கோலிவுட் ஸ்டூடியோ!

கன்னடத் திரையுலகில் 2016-இல் வெளியான 'க்ரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கோலிவுட் ஸ்டூடியோ!
Updated on
2 min read

வேலைப் பளு குறித்து ராஷ்மிகா!

கன்னடத் திரையுலகில் 2016-இல் வெளியான 'க்ரிக் பார்ட்டி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில்

'தி கேர்ள் ப்ரண்ட்' படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்துக்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார்.

'இந்த வருடம் எனக்குச் சிறப்பான வருடமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து படங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன.

அந்த அனைத்துப் படங்களும் எனக்கு முக்கியமான படங்கள்தான். என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக் கொள்ளவில்லை.

அதன் பிரதிபலிப்பாகத்தான் தற்போது ஒரு வருடத்தில் எனக்கு ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன. பெரிய படங்களில் நடிப்பதை மட்டும் நான் என்னுடைய வெற்றியாக உணரவில்லை. 'தி கேர்ள் ப்ரண்ட்' மாதிரியான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதை நான் என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து வேலைப்பளு குறித்துப் பேசிய ராஷ்மிகா, 'தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருப்பதால் தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரம்தான் தூங்குகிறேன்.

இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் வேலைப்பளுவால் தான் நடக்கிறது. இதை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்' என்று பேசியிருக்கிறார்.

நினைவுகளை பகிர்ந்த ரஜினி!

ரஜினியின் 75-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 'படையப்பா' படம் ரீ-ரிலீஸாகியுள்ளது.1999-இல் வெளியான இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். படம் ரீ-ரிலீஸ் ஆவதை ஒட்டி திரைப்படம் குறித்தான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை காணொளி வாயிலாகப் பேசி நம்மிடையே பகிர்ந்திருக்கிறார் ரஜினி.

'படையப்பா' படத்தின் நினைவுகளைப் பகிர்ந்த ரஜினி, 'எனக்கு கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' ரொம்பவே பிடிக்கும். அதில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து முழுமையாக ஒரு படம் செய்ய நினைத்தேன்.

இப்படத்துக்கு என்னுடைய நண்பர்கள் பெயரைப் போட்டு தயாரித்தது நான்தான். இப்படத்தின் மூலக்கதையும் என்னுடையதுதான். 'படையப்பா' என்கிற தலைப்பைச் சொன்னதும் நான்தான்.

இந்தத் தலைப்பு புதியதாக இருக்கிறது என்றும், இந்தப் பெயரை வைத்து சிலர் கேலி செய்வார்கள் என்றும் ரவிக்குமார் கூறினார். 'அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்' என நான் அவரிடம் கூறி, அதே தலைப்பையே உறுதி செய்துவிட்டோம். நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம்.

ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், அவருடைய கால்ஷீட்டிற்காக 4 மாதங்கள் அலைந்தோம். அவருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டால் அவருக்காகக் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம். ஏனெனில், அந்தக் கதாபாத்திரம் ஹிட் அடித்தால்தான் படம் ஹிட்டாகும்.

ஆனால், அவருக்கு இதில் நடிக்க விருப்பமில்லை. எனவே, நாங்கள் முயற்சியைக் கைவிட்டோம். பிறகு வேறு கதாநாயகிகளைத் தேடத் தொடங்கினோம். ரம்யா கிருஷ்ணனை எனக்கு ரவிக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், எனக்கு அவரை நடிக்க வைக்கும் முடிவில் அரை மனதாகவே இருந்தது' என்றார்.

'படையப்பா 2' படம் குறித்தான ஐடியாவை அவர் சொல்கையில், '2.0', 'ஜெயிலர் 2' என இரண்டாம் பாகப் படங்கள் பண்ணும்போது ஏன் 'படையப்பா 2' பண்ணக்கூடாது என யோசித்தோம். 'அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்னைப் பழி வாங்காம விடமாட்டேன்' என்று சொல்லிவிட்டுப் போனாள் நீலாம்பரி.

அதனால், 'படையப்பா 2' படத்துக்கு 'நீலாம்பரி' தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு அது திருவிழாவாக இருக்கும்' எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com