

தமிழ்நாட்டில் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் ஹாட் ஸ்டார்!
பல இளம்திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக, நான்கு மாநிலங்களில் 12 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக 'ஜியோ ஹாட் ஸ்டார்' நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதில் 4 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, 'காட்டான் கதை என்னுடைய நண்பன் மணிகண்டன் எழுதியது. நான் உற்சாகமாக இந்த சீரிஸில் நடித்தேன். மணிகண்டன் இதுவரைக்கும் ஆக்ஷன் கதையை எடுத்தது கிடையாது. இதுதான் முதல் முறை. இந்த சீரிஸின் முதல் ஆறு பக்கத்தைப் படிக்கும்போது, அது எனக்குள் சென்று என்னைக் குணப்படுத்துவது போன்ற எண்ணத்தைக் கொடுத்தது' என்று பேசியிருக்கிறார்.
'கடைசி விவசாயி' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி 'காட்டான்' வெப் சீரிஸில் நடிக்கிறார். இதனை அவரே தயாரித்திருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற ஜியோ ஹாட் ஸ்டார் நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், ஹாட் ஸ்டார் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாடு அரசு, ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திரைப்படங்கள், இணையத் தொடர், உள்ளடக்கம் போன்றவற்றை உருவாக்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அஜித்தின் ரேஸ் கதையை இயக்கும் சிவா!
தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான கார் பந்தயமான ஏசியன் லீ மேன் சீரிஸில், நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணியுடன் இணைந்து, இந்தியாவின் தலைசிறந்த கார் ரேஸரான நரேன் கார்த்திகேயனும் கலந்துகொண்டு வருகிறார். இதில் நரேன் கார்த்திகேயன், அஜித் குமார் மற்றும் ஜூலின் கெர்பி ஒரு காரிலும், ஆதித்யா பட்டேல் மற்றும் ரோமன் வாஸ்நைக் மற்றொரு காரிலும் டிரைவர்களாக பங்கு பெற்று வருகிறார்கள்.
கார் பந்தயத்துக்கு இடையே அஜித் தனது காதல் மனைவி ஷாலினியிடம் பேசி முடித்துவிட்டு, தனது அணியை நோக்கித் திரும்பும் போது, ஷாலினியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துச் செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அங்கே சென்றுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், 'அஜித் சாரின் அடுத்த படத்தின் கதையானது, முந்தைய படமான 'குட் பேட் அக்லி' படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அஜித் சாரின் கதாபாத்திரமும், படத்தின் திரைக்கதையும் மிகச் சிறப்பாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளோம்' என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.
கார் பந்தயத்தைத் தனது டீமுடன் வந்து கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்த இயக்குநர் சிறுத்தை சிவாவிடம், 'அஜித்தை வைத்து கார் பந்தயத்தை மையமாகக் கொண்ட படம் எடுக்கப் போகிறீர்களா?' என்று கேட்ட போது, 'காத்திருங்கள்... அப்டேட் வரும்' என்று சொல்லியிருக்கிறார்.
டயட் பிளான் சொல்லும் அதிதி!
'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ், தனது உணவு முறை குறித்து மனம் திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்துப் பேசியிருக்கும் அதிதி, 'காலை உணவைப் பொருத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும்.
பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக்கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன்.
எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30-7 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். உடலை சீராக வைத்துக் கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன்.
ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உடற்பயிற்சிகளைச் செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை. இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான், உடற்பயிற்சிகள்' என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார், அதிதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.