

வியத்நாமைச் சேர்ந்த 'பூ குவோக்' தீவு, சமீப காலமாக ஆசியாவின் மிக அழகான தீவாகத் தனித்து நிற்கிறது. 'பூ குவோக்' தீவுக்குச் சென்றால் கிரீஸ், இத்தாலி, வெனிஸ், துபை, டிஸ்னிலேண்ட், ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வெனீஸ் நகர படகுப் பயணம், கிரீஸ் நாட்டின் கடலோரக் கட்டடங்கள், ரோமானிய புராதன கட்டடங்கள், இரவு நேர தூங்கா நகரங்கள், உலக கிராமங்களின் சங்கமம் என அனைத்தும் 'பூ குவோக்' தீவில் உண்டு.
வியத்நாமின் மிகப்பெரிய தீவான 'பூ குவோக்', சுற்றுலாத்துறையில் இந்தோனேசியாவின் பாலியை விஞ்சியுள்ளது சமீபத்தைய சாதனை.
தாய்லாந்து வளைகுடாவில் கீன் கியாங் மாகாணத்தின் ஒரு பகுதியான 'பூ குவோக்' , 22 தீவுகளைக் கொண்ட ஒரு திராட்சைக் கொத்து. அதில் ஒரு தீவு, 567 கிலோமீட்டர் நீளமும் 49 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. 'பூ குவோக்' வானிலை நவம்பர் முதல் ஏப்ரல் வரை, வெயில் நிறைந்தது. மழைக்காலம் மே முதல் அக்டோபர் வரை நீடிக்கும்.
வியத்நாமின் அழகிய கடற்கரைகள், பசுமையான காடுகள் மற்றும் துடிப்பான கடல்வாழ் உயிரினங்களுக்காக பாராட்டுகள் பெற்றிருக்கும் 'பூ குவோக்' முத்து உற்பத்தியால் 'முத்துத் தீவு' என்று அழைக்கப்படுகிறது.
அமைதியான மீன்பிடித் தீவான 'பூ குவோக்'கை சுற்றுலாவானது பிஸியான நகரமாக மாற்றியுள்ளது. வெள்ளி மணல் கடற்கரைகள் உலகின் இதர தீவுகளுக்கு தூய்மையில் சவால் விடுகின்றன. பவளப்பாறைகளுக்கு இடையில் ஸ்நோர்கெலிங், நீந்துதலுக்கான சாகச சூழ்நிலைகளை வழங்குகிறது. வியட்நாமின் மிகப்பெரிய தீம் பூங்காவான வின்வொண்டர்ஸ் சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காகக் காத்திருக்கின்றன.
ராட்சஷ ஆமை வடிவத்தில் அமைந்திருக்கும் கடல்வாழ் பூங்கா இதர நாடுகளில் அமைந்திருக்கும் கடல்பூங்காவிலிருந்து வேறுபட்டு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
உலகின் மிக நீளமான கடல்வழி கேபிள் கார் வியத்நாமின்
'பூ குவோக்'கில் உள்ள ஹான் தாம் கேபிள் கார் ஆகும். இது ஆன் தோய் நகரத்திலிருந்து ஹான் தாம் (அன்னாசி தீவு) வரை கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
பொதுவாக சைவ உணவுப் பிரியர்களுக்கு 'பூ குவோக்' சில சங்கடங்களைத் தரும். ஆனால் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பவை இந்திய உணவு விடுதிகள். அவை தரமான விலையில் சுவையான இந்திய உணவுவகைகளை வழங்குகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.