மையாடல் விழா

ஓலைச்சுவடி படியெடுப்பாளராகவும், கன்னடம் - சமஸ்கிருத மொழிகளில் பட்டயக் கல்வி முடித்தவராகவும் இருப்பவர் தஞ்சாவூர் மானம்புசாவடியில் வசிக்கும் முனைவர் அ.ரம்யா.
மையாடல் விழா
Updated on
1 min read

பொ.ஜெயச்சந்திரன்

ஓலைச்சுவடி படியெடுப்பாளராகவும், கன்னடம் - சமஸ்கிருத மொழிகளில் பட்டயக் கல்வி முடித்தவராகவும் இருப்பவர் தஞ்சாவூர் மானம்புசாவடியில் வசிக்கும் முனைவர் அ.ரம்யா. இவர் இதுவரை 55-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளைப் படியெடுத்துள்ளார்.

புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் பேசியபோது:

'பனை ஓலைகளில் எழுதப்பட்டவை 'ஓலைச் சுவடிகள்' என்றும்; தாளில் கையால் எழுதப்பட்டவை 'காகிதச் சுவடிகள்' என்றும்; களிமண், பலகை, மூங்கில் பட்டை, பட்டுத் துணி முதலியவற்றில் எழுதப்பட்டவை அவற்றின் பெயரிலேயே அழைக்கப்படுகின்றன.

சுவடிகள் சிதிலமடையும்போதோ, நகல்கள் தேவைப்படும்போதோ பண்டைய காலங்களில் சுவடிகளை புதியதாகப் படியெடுத்தனர். தாள்களின் வருகைக்குப் பின்னர், அவற்றைக் கையால் எழுதிப் படியெடுத்தனர். சுவடியில் உள்ள எழுத்துகள் அச்சிடப்பட்டதும், நூல்களின் எண்ணிக்கைப் பெருகியது. சுவடிகள் ஒவ்வொன்றாக, சுவடிப்பதிப்புகளாக அச்சு நூல் வடிவில் வெளிவந்தன.

அக்காலத்தில் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு, ஊமத்தை இலைச்சாறு, மாவிலைக் கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டி செய்த மையைத் தடவுவார்கள். அந்த மை எழுத்துகளை விளக்கமாகக் காட்டுவதோடு, கண்ணுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும். அவை பூச்சிகளின் பாதிப்புகளிலிருந்தும் சுவடியைப் பாதுகாக்கும். இவ்வாறு செய்து அச்சுவடியைப் படிக்கத் தொடங்குவதை 'மையாடல் விழா' என்று சொல்வார்கள்.

'ஐயாண்டு எய்தி மையாடி அறிந்தார் கலைகள்' என்று சிந்தாமணி கூறுகிறது. 'தமிழ்விடு தூது' என்னும் நூல், சுவடிக்கு மஞ்சள் பூசுதல், மையிடுதல் முதலியவற்றைக் கூறும்பொழுது, தமிழைக் குழந்தையாக உருவகம் செய்து, ' மஞ்சள் குளிப்பாட்டி, மையிட்டு முப்பாலும் மிஞ்ச புகட்ட மிக வளர்த்தாய்' என்கிறது.

கோவையிலைச் சாறு, வசம்புக்கரி, தேங்காய் ஓட்டுக்கரி ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைக் கலந்து அதனுடன், அகல் விளக்குப் புகையைச் சேர்த்து கோவையிலைச் சாற்று மையைத் தயாரித்தனர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மையை சுவடிகளின் மீது பூசி, பூச்சிகளை அழித்ததுடன், ஏடுகளில் நெகிழ்வுத் தன்மையையும் உண்டு பண்ணினர். இதனால் எழுத்துகள் தெளிவாகத்தெரிந்தன. ஒடிஸ்ஸாவில் பொதுவாக நல்லெண்ணெய்யுடன், கரித்துளைக் கலந்து போடும் முறை கையாளப்பட்டது' என்கிறார் ரம்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com