கடவுள் அளித்த கொடை !

வாழ்நாள் முழுவதும் நம் கூடவே பயணிக்கும் விஷயங்கள் சில. அவற்றுள் பூக்களுக்கு முக்கிய இடமுண்டு.
கடவுள் அளித்த கொடை !
Updated on
4 min read

சுஜாதா மாலி

வாழ்நாள் முழுவதும் நம் கூடவே பயணிக்கும் விஷயங்கள் சில. அவற்றுள் பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. விதவிதமான பூக்களைச் சேகரிப்பது முதல் சந்தைப்படுத்தி விற்பனை செய்வது வரையிலும் இருக்கக்கூடிய நிலைகள் ஏராளம். அத்தகு தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார், சேலத்தைச் சேர்ந்த பாரம்பரிய பூ விற்பனையாளரான செந்தில்.

அவருடன் பேசியபோது...

'தமிழ்நாட்டின் மிக முக்கிய பூ சந்தைகளுள், சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைக்காத பூக்களே இல்லை. கிட்டத்தட்ட 750 பூ வியாபாரிகள் இங்கு விற்பனையில் ஈடுபட்டிருக்கின்றனர். தவிர, வெளியில் கடை நடத்துபவர்கள், ஆங்காங்கு உள்ள சிறு வியாபாரிகள், வீதிகளில் அலைந்து விற்பனை செய்பவர்கள் என சேலத்தின் சுற்றுப்பகுதி

களில் ஆயிரக்கணக்கான பேர் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த அனைவருக்குமே வாழ்க்கைக்கான ஆதாரம் இந்த பூ மட்டும் தான். சகோதரர் சபரி, மணிமாறன் மற்றும் உறவினர்களுடன் தாத்தா காலத்திலிருந்து இதே தொழில்தான் எனக்கு. எங்களில் பலரும் இத்தொழிலில் பல தலைமுறைகள் பாரம்பரிய அனுபவம் உடையவர்கள்.

சேலத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் பூ விவசாயமே பிரதானம். எங்களுடைய காடுகளில் மல்லிகை, முல்லை, ரோஜா, கோழிக்கொண்டை, கனகாம்பரம், இருவாட்சி, மரு, கொழுந்து, விருட்சி, வாடாமல்லி, செவ்வந்தி, பிச்சி, பட்டன் ரோஸ், மனோரஞ்சிதம், சம்பங்கி, அலரி, நந்தியாவட்டம், காக்கரட்டை எனப் பலவித பூக்களை மாற்றி மாற்றிப் பயிரிடுகின்றோம். எனவே அனைத்து வகைப் பூக்களும் ஒரே இடத்தில் கிடைத்துவிடும். தாமரை, ஆர்க்கிட், கார்னேஷன், பிரும்ம கமலம், கிருஷ்ணகமலம் மற்றும் பல்வேறு நிறங்களை உடைய டெய்ஸிப் பூக்கள் போன்ற வெரைட்டியான அலங்கார வகைகளை பெங்களூரிலிருந்து தருவித்துக் கொள்கிறோம். போன் மூலம் ஆர்டர் செய்துவிட்டால் அவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பாக அனுப்பி விடுவார்கள்.

கோயில்களுக்கு என்றால் பாரம்பரிய முறைகள் மாறாமல் அளவுப்படி மாலைகள் செய்வோம். பல்லக்கு, தேர், மேடை அலங்காரங்கள் என்றால் நவீன பாணிகளில் செய்யலாம். கல்யாண மாலைகளில் இப்பொழுதெல்லாம் மிக வித்தியாசமாக எதிர்பார்க்கிறார்கள். தேவைகள் எப்படி இருந்தாலும் அதற்கேற்ப ஆட்களை வைத்து ஆர்டர்களைத் திருப்திகரமாக முடித்துத் தருகிறோம். பூக்கள் தவிர ஏலக்காய் , லவங்கம், முந்திரி , பாதாம், டிரை ப்ரூட்ஸ், மயிலிறகு மாலை இவைகளை கிரீடங்களுடன் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள். சமீபமாக புது பணத்தாள்களிலும், நாணயங்களிலும் செய்யப்படும் நவீன பாணி மாலைகள்தாம் ட்ரெண்டிங்.

வெளியூர் ஆர்டர்கள் என்றால் தயாரித்தவற்றை முறையாக பேக் செய்து பேருந்துகளில் அனுப்பி விடுவோம். பெருவிழாக்கள் என்றால் நாங்களே குழுவாகப் போய் நாள்கணக்கில் தங்கியிருந்து வேலை செய்வதும் உண்டு. திருப்பதி பிரம்மோற்சவம், கங்கைகொண்டசோழபுரத்து அன்னாபிஷேகம் முதலானவை குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை.

இவற்றுள் கங்கை கொண்ட சோழபுரத்துப் பெருவுடையாருக்கு மாலைக்கட்டுவது சவாலான விஷயம். மிகவும் நுட்பமாகச் செய்யவேண்டும். தடித்த கனமான மாலைகளை நீளமாகச் சுற்ற வேண்டும். வழுவழுப்பான உச்சி உடைய பாணம். கனத்த மாலைகளாகச் சாற்றினால் வழுக்கிச் சரிந்து விடும். எனவே பொருத்தமான அளவில் பிரம்புக்கூடையில் மலர்களைக் கோர்த்து அலங்கரித்து தயார் செய்து கிரீடம் போலப் பொருத்தி விடுவோம். அற்புதமாக அமைந்து விடும்.

தடிமனான வடத்தில் வரிசையாகப் பூச்சரங்களைக் கோர்த்து பூப்பாவாடை போலத் தயாரிப்போம். அதனை அப்படியே ஆவுடையாரைச் சுற்றிக் கட்டிவிடுவார்கள். முதல்நாள் பரிவார தெய்வங்கள் உள்பட இண்டை மாலை, கண்ணி மாலைகள், பூப்பாவாடை அலங்காரம் முதலியவை ஸ்பெஷல். அன்னாபிஷேகத்தன்று காய்கறி அலங்காரம். ஒவ்வொரு காய்கறிக்கும் தனித்தனியே கவர் செய்து மாலைகளாகச் சுற்றுவோம்.

இம்முறையில் கவரின் முனைகள் மட்டும் கட்டுக்குள் வரும். காய்கறிகள் சேதம் ஆகாது. சுகாதாரமாகவும் இருக்கும். இப்பணியை பல வருடங்களாகப் பெருவுடையாருக்குச் செய்து வருவது எங்களது பாக்கியமாகும். இத்தொழிலில் பலபேர் குடும்பமாகத்தான் ஈடுபட்டிருக்கிறோம். தவிர ஆட்களைச் சம்பளத்துக்கு அமர்த்தி சரங்களைத் தொடுக்க வைத்து வாங்குகிறோம். மாலை சுற்றுதலுக்கு அனுபவம் தேவை. நன்கு பழகியவர்களே நேர்த்தியாகச் சுற்ற முடியும். பூக்களுக்கு ஏற்றவாறு சுற்றுகிற விதங்களும் மாறுபடும்.

மக்களின் தேவைகளும் காலத்திற்கு ஏற்ப மாறுபட்டுத்தான் வருகிறது. என்னுடைய பத்து வயதிலிருந்து இந்தத் தொழிலில் இருக்கிறேன். தாத்தா, அப்பா தான் குரு. முப்பது வருடங்களுக்கு முன்பு திருமண ஜோடி மாலைகள் என்றால் ரோஜாதான் முதலிடம். பிறகு சம்பங்கி மாலைகளை விரும்ப ஆரம்பித்தார்கள். ஒருகட்டத்தில் ஜோதிகா மாலை என்பது ட்ரெண்டிங் ஆக ஆரம்பித்தது. இதனை பெடல் மாலை என்போம்.

தற்பொழுது முகூர்த்த உடைகளுக்கு ஏற்ப பொருத்தமாகத் தெரிவு செய்து கொள்கிறார்கள். இதற்காகப் பூக்களின் நிறம், ஜரிகை அலங்காரங்கள் போன்றவைகளிலும் சற்று மெனக்கெட வேண்டும். தற்காலத்தில் பூக்களில் ஸ்ப்ரே செய்து நிறங்களை மாற்றுவதைப் போல செயற்கையான விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. பூக்களுக்கே உண்டான இயற்கையான தன்மையை மாற்றுவதை பாவமாக நினைக்கிறேன்.

பூ வியாபாரத்தினைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் லாபம் நஷ்டம் இரண்டையும் எதிர்பார்த்துதான் இயங்க முடியும். உதிரிப்பூவாக இருக்கும் வரை கூட சமாளிக்கலாம். ஆனால் மாலையில் ஏற்றி விட்டால் போயிற்று... விற்பனை ஆனால் மட்டும் தான் காசு. இல்லையென்றால் குப்பைக்குத்தான் போகும். மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்ற வாசமலர்கள் தேக்கமானால் செண்ட் பேக்டரிகளுக்கு விற்று விடுவோம். நிரம்பவும் நஷ்டம் வராது. ஆனால் சாமந்தி, அரளிப் பூக்களால் ஆன மாலைகள் விற்கவில்லை என்றால் அவ்வளவுதான். அன்றைய தினம் நஷ்டம்தான் எங்களுக்கு.

எங்களுக்கும் சங்கங்கள் நிறைய இருக்கின்றன. கமிஷன் ஏஜென்ட் சங்கம், மாலை கட்டுவோர் சங்கம், பல்லக்கு ஜோடனை செய்வோருக்கான சங்கம் என நிறைய உண்டு. ஆயினும் ஸ்திரமான லாபநஷ்டக் கணக்கு பார்க்க முடியாத தொழில் இது. பரம்பரைத் தொழில் என்பதால் விடவும் மனதில்லை. நன்றாகப் படித்தவர்களும் கூட இதே தொழிலில் ஈடுபடுவது இங்கு சகஜம்.

தற்காலத்தில் ஆன்லைன் வியாபாரம் நடைமுறை ஆகிவிட்டது. ஆனால் அதில் நாங்கள் ஈடுபடுவது இல்லை. சொல்லப்போனால் எதிர்க்கிறோம் என்று கூட சொல்லலாம்.

தற்காலத்தில் வாடிக்கையாளருடன் போனில் தொடர்பு கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆனாலும் போனில் ஆர்டர் எடுத்த வேலையை கூரியரில் டெலிவரி செய்வது என்பது இந்த விஷயத்தில் சரிவராத ஒன்று. நேரடியாக வாங்கும்போது அன்றன்று சந்தைக்கு வரும் பூக்களை ஃப்ரெஷாக பயன்பாட்டிற்கு வாங்கலாம். தொலைதூரங்களுக்கு அனுப்பும்போது இதற்கான வாய்ப்பு குறைவு. அதனாலேயே வெளிநாட்டு ஆர்டர்களையும் தவிர்த்து விடுகிறோம்.

தவிர பூமாலை கட்டும் முறைகளை எப்பொழுது யூடியூப் சேனல்களில் போட ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்தே உண்மையான தொழிலுக்கான மரியாதை குறையத் தொடங்கி விட்டது. நான் முன்பே சொன்னது போல மாலை சுற்றுவது என்பது வேறு. கோர்ப்பது வேறு. மாலை சுற்றுவதில் உள்ள நேர்த்தி கோர்க்கும் போது இருக்காது. யூடியூப் சேனல்களில் பார்த்து பார்த்து இப்பொழுது ஆளாளுக்கு மாலை கோர்க்கத் துவங்கி விட்டார்கள். ஆன்லைனில் ஆர்டர் கொடுக்கும் மக்களுக்கு முறையாகத் தொழில் தெரிந்தவர்களா இல்லையா என்கிற வித்தியாசமெல்லாம் தெரிவதில்லை.

உதாரணமாக சம்பங்கி பீடா மாலை என்கிற வகை. இது தொழில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கைவரும். பத்து கட்டு ரோஜா தேவைப்படுகிற இடத்தில் நாலு கட்டு வைத்து வேலையை முடித்து விடுகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்னரே தயாரித்த மாலைகளை நேர்த்தியாக பேக் செய்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பி விடுகிறார்கள். இது பயன்பாட்டிற்கு வரும்போது நீண்டநேரம் தாக்குப் பிடிக்காது. பிறகு அழுகத் துவங்கும் என்பதை பலரும் உணர்வதில்லை என்பது வருத்ததிற்குரியது.

முன்பெல்லாம் கல்யாண மாலை என்றால் மூன்று நாள்கள் ஆனாலும் வதங்கிப்போகாது. முகூர்த்தத்துக்குப் பிறகு அவற்றைக் அரசங்குச்சியில் கோர்த்து வீட்டில் பிரத்தியேகமான இடத்தில் பத்திரப்படுத்துவார்கள். உலர்ந்து கொட்டிப் போகுமே தவிர அழுகிப் போகாது. ஆனால் தற்காலத்தில் முகூர்த்த மாலைகள் அழுகிப் போவதைப் பார்க்கும்போது மனசு சங்கடமாகிறது. இது தவறு என்பதை பலபேர் உணர்வதில்லை. ஜோடி மாலை என்பது குலம் தழைக்கிற விஷயம் இல்லையா? இன்னின்ன சடங்குகளுக்கு இன்னின்ன பூக்களால் தான் மாலை அணிய வேண்டும் என்கிற விதிகள் உண்டு.

ஆன்லைன் வியாபாரம் மூலம் நசிந்து போன தொழில்களில் பூத்தொழில் முதன்மையானதாக உள்ளது. இதை மட்டுமே நம்பி இருக்கிற குடும்பங்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனாலேயே நேரடி வியாபாரத்தினை மட்டுமே நாங்கள் ஆதரிக்கின்றோம். பூக்கள் கடவுளின் கொடை.

அவற்றிற்கே உரிய புனிதத் தன்மையுடன் அவற்றைச் சமர்ப்பித்தால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும். இதை மக்கள் உணர்ந்தாலே போதும். பல குடும்பங்கள் தழைக்கும்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com