புவியில் உள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு ஆகியன குறித்து எவ்வளவுதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வான மரக்கன்றுகளை வளர்ப்பதில் இளையத் தலைமுறையினரிடையே ஆர்வம் குறைவாகவே உள்ளது.
அவர்களின் பணிச்சுமை, நேரமின்மை, வாய்ப்புகள் அமையாமை போன்ற காரணங்களை ஏற்றுக் கொண்டாலும், இவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டு, சமூகத்தின் மீது அக்கறையைக் கொண்டு மரக்கன்றுகளை உற்பத்தி செய்து குறு வனம், அடர் வனங்களை உருவாக்குவோரும் உண்டு.
இந்த வரிசையில் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த உடையாப்பட்டி குண்டுக்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் கே.சீனிவாசனும் இடம்பிடித்துள்ளார். 'இயற்கையை நேசி' என்ற அமைப்பின் மூலம் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வரும் அவரிடம் பேசியபோது:
'மரக்கன்றுகளை நடுவதின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். இதோடு நின்றுவிடாமல் எங்கள் பகுதியிலுள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஆறு ஆண்டுக்கு முன் 'இயற்கையை நேசி' என்ற இயக்கத்தைத் தொடங்கினேன்.
எனது வசிப்பிடத்தின் ஒரு பகுதியிலேயே நாற்றங்காலை அமைத்து, அருகி வரும் தாலிப்பனை, ஆல், அரசு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை உற்பத்தி செய்துவருகிறேன். இவற்றை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் தன்னார்வலர்களைக் கண்டறிந்து இலவசமாக வழங்கி வருகிறேன்.
மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, குண்டுக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள், சாலையோரங்கள், பொது இடங்களில் பல்வேறு மரக்கன்றுகள், பனை விதைகளை நட்டு, தன்னார்வலர்களின் உதவியோடு தொடர்ந்து பராமரித்தும் வருகிறேன்.
வலசையூர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் எஸ்.செல்வத்தின் தலைமையிலான 'வளம் செய்' என்ற அமைப்பினருடன் இணைந்து, சேர்வராயன் மலை அடிவாரம் சுக்கம்பட்டி பகுதியில் தொட்டில் ஏரியில் 600 மரக்கன்றுகளை நட்டு, குறு வனத்தை உருவாக்கிட உதவி புரிந்துள்ளேன்.
தன்னார்வ இயக்கங்களையும் ஒருங்கிணைத்து அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோதண்டராமர் கோயிலில், 2.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 1500 மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இதோடு, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வலர்களுடன் சென்று இவற்றைப் பராமரித்து அடர் வனத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.
கோயிலில் முன்பு நந்தவனமாக இருந்த நிலத்தில் தன்னார்வலர்கள் ஒத்துழைப்போடு ஒரு ஏக்கர் பரப்பளவில் வேலிஅமைத்து, 9 நவகிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களுக்குரிய மரக்கன்றுகளை நட்டு, 'சீதாராமன் மகரந்த சோலை' என்ற பெயரில் புதிய நந்தவனத்தை உருவாக்கி வருகிறேன்.
இயற்கையையும், விளையாட்டையும் இரு கண்களாக நேசித்து வருவதால், ஐம்பது வயதைத் தொட்டும் திருமணம்கூட செய்து கொள்ளாமல் மரக்கன்றுகளை குடும்பமாக குழந்தையாக பாவித்து வளர்த்து வருகிறேன்' என்கிறார் சீனிவாசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.