

மாலை நடைப்பயிற்சியின்போது மார்புப் பகுதியில் கனத்த உணர்வு ஏற்படுகிறது. சிறிது அமர்ந்து ஓய்வு எடுத்தவுடன் மறுபடியும் நடக்க முடிகிறது. சர்க்கரை உபாதையும் உள்ளது. இதற்கான காரணங்கள், ஆயுர்வேத முறையில் தீர்வு என்ன?
-சாய்ராம், புதுவை.
அன்றாட உடற்பயிற்சியின் முக்கியப் பகுதியாக பலர் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் 'காலை அல்லது மாலை நடை' முறையில் உடல்நலத்தைப் பராமரிக்க முயற்சிக்கிறார்கள். உங்களில் சிலருக்கு - குறிப்பாக நீங்கள் அனுபவிப்பது போல் மாலை நேரத்தில் 10 - 15 நிமிடங்கள் நடந்தவுடன் மார்புப் பகுதியில் கனத்த உணர்வு, இதயப் பகுதியில் சுமை, சற்று ஆழ்ந்த மூச்சு எடுத்தால் நிம்மதி, சில நிமிடங்கள் உட்கார்ந்தால் சீராகிவிடுதல், மீண்டும் எழுந்து நடக்கும்போது எந்தத் தொந்தரவும் இல்லாமை போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
இது சில நேரங்களில் சாதாரண உடல் சோர்வாக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட நபர்களில் இது இதய ரத்த ஓட்டக் குறைபாடு அல்லது சர்க்கரை நோய் தொடர்பான நரம்பு செயலிழப்பு போன்ற முக்கியக் காரணிகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். இவ்வாறான மார்பு கனத்த உணர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்.
(அ) இதய ரத்த ஓட்டம் தற்காலிகமாக குறைபடுதல் (ஸ்டேபிள் ஆஞ்சினா) போன்ற அறிகுறி. சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தக் குழாய்கள் (கொரனரி ஆர்டிரீஸ்) மெல்ல மெல்ல மங்கலாக ஆகலாம். நடை ஆரம்பத்தில் இதயத்தின் வேலைச் சுமை திடீரென அதிகரிக்கும்போது ரத்த ஓட்டம் போதாமை ஏற்பட்டு, மார்பு அழுத்தம், சுமை, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தால் குறைதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
(ஆ) சர்க்கரை நோய் காரணமான நரம்பு பலவீனம் (அட்டனமிக் நியூரோபதி). சில வருடங்களாக சர்க்கரை உபாதை இருந்தால், இதயம், மூச்சுக் குழாய்களின் தசைகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் (அட்டனமிக் நர்வ்ஸ்) பலவீனமாகலாம். இதனால், இதயத் துடிப்பு சரியாக ஏற இறங்காமல் இருத்தல். நடை ஆரம்பித்ததில் அதிகச் சுமை உணர்வு. ஓய்வு எடுத்தபின் உடல் சீர்படுதல். இவை எல்லாம் சாதாரணமாக சர்க்கரை உபாதை உடையவர்களிடம் காணப்படும்.
(இ) அஜீரணம் மற்றும் வயிறு அழுத்தம்: மாலை நேரத்தில் வேலைச் சோர்வு, தேநீர், சிற்றுண்டி ஆகியவை செரிமானக் கோளாறு உருவாக்கும். இது, வயிற்று மேல் பகுதியில் அழுத்தம், மார்பு வரை தாக்கும் கனத்த உணர்வு எனக் காட்டும்.
(ஈ) சுவாசக் குழாய் இறுக்கம் (பிரான்கோஸ்பாஸம்): மாலை நேர ஈரப்பதம் சிலருக்கு சிரமத்தை உண்டாக்கி மார்புப் பகுதியில் நிறை உணர்வு தரலாம். ஆனால் இவை அனைத்திலும் இதய பிரச்னை இல்லையா? என்பதை உறுதி செய்வது அவசியம். முதல் படியாக இ.சி.ஜி., எக்கோ, டி.எம்.டி. செய்து பார்ப்பது பாதுகாப்பானது.
ஆயுர்வேத மருந்துகளாகிய அர்ஜுனாரிஷ்டம், ஹிருதயார்னவரஸம் மாத்திரை, பிரபாகரவடி, இந்து காந்தம் கஷாயம், தான்வந்திரம், வாயு குளிகை, ஹிங்குவசாதி சூரணம் போன்ற தரமான மருந்துகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தி நலம்பெறலாம்.
சாப்பிட வேண்டியவை: மென்மையான கஞ்சி வகைகள், பாசிப்பருப்பு சாறு, சீரகம், மஞ்சள், மிளகு சேர்ந்த உணவு, ஆளி விதை சூரணம் 5 கிராம், நனைய வைத்த 4 - 5 பாதாம், வெள்ளரி, கீரை வகைகள்.
தவிர்க்க வேண்டியவை: மாலையில் கனமான உணவு, அதிக தேநீர்/ காபி, எண்ணெய் பொரியல், பஜ்ஜி, சமோசா, மைதா பொருள்கள், குளிர்பானங்கள்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்: நடை நேரத்தை மாற்றுதல். காலை 6 - 7 மணி இடைப்பட்ட நேரம் இதயத்துக்கு நல்லது. நடையை மெல்லத் தொடங்கி மெதுவாக வேகம் உயர்த்த வேண்டும். சுவாசப் பயிற்சி, இரவு 10 மணிக்குள் உறங்குதல்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.