க. விஜயபாஸ்கர்
மகள் கவிதாவை பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்த தனம் பிரசவ வார்டின் முன்பு தவிப்புடன் நின்று கொண்டிருந்தாள். கவிதாவுக்கு இது முதல் பிரசவம் என்பதால் கவிதா மட்டுமல்ல; தாய் தனமும் பயந்துபோய்த்தான் இருந்தாள்.
நர்சுகள் பிரசவ வார்டுக்குள் வேகமாக வருவதும் போவதுமாக இருந்தனர்.
'கவிதாவோட அட்டெண்டர் யாராவது இருக்கீங்களாம்மா?' என்று கேட்ட நர்சிடம், 'நான் இருக்கேன்மா...' என்றாள் தனம்.
'நீங்க அம்மாவா? எங்க கவிதாவோட ஹஸ்பெண்ட்?'
'அவரு வரலையேம்மா... வேற மாநிலத்துல வேலை பார்க்கிறாரு... தகவல் சொல்லியிருக்கோம்... நாளைக்கு வந்துடுவாரும்மா..!'
'நாளைக்கு வருவாரா..? குழந்தை தலை திரும்பியிருக்கும்மா... உடனடியா ஆபரேஷன் பண்ணனும்... அவரு கையெழுத்துப் போடணுமே... சரி பரவாயில்ல... நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணமுடியாது... கிரிட்டிக்கல் பொசிஷன்... உடனே ஆபரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுக்கணும்... அதுதான் ரெண்டு
பேருக்கும் úஸப்... அவருகிட்ட போன் பண்ணிச் சொல்லிடுங்க... நீங்க அம்மாதானே... இந்தாங்க ஃபார்ம்ல இந்த இடத்துல ஒரு கையெழுத்துப் போடுங்க... அந்த கவுன்ட்டர்ல போயி ரூபா 25000 பணத்தைக் கட்டிடுங்க...' என்றபடி கையெழுத்து வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்து கொண்டாள் நர்ஸ்.
நல்லவேளையாக பக்கத்து வீட்டு பரிமளா, 'தனியார் ஆஸ்பத்திரிக்குப் போறீங்க... ஒரு இருவது முப்பது ஆயிரத்தையாவது கையோட எடுத்துட்டுப் போங்க...அங்க பணம்தான் எல்லாம்...' என்று எச்சரித்து அனுப்பியது உபயோகமாயிருந்தது.
தேவையான அளவு பணம் கொண்டு வந்திருந்ததால், உடனடியாக கவுன்ட்டரில் கட்டி, வாங்கிய ரசீதுடன் ஆபரேஷன் தியேட்டர் வாசலுக்கு ஓட்டமும் நடையுமாக தனம் வந்தாள். ஆபரேஷன் தியேட்டர் வெளியே சிவப்புநிற குமிழ் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
வெளியே நின்றிருந்த தனத்தின் மனம் 'திக்...திக்..' எனத் தவித்துக்கொண்டிருந்தது. சில நிமிடங்கள் பரபரப்பாய்க் கழிந்தன. வெள்ளை உடை அணிந்த நர்ஸூகள் சிலர் பரபரப்பாய் உள்ளே இருந்து வருவதும், பின்பு போவதுமாய் இருந்தனர். அவர்களது அவசர நடை தனத்தை மேலும் பீதிக்குள்ளாக்கியது. 'கடவுளே... என் புள்ளைய காப்பாத்து...' எனக் கண்களில் நீர்கசிய வேண்டியபடி சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.
ஆபரேஷன் தியேட்டர் உள்ளேயிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அது கவிதாவின் குழந்தையாக இருக்குமோ என்று நினைக்கும் போதே தனத்தின் நெஞ்சமெல்லாம் இனித்தது. உடலுக்குள் உணர்வு மின்சாரம் உச்சி முதல் பாதம் வரை மின்னலாய்ப் பரவி ஓய்ந்தது.
கதவு திறந்து வெளியே வந்த நர்ஸ், தனத்திடம், 'உனக்கு பேரன் பிறந்திருக்கான்மா...' என்று சொன்னது தனத்தின் காதில் தேனாய்ப் பாய்ந்தது.
தனத்துக்கு சந்தோஷம் தாளவில்லை. உடனடியாக தனது உறவினர்களுக்கெல்லாம் போனில் தகவல் சொல்லி மகிழ்ந்தாள் தனம். குழந்தையைப் பார்க்க அனுமதியளித்தபின் ஓடிச்சென்று பேரனைப் பார்த்தாள். 'புள்ள... அப்படியே அப்பன உரிச்சு வச்சிருக்கான்...' என்றவாறு தன்மகள் கவிதாவைப் பார்த்தாள். மயக்கம் தெளிந்தும் தெளியா நிலையிலிருந்த மகளின் தலையை தாய்ப்பாசத்தோடு வருடிவிட்டு நெற்றியில் முத்தமிட்டு வெளியே வந்தாள்.
சிறிது நேரம் கழித்து குழந்தை அழவே, மயக்கம் தெளிந்த கவிதாவிடம் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டச் சொன்னார் நர்ஸ். கவிதா எவ்வளவோ முயன்றும் அவளுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. ஏமாற்றத்துடனும், பதட்டத்துடனும் நர்ஸை பார்த்தாள்.
'பயப்பட வேண்டாம்... ஒரு சிலருக்கு இப்படி தாய்ப்பால் கொஞ்சம் லேட்டா சுரக்கும்... அதுவரைக்கும் நாங்க பால்பவுடரை கலக்கி குடுப்போம்... நாளைக்குள்ள இந்தப் பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கு... நிம்மதியா தூங்கு... மனநிம்மதி இருந்தாலே பால் தானா சுரக்கும்....' என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து அறைக்கு பால்புகட்டச் சென்றாள் நர்ஸ்.
அடுத்தடுத்து குழந்தை அழும்போதெல்லாம் கவிதா பால் கொடுக்க முயன்று பார்த்தாள்... ம்ஹூம்.... அன்று முழுக்க தாய்ப்பால் சுரக்கவே இல்லை. தனமும், கவிதாவும் தெய்வத்திடம் கூட மன்றாடிப் பார்த்தார்கள். பால் மட்டும் சுரக்கவே இல்லை.
ஓரளவு உடம்புக்கு தெம்பு வந்தபின், ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்ட கவிதா பக்கத்து பெட்டில் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த செண்பகத்தை ஏக்கத்துடன் பார்த்தாள்.
கவிதா தன்குழந்தைக்குப் பாலூட்ட முயன்றாள். இப்போதும் பால் சுரப்பு இல்லாததால் குழந்தை பால்குடிக்காமல் காலை உதைத்துக்கொண்டு அழுதது. குழந்தையின் அழுகையைப் பார்த்த கவிதாவுக்கும் அழுகை அழுகையாக வந்தது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த செண்பகம், 'ஏம்மா... குழந்தைய அழவிடாதம்மா...பால் குடு...' என்றாள்.
'நான் என்ன பால் குடுக்க மாட்டேன்னாக்கா சொல்றேன். பால் சுரக்கலைக்கா...' என்றாள் அழுதுகொண்டே. பவுடர் கலக்கிய பாலை ஒரு சில சொட்டுகள் குழந்தைக்குப் புகட்ட... அதைக் குடித்த குழந்தை தூங்க ஆரம்பித்தது.
குழந்தைக்குக் கொடுக்க பால் சுரக்காத கவலை கவிதாவின் மனதை வாட்ட, கண்களில் நீர் கசிந்து தாரையாக கன்னத்தில் வழிந்தது.
'கவலைப்படாதே கவிதா... உனக்கு இது முதல் பிரசவம்ங்கிறதனால பால் சுரப்பு பிரச்னை இருந்திருக்கு... இது இன்னும் ஒரு சில நாள்ல சரியாகிடும்... ஆனா, பால் சுரக்கலையே... தன் குழந்தைக்குப் பால்குடுக்க முடியலையேன்னு மனக்கவலை அதிகமா இருந்துச்சுன்னா அப்புறம் பால் சுரக்காது...
நம்ம குழந்தைக்குக் குடுக்க வேண்டிய பால் நிச்சயமா சுரக்கும். அது இயற்கை கொடுத்த வரம். குழந்தையின் அழுகுரலுக்கு நிச்சயமா எந்தத் தாய்க்கும் பால்சுரந்தே தீரும். என்ன... இப்பெல்லாம் உரிய காலம் வரைக்கும் காத்திருந்து தானா ஆகற சுகப்பிரசவத்துக்கு யாரும் காத்திருப்பதில்லை... நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துக்கிட்டு, நேரா ஆஸ்பத்திரிக்குப் போனோமா அடுத்த அரைமணி நேரத்தில ஆபரேஷன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்தோமான்னு இருக்கவே அதிகமானவங்க விரும்புறாங்க...அவங்க விரும்புறாங்களோ இல்லையோ... பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் அதைத்தான் விரும்புது... அவங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வேணும். சுகப்
பிரசவத்தில அப்படியெல்லாம் ஆஸ்பத்திரிகள் 'வருமானம்' பார்க்க முடியாது. சுகப்பிரசவத்தில சில ஆயிரம்தான் வருமானம் வரும். அதுவே சிசேரியன்னா லட்சக்கணக்கில பணத்தை அள்ளலாம்... இதுதான் பெரும்பாலான தனியார் ஆஸ்பத்திரிகளோட கணக்கு. இதோ உன் பிரச்னையை எடுத்துக்கோ பால்சுரப்பு இல்ல... இதுக்கும் அவங்க காத்திருக்க மாட்டாங்க... பால்சுரக்கிறதுக்கு ஒரு ஊசி இருக்கு... அதப் போட்டுக்குங்கன்னுதான் ஆலோசனை சொல்வாங்க...
ஒன்னு புரிஞ்சுக்க கவிதா, இயல்பா குழந்தை பொறக்கறதுக்கு முன்னாடியே நாமளாவே ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுக்கறதனால... இந்த பால்சுரப்பு பிரச்னை வருது... சுகப்பிரசவம் ஆகற பெண்களுக்கு இப்பிரச்னை இருக்காது...' என்று செண்பகம் சொல்ல.... சொல்ல.... செண்பகத்தின் 'விஷயஞானம்' குறித்து வியந்தபடி அவளையே ஒருவித குற்ற உணர்வோடு பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் கவிதா...
'சரி... சரி... நீயே கொழந்த பால் குடிக்கலையேங்கிற கவலையில இருக்க... நான் வேற அதையும் இதையும் பேசி அறுத்துக்கிட்டிருக்கேன்... சரி... அழுவாத... கண்ண தொடச்சுக்க..... பச்ச உடம்புக்கு தாங்காது... நீ தப்பா நினைக்கலேன்னா... உன் குழந்தை தூங்கி எழுந்திருச்ச உடனே என்கிட்ட கொடு. நான் என் பாலைக் கொடுக்கிறேன்... குழந்தை பசியாறட்டும்.... இப்ப அதுக்கு தாய்ப்பால்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்... குழந்தையோட நோய் எதிர்ப்புச் சக்திக்கு அவசியமானது தாய்ப்பால்தான்... காலங்காலத்துக்கு குழந்தை ஆரோக்கியமா நோய் நொடி இல்லாம வாழனும்னா நம்ம தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு தேவாமிர்தம் மாதிரி...' என்றாள் செண்பகம்.
கவிதா, செண்பகத்திடம் கேட்க நினைத்ததை செண்பகமே கவிதாவிடம் கேட்டது 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல்' இருந்தது கவிதாவுக்கு. இருந்தாலும் தனது தாயிடமும் சும்மா பேருக்கு ஒரு அபிப்ராயம் கேட்கலாம் என நினைத்து, 'குழந்தைக்கு பால் கொடுக்க செண்பகத்திடம் கொடுக்கலாமா?' என்பது போல் தனத்தைப் பார்த்தாள்.
நிலைமையைப் புரிந்து கொண்ட தனம், 'இரும்மா... எதுக்கும் டாக்டர்கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு வர்றோம்...' என்றாள்.
' செண்பகத்தக்கா... குழந்தை தூங்கறான்... பார்த்துக்கங்கக்கா... டாக்டர் ரூமுக்கு போயிட்டு வந்துடறேன்...' என்ற கவிதாவை கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு டாக்டர் அறையை நோக்கி நடந்தாள் தனம் .
அப்போது தனம், ' ஏம்மா கவிதா... என்ன நீபாட்டுக்கு அவ கேக்கறாளேன்னு அவசரப்பட்டு குழந்தையைத் தூக்கி அவகிட்ட பால்குடிக்கக் குடுத்துடுடாதே. அதெல்லாம் வேணாம்... உனக்கும் கடவுள் புண்ணியத்துல பால் சுரக்கும். அதில்லாம... அவங்க யாரோ... எவரோ... நம்ம புள்ள அவங்க கொடுக்கிற பாலைக் குடிக்கலாம்மா? எனக்கென்னவோ மனசு ஒத்துக்கலை... இத எப்படி அங்க நேரடியா சொல்றதுன்னு சங்கோஜப்பட்டுதான் டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றேன்னு உன்ன இங்கிட்டு கூட்டியாந்தேன்...' என்றாள்.
இதைக்கேட்டு அதிர்ந்து நின்ற கவிதா, தனது தாயை முறைத்துப் பார்த்தபடி, 'இதுக்குத்தான் கூப்பிட்டியா...? என்னம்மா, இந்தக்காலத்துலயும் நீ இப்படி இருக்கே? அவங்க யாரு, எவருங்கிற பூர்விகம் தெரிஞ்சு இப்ப என்ன செய்யப்போறே? எனக்கும் என் குழந்தைக்குமான இந்த பிரச்னையை தீர்க்க உன்னால முடியுமா? கடவுளா அனுப்பின தேவதையாத்தான் நான் செண்பகத்தை பார்க்கிறேன்... பிரசவம்ங்கிறதே பெண்ணுக்கு மறுபிறப்புன்னு சொல்லுவாங்க... அப்படிப்பட்ட பிரசவத்த வெற்றிகரமா செய்து தாயையும் சேயையும் காப்பாத்திக் கொடுக்கிற மருத்துவப் பணியை சகிச்சுக்கிட்டு செய்யற டாக்டர்லேயிருந்து ஆயாவரைக்கும் எல்லோருமே ஏதோ ஒரு விதத்துல தேவ தூதர்கள்தான். அவங்கள்லாம் ஒன்னு சேர்ந்துதான் இந்த ரெட்ட உசுரக் காப்பாத்தியிருக்காங்க தெரியுமாம்மா உனக்கு...' என்றவள்,
' உனக்கு இதெல்லாம் புரியாதும்மா... நீ கிராமத்துல பழைய பஞ்சாங்கமா பத்தாம்பசலியா வாழ்ந்துட்ட. நீ இதுலையெல்லாம் தலையிடாதே. நான் என் குழந்தையை அந்த அக்காகிட்ட குடுக்கத்தான் போறேன். பெத்த குழந்தை பசியால துடிக்கிறத எந்தத் தாயாலையும் பார்த்துக்கிட்டிருக்க முடியாது. வாம்மா... டாக்டரையும் பார்க்க வேணாம்... யாரையும் பார்க்க வேணாம்... பெட்டுக்கு போகலாம் வா...' என்றவாறு தாய் தனத்தை திரும்ப அழைத்துக்கொண்டு பெட்டுக்கு வந்தாள் கவிதா.
அங்கே, கவிதாவின் குழந்தையை மடியில் கிடத்தி தனது பாலைப் புகட்டிக்கொண்டிருந்தாள் செண்பகம். குழந்தை அவ்வப்போது தனது பிஞ்சுக்கரங்களால் மாராப்பை விலக்கி செண்பத்தைப் பார்த்து கை கால்களை உதைத்தபடி மகிழ்ச்சியாய் சிரித்துக் கொண்டே அந்த அமுதப்பாலை 'தேவாமிர்த'மாய்க் குடித்துக்கொண்டிருந்தது.
இவர்களைப் பார்த்த செண்பகம், ' கொழந்த முழிச்சிக்கிட்டு அழுதுச்சு... அதான் தூக்கி வச்சு பாலைக் கொடுத்தேன்.... பாரு ... இப்ப கொழந்த எம்புட்டு சந்தோசமா வெளையாடிக்கிட்டே பால குடிக்கிறான்....' என்ற செண்பகத்தை 'அன்னபூரணி'த் தெய்வமாய் நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டபடி நின்றாள் கவிதா.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. குழந்தை சந்தோஷத்துடன் செண்பகத்தின் மார்பில் முட்டிமோதி பால்குடிப்பதைப் பார்த்த அதே வினாடியில், கவிதாவின் மார்பில் ஓர் உணர்வு உந்துதல் ஏற்பட்டு... அதன் வெளிப்பாடாய் சொட்டு சொட்டாக மார்புக்காம்புகளில்... பூக்களில் தேன் வழிவதுபோல 'அமுதசுரபி'யாய் பால் சுரந்து வடிய ஆரம்பிக்க.... கண்களிலோ ஆனந்தக்கண்ணீர் அருவியாய் வழிய மெய் மறந்து நின்றாள் கவிதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.