

அண்மையில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில், இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி நடித்த 'ஆநிரை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
கதையின் நாயகனாக, சிங்கப்பூரில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அர்ஜுனன் மாரியப்பன் நடித்துள்ளார். மீரா, அஞ்சனா தமிழ்ச்செல்வி, காமாட்சி சுந்தரம், கெளரி சங்கர், இரா.செழியன் நடித்துள்ள இந்தக் குறும்படத்துக்கு பி.செல்லதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, பன்னீர்செல்வம் படத் தொகுப்பு செய்திருக்கிறார். இந்த குறும்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுபம் கெர், இசையமைப்பாளர் கீரவணி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.
இதுகுறித்து இ.வி.கணேஷ் பாபு கூறியதாவது, 'ஆநிரை குறும்படத்தைப் பார்த்த அனுபம் கெர், 'பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில், அன்பே பெரிது' என்று படம் காட்டுகிறது' என்று பாராட்டினார்.
'பசுத்தோலில் செய்யப்பட்ட இசைக்கருவி மீது முகத்தை வைத்து, அதை பசு மாடாகவே நினைத்து அர்ஜுனன் மாரியப்பன் கதறும் காட்சி உருக வைத்தது. இனி நான் தோல் இசைக் கருவியை வாசிக்க முடியுமா என்று தெரியவில்லை' என்று, ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி நெகிழ்ந்தார்.
'இப்படிப் படத்தைப் பார்த்த பலருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வை இந்தப் படம் தந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் காணும் விதமாக இதோடு இன்னும் இரு குறும்படங்களை இணைத்து ஆந்தாலஜி பாணியில் திரைக்குக் கொண்டு வர முயற்சியில் இறங்கியிருக்கிறேன்' என்றார் கணேஷ்பாபு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.