நூறு வயதிலும் விவசாயப் பணி!

பொழுதுபோக்குகளால் மக்கள் முடங்கிக் கிடக்க, 'சோம்பலே சுகம்' எனப் பலரும் உறங்கிக் கிடக்க, வீட்டில் ஓய்வு எடுக்காமல், தனது நூறாவது வயதிலும் தளராமல் விவசாயப் பணிகளைச் செய்து அசத்திவருகிறார் மூதாட்டி அருக்காணி.
நூறு வயதிலும் விவசாயப் பணி!
Updated on
1 min read

பொழுதுபோக்குகளால் மக்கள் முடங்கிக் கிடக்க, 'சோம்பலே சுகம்' எனப் பலரும் உறங்கிக் கிடக்க, வீட்டில் ஓய்வு எடுக்காமல், தனது நூறாவது வயதிலும் தளராமல் விவசாயப் பணிகளைச் செய்து அசத்திவருகிறார் மூதாட்டி அருக்காணி.

நாமக்கல் மோகனூர் சாலையில் நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த இவருக்கு, முத்துசாமி என்ற மகனும், பாப்பாயி, கண்ணம்மாள் என்ற இரு மகள்களும் உள்ளனர். கணவர் நாச்சிமுத்து, இருபது ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட, மகள் கண்ணம்மாள் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.

அருக்காணியின் அயராத உழைப்பு குறித்து கண்ணம்மாளிடம் கேட்டபோது:

'எனது தாய் அருக்காணி அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுகிறார். பின்னர், வீட்டை சுத்தம் செய்வது, கோலமிடுவது, பால் கறப்பது என அன்றாட வேலைகளைச் செய்கிறார். காலை 8 மணிக்கு விவசாயத் தோட்டத்துக்குச் செல்லும் அவர், களைகளை அகற்றுதல், ஆடு மேய்த்தல், செடிகளுக்கு நீர்ப் பாய்ச்சுதல் என மாலை 5 மணி வரை அசராமல் உழைக்கிறார். ஓய்வெடுக்குமாறு கூறினாலும், அதைக் கேட்காமல் பணிகளைச் செய்கிறார்.

வீட்டில் டி.வி. இருந்தாலும், அதைக் கண்டுகொள்வதில்லை. மாலை 6 மணியளவில் உறங்கச் சென்றுவிடுகிறார். அருக்காணி பாட்டியின் காலில் விழுந்து பலர் ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

எதிர்பாராதவிதமாக ஒருமுறை அவர் கிணற்றில் விழுந்து தத்தளித்தபோது அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார். இன்னொருமுறை, வீட்டில் கீழே விழுந்து கை, கால்களில் காயம் ஏற்பட்டபோது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விரைவிலேயே நடமாடத் தொடங்கிவிட்டார்.

அவரைக் கஷ்டப்படாமல் வைத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், 'உழைப்பதில் எனக்குக் கஷ்டமில்லை' என அருக்காணி அம்மா கூறுகிறார். அவருக்கு மகளாகப் பிறந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்' என்கிறார் கண்ணம்மாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com