாதங்களிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். அவர் கருப்பா?, சிவப்பா? என்றுகூட எனக்குத் தெரியாது. தனி ஆளாக எனது அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். அந்தச் சமயத்தில் எங்களிடம் எந்த வசதியும் கிடையாது. தண்ணீர், மின்சாரம் என எந்த வசதியும் எனது ஊரில் இருக்காது.
அப்படியான ஓர் ஊரில் முதன் முதலில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றது நான்தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் என்ஜினீயராக வேண்டும், மருத்துவராக வேண்டும், வழக்குரைஞராக வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், எனக்கு ஓவியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
சென்னைக்கு வந்த நான் 'மோகன் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தில் சிவாஜி கணேசனின் பரிந்துரையில் சேர்ந்தேன். அதன் பிறகு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன். விடுமுறை நாள்களில் தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில்களில் அமர்ந்து அங்குள்ளவற்றை ஓவியமாக வரைவேன். நாடு முழுவதும் சுற்றி நான் ஓவியங்களை வரைந்திருக்கிறேன்.
ஆனால், அதற்கெல்லாம் மதிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் திரைப்படத் துறைக்குச் சென்றேன். அந்தக் காலகட்டத்தில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் எல்லாம் உச்சத்தில் இருந்தார்கள். பிறகு என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது என்று படங்களில் கடவுள் வேஷம் போட்டு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்கள். 'நாடக நடிப்பில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது' என்று இந்தியா முழுவதும் சென்று 1,000 நாடகங்களில் நடித்தேன். அந்த அனுபவங்களை வைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.
40 வருஷம் சினிமாவில் பயணித்துவிட்டது போதும் என்ற முடிவெடுத்த பிறகுதான் பேச்சாளரானேன். கம்பராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன். ஓவியர், நடிகர், பேச்சாளர் என்ற தகுதியின் அடிப்படையில்தான் இந்தப் பட்டத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது' எனப் பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.