

ஜம்னாலால் பஜாஜ் என்பவர் மகாத்மா காந்திஜியை தனது தந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டு, தனக்குச் சொந்தமான கிராமத்தை எழுதிவைத்தார். அந்தக் கிராமம்தான் 'சேவாகிராமம்' என்று புகழ் பெற்றது.
மகாகவி பாரதியார் 'இந்தியா' என்ற பத்திரிகையை நடத்தினார். சந்தா விகிதம்: எல்லா கவர்மென்டாருக்கும் ரூ.50, ஜமீன்தார், ராஜாக்களுக்கு ரூ.30, மேல் வருமானம் வருவோருக்கு ரூ.15, மற்றவர்களுக்கு ரூ.3.
அறிஞர் அண்ணா சென்னைக்கு வந்தால், அங்கப்ப நாயக்கன் தெருவில் தேவராஜ முதலியார் என்பவரது வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டில் பெருச்சாளிகள் தொல்லை அதிகம். இதைக் கண்ட அண்ணா, வீட்டில் உரிமையாளரான தேவராஜ முதலியாரிடம், 'கொஞ்சம் பொறுங்கள். பெருச்சாளியை அடிக்கச் சரியான ஆளைக் கூட்டி வருகிறேன்' என்றார். மறுநாள் அவரும் வந்து பெருச்சாளிகளை அடித்து ஒழித்தார். அவர்தான் க.அன்பழகன்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.
மேகாலயா முன்னாள் முதல்வர் பொன்வாடெத் வெல்சன் லபான் தனது 93-ஆம் வயதில் அண்மையில் மறைவுற்றார். இவர் தனது இளமைப் பருவத்தில் சாலை அமைக்கும் தொழிலாளியாக இருந்தவர். 4 முறை முதல்வராக இருந்த இவர், ஒரு முறை கூட முழுப் பதவிக்காலத்தையும் அனுபவிக்கவில்லை. நாளெல்லாம் தொழிலாளியாகப் பணியாற்றிவிட்டு, மாலையில் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். நங்போங் எனும் ஊரில் உள்ள பள்ளியில் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், அஸ்ஸாம் அரசு தலைமைச் செயலகத்தில் தட்டச்சராகவும் பணியாற்றினார். இவர் 1992-93-இல் முதல் முறையாக முதல்வரானார்.
ஒருமுறை எம்.ஆர்.ராதா நாடகம் நடித்துவிட்டு வாடகை காரில் திரும்பிக் கொண்டிருந்தார். மழை வெள்ளத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தின் லாரி ஒன்று மாட்டிக் கொண்டது. அந்த லாரியில் நிறைய பாரம் இருந்ததால், கரைக்கு இழுக்க இன்னொரு லாரியை நிறுத்தி, இரண்டு லாரிகளுக்கும் கயிறு கட்டி சிலர் முயற்சி செய்துகொண்டிருந்தனர்.
இந்தக் காட்சியை எம்.ஆர்.ராதா பார்த்தார். உடனே அவர் காரில் இருந்து இறங்கி தண்ணீரில் மாட்டியிருந்த லாரியின் அருகே சென்று, 'லாரியில் இருந்த பாரத்தை கரையில் நிற்கும் லாரியில் ஏற்றுங்கள். பின்னர், தண்ணீரில் இருக்கும் லாரியை ஸ்டார்ட் செய்யுங்கள்' என்றார். அவரது யோசனையின்படி அங்கிருந்தோர் செயல்பட, வெள்ளத்தில் இருந்த லாரியும் கரைக்கு வந்துவிட்டது. இந்த யோசனையை அளித்த எம்.ஆர்.ராதாவுக்கு டி.வி.எஸ். நிறுவனம் தவணை முறையில் ஒரு காரை அளித்தது. அப்படித்தான் அவர் தனது முதல் காரை வாங்கினார்.
படைப்பாளி - கதை மாந்தர் உறவு, ஊடாட்டம் தாக்கம் குறித்த ஜே.கே.யின் வாக்குமூலங்கள் நமக்கு வெளிச்சமும், விளக்கமும் நல்குகின்றன. ஏன் என் கதைகளில் வருகின்ற எல்லாப் பாத்திரங்களும் நான்தான், நான் போட்டுக் கொள்கின்ற வாழ்க்கையில் நான் சந்தித்த பிற மாதிரியான வேஷங்கள் அவை. கல்யாணி மாதிரி ஸ்தூல உருவங்கள் உண்டு. ஆனால், அதனுள் இருக்கின்ற சூட்சும உருவம் நான்தான். அது எந்த அளவுக்குப் பொய், கல்யாணி என்பவள் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருப்பதாக நான் காட்டுகிறேன். நான் அறிந்த வாழ்க்கையில் அவள் இல்லை; ஆனால், இருக்கக் கூடாது என்பதும் இல்லை' என்று அவர் கூறுகிறார்.
(டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் 'சிந்தனை அலைகள்' நூலில் இருந்து...)
'ராமன் எத்தனை ராமனடி' படப்பிடிப்பு நடைபெற்ற நேரம். அப்போது சிவாஜி கணேசனிடம் காத்தாடி ராமமூர்த்தி, 'ஏழைகள் இந்த நாட்டில் வாழ வழியே இல்லையா?' என்ற டயலாக்கை அளித்துப் பேசச் சொன்னார். சிவாஜி கணேசனோ, 'இந்த நாட்டில் ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா?' என்று சொல்வார். உடனே காத்தாடி ராமமூர்த்தி, 'ஒரு வரி டயலாக்கை ஒழுங்காகப் பேசத் தெரியவில்லையே... உனக்கெல்லாம் எதுக்கெய்யா நடிப்பு?' என்று கேட்க வேண்டும்.
இதற்கு சிவாஜி கணேசனிடம் காத்தாடி ராமமூர்த்தி, 'உங்களைப் பார்த்து நான் இப்படி ஒரு டயலாக்கை பேசினால் நாளைக்கு நான் தெருவில் நடமாட முடியுமா?' என்று கேட்டார். அதற்கு காத்தாடி ராமமூர்த்தியின் தோளில் தட்டிய சிவாஜி கணேசன், 'நீயும் நடிகன், நானும் நடிகன். அவ்ளோதான். தைரியமா நடி' என்று உற்சாகப்படுத்தினார்.
(பத்திரிகை பேட்டி ஒன்றில் காத்தாடி ராமமூர்த்தி சொன்னது...)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.