

ஒரு காலத்தில் உலகிலேயே மிக அதிகச் சம்பளம் வாங்கியவர் என்ற பெயரைப் பெற்றவர், ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் பர்டன். 1963-இல் வெளியான 'கிளியோபாட்ரா'வில் ரிச்சர்ட் பர்டன் ஆன்டோனியாகவும், எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாகவும் நடித்தனர். இருவரும் 'உலகின் மிகக் கவர்ச்சியான ஜோடி' எனப் புகழப்பட்டனர். அப்போது மிக அதிகமான பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், 'ஒரு மில்லியன் டாலர் பெற்ற முதல் நடிகர்' என்ற அந்தஸ்தை ரிச்சர்ட் பர்டன் பெற்றார்.
1925-ஆம் ஆண்டு நவம்பர் 20-இல் பிறந்தவர். ஹாலிவுட் படங்களில் நடித்த இவர், 1964-இல் சிறந்த நடிகராகப் புகழ்பெறத் தொடங்கினார். இதனால் 'லாரன்ஸ் ஆலிவரின் வாரிசு' என்று அழைக்கப்பட்டார். 1950-60-களில் புகழின் உச்சிக்குச் சென்றார் பர்டன்.
எலிசபெத் டெய்லரை இருமுறை திருமணம் செய்து இருமுறை விவாகரத்து செய்த சாதனையும் ரிச்சர்ட் பர்டனுக்கு உண்டு. இந்த இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அவருக்கு மொத்தம் ஐந்து மனைவிகள். மூன்று வாரிசுகள்.
இவர் 'பிரிட்டிஷ் அகாதெமி விருது', 'கோல்டன் குளோப் விருது', 'கிராமி விருது', 'டோனி விருது' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். ஹாலிவுட் வாக் ஆஃப் பேம்-இல் இடம் பெற்றதோடு, நாடகத்துறை சார்பாகவும் 'ஹால் ஆஃப் பேம்' என்ற கெளரவத்தையும் பெற்றவர்.
ஏழு முறை அகாதெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும், கிடைக்கவில்லை. வரி செலுத்தும் பிரச்னையில் இவருக்கும் பிரிட்டன் அரசுக்கும் பிரச்னை வந்ததால், சுவிட்சர்லாந்தில் குடியேறினார். மது, புகைப் பழக்கங்களுக்கு அடிமையான இவருக்கு, மூளைக்குள் ரத்தப் போக்கு ஏற்பட்டது. 1984-ஆம் ஆண்டு ஆகஸ்டு 5-இல் காலமானார்.
இந்த ஆண்டு அவருக்குப் பிறந்த நூற்றாண்டு. கிளியோபாட்ராவின் பெயர் பேசப்படும் வரை ரிச்சர்ட் பர்டன் பெயரும் உலகில் உலா வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.