பொ.ஜெயச்சந்திரன்
'தமிழ் மொழியின் வளங்களை வகுப்பறையிலும், மேடைகளிலும் எடுத்துரைத்து வருகிறேன். இன்றைய கணினிக் காலத்துக்குத் தக்கவாறு தமிழிலும் புதுமையைக் கொண்டு வரவேண்டும். அறிவியல், அறிவு, கணக்கு, கணினிப் பேராற்றல் போன்ற அனைத்தும் இருந்தும் வருந்தத்தக்கச் செய்திகள் மறையவில்லை. மக்களின் நிலையும், மனப்பாங்கும் உயர்ந்த எண்ணத்தில் செயல்பாடுகளோடு இருக்கவேண்டும்.
நாகரிகம் வளர்ந்தாலும், தமிழும் தமிழர்களும் வளர்ந்துகொண்டே இருப்பார்கள். நூல்களின் தமிழ் பதிப்பு முறையில் அல்லாமல் கணினி முறையில் பல தளங்களுக்கு அளித்து குரல் வழியாகவோ அல்லது எழுத்து வழியாகவோ ஏராளமானோரைச் சென்றடைய வேண்டும். பல மொழியினரும் கேட்டு உணரவேண்டும்' என்கிறார் சே.பானுரேகா.
நூலாசிரியர், எழுத்தாளர், கவிதாயினி, பாடலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், பேராசிரியர், பரதக் கலைஞர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுக்குச் சொந்தக்காரரான இவர் சென்னைக்கருகே பூந்தமல்லியில் வசித்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'நான் பள்ளிப்படிப்பு முதல் எம்.ஏ., எம்.ஃபில்., ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் தமிழ் மொழியிலேயே பயின்றேன். அரசுப் பள்ளியில் படித்தாலும் ஆங்கில மொழியையும் எளிதில் கற்றேன். சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவேன். ஒரு பாடலைக் கேட்டால், வேறு சொல் கொடுத்துப் பாடுவேன். ஆறாம் வகுப்பில், மாவட்ட அளவில் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. பாடல் சிலவற்றையும் எழுதியிருக்கிறேன்.
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதிவிட்டு, விடுமுறை நாள்களில் ஹிந்தி மொழியை ஆசிரியரிடம் கற்றேன். மலையாளம் பிடித்த மொழி. அதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, ஓரளவு அறிந்தேன். அதை எழுத்துப்பூர்வமாகக் கற்றறிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளுக்கான அடிப்படை நூல்களை வாங்கினேன்.
'அ' என்று தமிழில் எழுதி, அதேபோல் மற்ற மொழிகளில் உள்ள 'அ' எல்லாம் எழுதுவேன். மற்ற மொழிகளில் ஒரு எழுத்துக்கு நான்கு உச்சரிப்பு உள்ள எழுத்துகள் இருக்கும்.
இவற்றை எழுதி முடித்தவுடன் அதற்கான கூட்டெழுத்துகள் இருக்கும். அவற்றையும் சொற்களுடன், எழுதிப் பழகுவேன்.
பள்ளி ஆசிரியராக...: தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியபோது, வகுப்புகளை எடுத்தால் அனைவருடைய கவனமும் சிதறவிடாமல் நான் பாடம் நடத்துவேன். செய்யுள்கள், பக்திப் பாடல்களைச் சிறிய இசைப் பாடலாகப் பாடி பொருளுரைப்பேன். மாணவர்கள் சரியான விதத்தில் உள்வாங்கிக் கொண்டு, தேர்ச்சிப் பெறுவார்கள். இலக்கிய வகுப்புகள் எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.
அண்ணாமலையார் பாடல்: ஒருமுறை கவிஞர் தமிழரசன் என்னைத் தொடர்புகொண்டு, 'பாடல் இருந்தால் சொல்லுங்கள். நான் உங்களை அழைத்துச் சென்று இசையமைப்பாளர் தஷியிடம் அறிமுகம் செய்கிறேன்' என்றார். அதனால், சென்னை வடபழனிக்கு வந்தேன். அரை மணி நேரத்தில் இசையமைப்பாளர் தஷி, அண்ணாமலையார் பாடலை இசையமைத்து அளித்தார். கொடுத்ததை அப்படியே பாடினார்கள். அவர் என்னிடம், 'பாடல் எப்படி வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வோம்' என்று கூறினார்.
பக்திப் பாடல்கள் என்பதால், 'எங்கே ஏற்றம் வேண்டும். எங்கே ராகம், தாளம் வேண்டும். எங்கே எந்த இசை வாத்தியம் வரவேண்டும்' என்று சொன்னேன். அவ்வாறே செய்தளித்தார். திரையிசைப் பாடல் வடிவம் வேறு. பக்திப் பாடல்கள் வடிவம் வேறு என்பதையும் அறிந்தேன். வீட்டுக்குச் சென்று இறைவனை வணங்கியவுடன் இரண்டு முறை அதனை கேட்டேன். மகிழ்ச்சி அடைந்தேன்.
திருவண்ணாமலை அண்ணாமலையாரைப் பார்த்தவுடன் அங்கேயே தோன்றிய பாடல்தான் அது. கடவுளுக்கும், தமிழரசன், தஷிக்கும் மனதார நன்றி கூறினேன். அந்தப் பாடலை வலையொலியில் கேட்டு மகிழலாம். இதற்காக 'அஜந்தா அவார்ட்' வாயிலாகச் சிறந்த பாடலாசிரியர் விருதும் பெற்றுள்ளேன்.
திருக்குறளில் சாதனை: ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளையும் ஒரு சொல்லுக்கான பொருளில் அறிவேன். பின்னர், துளு மொழியை பள்ளியின் உணவு இடைவெளியின்போது, பேசக் கேட்டு புரிந்தேன்.
தமிழ் எனது பாடத்துறை என்பதால் மொழி அறியாதவர்களுக்கு அவர்கள் மொழியில் எடுத்துரைப்பேன். இதன் வெளிப்பாடாக 14 மொழிகளில் திருக்குறள் எழுதி, உலக சாதனை ஒன்றும் செய்திருக்கிறேன். 133 கவிஞர்களை எல்லாம் இணைத்து, 133 அதிகாரங்கள், 133 மரபுக் கவிஞர்களை இணைத்து 133 மரபுக் கவிதைகள் என்று இணைய வழியில் நடத்தினேன். இதற்கு கனடா பொறியாளர் அகணி சுரேஷ் என்பவரும் உதவி செய்திருந்தார்.
சங்க இலக்கியங்களில் அணிகலன்கள்: வேலூரை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் முடித்தேன். பின்னர், 2016-ஆம் ஆண்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநர் முனைவர் விஜயராகவன் தலைமையில், 'சங்க இலக்கியங்களில் அணிகலன்கள்' என்ற எனது ஆய்வானது நூலாகவும் வெளியிடப்பட்டது' என்கிறார் பானுரேகா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.