

வயிற்று வலி, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உபாதைகளுக்கு 'வைச்வானரசூர்ணம்' நல்லது என்று முன்பொரு பதிலில் எழுதியிருந்தீர்கள். அதை எப்படித் தயாரிப்பது? எப்படிச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்? குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா?
-மாலதி சங்கர், மேற்கு மாம்பலம்.
'வைச்வானரன்' என்பது நெருப்புக்கு ஒரு பெயர். பசியை உண்டாக்கவும், சாப்பிட்ட உணவை வயிற்றில் வலி, உப்புசம், உளைச்சல் இவையன்றி நன்கு செரிக்கவும் உதவி புரியக் கூடிய மருந்தாகிய 'வைச்வானரசூர்ணம்' தயாரிப்பு முறை பற்றிய விளக்கம்:
வறுத்துப் பொடித்த இந்துப்பு ஒரு பாகம்; ஓமம், இடித்துச் சலித்தது 2 பாகம்; சீரகத்தின் சூர்ணம் 3 பாகம்; அரிசித் திப்பிலியின் சூர்ணம் 4 பாகம்; சுக்கு இடித்துச் சலித்தது 5 பாகம், கடுக்காயின் தோலை இடித்துச்சலித்தது 15 பாகம் எனத் தனித்தனியாக நிறுத்து எடுத்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டிக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மூன்று வயதுக் குழந்தை முதல் பெரியோர் வரை எல்லோரும் சாப்பிடலாம். ஒரு சிட்டிகையளவு முதல் அரை டீஸ்பூன் அளவு வரையில் வயதுக்குத் தக்கபடி உபயோகிக்க வேண்டியது. குழந்தைகளுக்கானால் தேனில் குழைத்து நக்கிச் சாப்பிடக் கொடுக்கவும்.
பெரியோர்களுக்கு வெந்நீருடனோ, சிறிது மோருடனோ கொடுக்கலாம். முக்கியமாகவும், ஓரளவு மலச்சிக்கலுடன்கூடிய பசியின்மை, அதனால் உண்டான வயிற்றுவலி முதலியவை உள்ளவர் இதை வெந்நீரில் சாப்பிடுவதால் நல்ல பலன் உண்டு.
வைச்வானரசூர்ணத்தால் அதிகம் மலம் போகுமோ? என்ற பயம் உள்ளவர்களுக்கு 'இந்துப்பு காணம்' என்ற சூர்ணம் நல்லது. வறுத்துப் பொடித்த இந்துப்பு ஒரு பாகம் (காணம் = பாகம்), ஓமம் இடித்துச் சலித்தது 2 காணம், திப்பிலியின் சூர்ணம் 4 காணம், கடுக்காயின் சூர்ணம் 6 காணம்.
இவற்றைத் தனியாகப் பொடித்துச் சலித்து எடுத்து, மேற்சொன்ன அளவில் நிறுத்து, யாவற்றையும் ஒன்றாய்க் கூட்டிச் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வெந்நீரில் இதைச் சாப்பிடுவது நல்லது. மோரில் கலந்தும் சாப்பிடலாம். யாருக்கு? பசிமந்தமாக உள்ளவருக்கு என்று, வயதும் அனுபவமும் மிகுந்த வைத்தியர்கள் சொல்கிறார்கள்.
ஓமம், துவர்ச்சிலை உப்பு, கடுக்காய் இவற்றின் சூர்ணங்களின் சமஎடைக் கூட்டாகிய 'தாவானல சூர்ணம்' இவ்விதமே உபயோகிக்கலாம். துவர்ச்சிலை உப்பு என்பதை 'ஸெளவர்ச்சலவணம்' என்பர். சுண்டைக்காய் அளவு முதல் அரிநெல்லிக்காய் அளவு வரையில் உருண்டை உருண்டையாக இருக்கும் வெளுத்த பொருள். பல துண்டுகள் ஒன்றாய்ச் சேர்த்ததன் காரணமாக இதன் மேற்புறம் மேடும் பள்ளமாக இருக்கும். மழமழவென்று சமமாக இருக்காது.
இவ்வகையானவற்றில் ஒன்றை மாற்றி ஒன்றாக 2, 3 நாள்கள் சாப்பிட்ட பிறகும் வயிற்றுவலி குணம் இல்லாவிடின் 'கல்யாணகக்ஷôரம்' எனும் ஆயுர்வேத மருந்தைப் பயன்படுத்தலாம்.
நாவைக் கட்டுப்படுத்தாத காரணத்தினால் பசியின்மை, வயிற்றில் வலி, உளைச்சலோடு தினமும் மலம் மூன்று நான்கு தரம் இளகிப் போகிறது என்று கூறுபவர்களுக்கு வைச்வானரம் முதலியவை ஒன்றும் சரிப்படாதுதான். இவர்களுக்கு விற்பனையிலுள்ள 'அஷ்டசூர்ணம்' என்ற மருந்துதான் மிகவும் சிறந்தது. பசியையும் தூண்டிவிடும். வயிற்றுப்போக்கையும் நிறுத்தும். வயிற்றிலுள்ள வலி உளைச்சல்களையும் குணப்படுத்தும்.
நீங்கள் குறிப்பிடும் உபாதையுள்ளவர்கள், எளிதில் செரிக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். காலை நேரத்தில் வெந்நீருடன் சிறிதளவு நெய் அல்லது நன்றாக ஊறவைத்த உலர்திராட்சை எடுத்துக்கொள்வது குடல் இயக்கத்தைச் சீராக்க உதவும்.
அரிசிக் கஞ்சி, காய்கறி சூப், வேகவைத்த கீரைகள், பூசணி, சுரைக்காய் போன்றவை வயிற்றுக்குச் சுமையில்லாமல் இருக்கும். குளிர்பானங்கள், பேக்கரி மற்றும் மைதா உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். உணவை நேரத்துக்குச் சாப்பிடுதல், நன்றாக மென்று விழுங்குதல் மற்றும் போதுமான அளவு வெந்நீர் குடித்தல் வயிற்றுப் பிரச்னைகளைக் குறைக்க உதவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.