

நாட்டின் முக்கியமான யூனியன் பிரதேசமான அந்தமான், நிக்கோபார் தீவுகள் வங்கக் கடலையும், அந்தமான் கடலையும் எல்லைகளாகக் கொண்டவை. இதன் தலைநகரமான 'போர்ட் பிளேர்', தற்போது 'ஸ்ரீவிஜயபுரம்' என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.
அந்தமான் தீவின் வளர்ச்சிக்கு உதவி புரிந்த தமிழர்கள் நலனுக்காக, 1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'அந்தமான் தமிழர் சங்கம்', வெளிமாநிலத்தில் உருவான முதல் தமிழர் அமைப்பாகும்.
இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் லி. மூர்த்தி, செயலாளர் கோட்டை வே. காளிதாசன் ஆகியோரிடம் பேசியபோது:
'இந்த அமைப்பானது முதலில் ஒரு படிப்பகமாகத் தொடங்கப்பட்டது. நாளடைவில் தமிழர்களுக்கான அரசு உரிமை, பொருளாதாரம், வாழ்வியல் சார்ந்த சிறு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டி தமிழர் சங்கமாக உதயமானது. சங்கம் அமைந்துள்ள இடம் முதலில் கல்குவாரியாக இருந்தது.
பாறைகள் நிறைந்திருந்த இந்தப் பகுதியை தமிழர்கள் பலரும் தங்கள் அலுவலகப் பணியை முடித்துவிட்டு, இரவு வேளையில் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிர்வாக அமைப்புகள் ஏற்பட்டு படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்த இந்த அமைப்பு 75- ஆவது ஆண்டை நோக்கி நடைபோடுகிறது.
சங்கத்துக்கு 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட இடத்தில் கட்டடம், திருமண மண்டபம், வணிக வளாகம் உள்ளிட்டவை உள்ளன. வாடகை வருவாய் நிதி ஆதாரத்துக்குத் துணை நிற்கிறது. நன்கொடைகளும் வலு சேர்க்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு. இருந்தாலும், சங்கத்தில் அரசியல் கிடையாது. நாட்டில் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களுடன் நல்லுறவில் இருக்கிறோம்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களில் இருந்து தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். சில சமயங்களில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவதும் உண்டு. அனைவரும் அன்றாடத் தொழிலைப் பார்த்துவிட்டு, ஓய்வு நேரத்தில் தமிழர் நலனுக்காகச் சிறப்பாகப் பாடுபடுகிறோம்.
முதலாம் இராஜேந்திர சோழனின் கடாரம் கொண்டான் ஆயிரமாவது ஆண்டு விழாவை அண்மையில் கொண்டாடினோம்.
நவம்பர் மாதங்களில் ஞாயிறுதோறும் பழமையான விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறோம். சித்திரை விழா, பாரதியார், பாரதிதாசன் விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம். தமிழ்ச் சங்க வளாகத்தில் நடத்திய பல மாநாடுகள், நிகழ்வுகளில் தமிழ்நாட்டுக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளித்து மரியாதை செய்கிறோம்.
ஞாயிறுதோறும் அந்தமான் வாழ் தமிழ் வம்சாவளி மாணவர்களுக்கு தமிழ் இலக்கண, இலக்கியப் பயிற்சி வகுப்புகள், பேச்சுப் போட்டி, மேடைப் பேச்சுப் பயிற்சி, கவிப்புனையும் பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன.
பேராசிரியர் ஜெ.திருப்பதி, ஆன்மிக எழுத்தாளர்கள் செண்பகராஜா, செந்தில்குமார், புலவர் காளைராஜன், சக்திவேல், ராஜு, அந்தமான் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகைநாதன், தமிழ்ச்செல்வன் சுப்பையா, தமிழ் சத்யன் உள்ளிட்டோர் தமிழுக்கு முக்கியப் பங்கை ஆற்றிவருகின்றனர்.
இங்கு முதலில் தொடங்கப்பட்ட பள்ளியும் தமிழ் பள்ளிதான். அண்மைக்காலத்தில் தமிழ் வழிப் பள்ளிகள் மூடப்பட்டு வருவதும், தமிழ் வழிக் கல்வி குறைந்து வருவதும் வேதனையை அளிக்கிறது.
'ஐ.ஏ.எஸ். அலுவலர்களை உருவாக்கப் பயிற்சி மையம் தொடங்க வேண்டும், சங்கத்தின் சார்பாக தமிழ்ப் பள்ளியைத் தொடங்க வேண்டும், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைத் தொடர்ந்து கற்றுத் தரவேண்டும்...' போன்ற பணிகளை மேற்கொள்ள விரும்புகிறோம்.
தமிழர்கள் குறைந்துவருகின்றனர்: இங்கே சிறையில் அடைக்கப்பட்ட எண்ணற்ற தமிழர்களுடைய வரலாறு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன. அந்தமானுக்கு தொடக்கத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள் வியாபாரம் செய்வதற்காகவும், அரசு வேலை நிமித்தமாகவும் வந்தனர். இவர்களே அந்தமானின் முன்னேற்றத்துக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை மலையகத் தமிழர்கள் குடும்பங்கள் இங்கே குடியமர்த்தப்பட்டன. என்றாலும், அவர்களுக்கு எந்தவிதமான வசதிகளும் அரசின் சார்பில் செய்து தரப்படவில்லை.
கடல் மணலைப் பக்குவப்படுத்தி நடைபெற்ற கட்டடத் தொழில் குறைக்கப்பட்டுவிட்டதால், அதில் ஈடுபட்ட தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதோடு, தமிழ்நாட்டில் அதிக வசதிகள் உள்ளதால், அவர்கள் புலம்பெயர்ந்து விட்டனர். ஆனால், வங்காளத்தைப் பொருத்தவரை அங்கே வாங்கும் சம்பளத்தைவிட இங்கே ஐந்து மடங்கு, ஆறு மடங்கு கூடுதலாகக் கிடைப்பதால் அவர்கள் அதிக அளவில் இங்கே வந்து குடியேறுகின்றனர். இன்று தமிழர்கள் எண்ணிக்கை முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது.
அந்தமான் தமிழர்களுக்கு அங்கீகாரம் தேவை: அந்தமான் தமிழர்கள் தமிழ்நாட்டை தாய் வீடாகக் கொண்டவர்கள். பூர்விகச் சொத்துகள் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அவை ஆக்கிரமிக்கப்படும் நிலையில் உள்ளன. எனவே வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களின் சொத்துகளைப் பாதுகாப்பதற்கான தனிச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும்.
வெளிமாநிலங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசினுடைய விருதுகளையும், அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும். எங்கள் நலன்களைக் காக்கவும், எங்கள் மாணவர்கள் அங்கு வந்து பாதுகாப்பாகப் படித்து ஊர் திரும்பவும் எங்களுக்கென்று ஆணையம் அமைத்துத் தரவேண்டும்.
அந்தமானில் வசிக்கும் தமிழர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பிரிவில் சேர்க்கப்படவில்லை. இதற்காக சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். ஆனால், ஓ.பி.சி.யில் பயன் பெறுபவர்கள் வங்கதேசத்தவர்களும், மாப்பிளா மலையாள முஸ்லிம்கள் மட்டும்தான். இதனால் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.
மருத்துவக் கல்வியில் தமிழர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.