எஸ். பி. முத்துராமன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 37

எஸ். பி. முத்துராமன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
எஸ். பி. முத்துராமன்
எஸ். பி. முத்துராமன்Silverscreen Inc.
Updated on
2 min read

'முத்துக்கு முத்தாக' என்று ஒரு பல்லவி. 'முத்தான முத்தல்லவோ' என்று இன்னொரு பல்லவி. 'முத்துக்களோ கண்கள்', 'முத்துக் குளிக்க வாரிகளா' என்ற பல்லவிகளைக் கேட்கும் போதெல்லாம் எஸ்.பி. முத்துராமன் அண்ணன் நினைவு வரும்.

காரைக்குடி முத்துப்பட்டினம் சமதர்ம மறுமலர்ச்சி இல்லத்தில் எளிமையின் சிகரமாக வாழ்ந்த நகரத்தார் மேலவை உறுப்பினர் இராம. சுப்பையா, விசாலாட்சியின் பேர் சொல்லும் பிள்ளையாக 1935, ஏப்ரல் 7 -இல் பிறந்தார். சுயமரியாதை இயக்க முன்னோடியான சு. சண்முகனார் வீட்டில் பிறந்த கமலாவை மணந்தார்.

நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெள்ளி விழா இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி எடிட்டராகவும், எனக்கு முதல் படம் வாய்ப்புத் தந்து 1972-இல் கதை, வசனகர்த்தாவாக்கிய மறைந்த ஏ.சி. திருலோகசந்தரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

1967-இல் நான் பீம்சிங்கிடம் பணிபுரிந்த சில காலத்திலே 'சன்னிதானம்' என்ற படத்தை கதை, வசனம் எழுதி இயக்கினேன். இதில் ஜெமினியும் விஜயகுமாரியும் நடித்தார்கள். அப்போது நான் 'பஸ் ஸ்டாப்' என்ற நாடகத்தில் 'ஓடம் அது ஓடுமா' என்ற பாடல் எழுதி இருந்தேன்.

அந்த நாடகத்தைப் பார்க்க வந்தவர், என் பாடலைப் பாராட்டினார். இது இருவருக்கும் முதல் சந்திப்பு. நான் டைரக்டரானது தெரிந்து ஏவி.எம்.மில் என்னைச் சந்தித்தபோது, 'டைரக்ஷனில் ஏதாவது உதவி தேவைப்பட்டால்... எனக்குச் சொல்லுங்க!' என்றார். இது இவரது பெருந்தன்மை. அந்தப் படம் இரண்டு நாள்களோடு நின்றது. மீண்டும் எதிர்காலம் கனவானது.

பள்ளியில் இவர் படிக்கும்போதே ஒவ்வொரு மாணவனும் மருத்துவராக, வழக்குரைஞராக ஆசை என்று சொன்னபோது, 'நான் திரைப்பட இயக்குநராக வேண்டும்' என்று ஆசிரியரிடம் சொன்னார். அவர் லட்சியம் நிறைவேற ஏ.வி.எம். என்ற கலைக்கூடம் நிழல் கொடுத்தது. இவர் பண்பின் சிகரமாகப் பரிமளித்து மறைந்த மாமனிதர் ஏவி.எம். சரவணனுக்கு வலதுகரமாக இருந்தார் என்பது திரையுலகம் அறிந்த உண்மை.

என் மனைவியின் அண்ணனும் இவரும் அக்கா, தங்கையை மணம் முடித்தார்கள். என் திருமணத்தையும், என் மகள் திருமணத்தையும் முத்துராமன் அண்ணன் நடத்தி வைத்தார்.

நான் ஏவி.எம்மில் 'தாய் மேல் ஆணை' படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தபோது நாச்சியார்புரம் நாகப்பன் அண்ணன் தொலைபேசியில் என்னுடன் பேசி, சிவசங்கரியின் 'நெருஞ்சி முள்' குறுநாவலைத் தந்து, அதற்கு சரவணன் திரைக்கதை, வசனம் எழுதச் சொன்னதாகச் சொன்னார். அதற்கு 'நேற்றைய மனிதர்கள்' என்று பெயர் வைத்து முத்துராமன் இயக்கினார். இதில் ஜெய்சங்கர் நடித்தார்.

இந்த சீரியலில் நான் ஒரு எழுத்தாளன் பேசுவதாக வசனம் எழுதினேன். 'சென்னைக்கு வந்தா கதை விக்கலாம்னாங்க. வந்தேன். என் கையில் இருந்த கடிகாரத்தை விற்றேன். மோதிரத்தை விற்றேன். கதை விக்கலே'ன்னு எழுதியிருந்தேன். அதை முத்துராமன் 'வேண்டாம்' என்று நீக்கினார்.

நான் 'ஏன்?' என்று கேட்டேன். 'எழுத்தாளர்களை கேவலப்படுத்த வேண்டாம்' என்றார்.

யார் மனதும் புண்பட வேண்டாம் என்று நினைப்பவர் அவர். பிரபல எழுத்தாளர் ஏவி. எம். செட்டியாரின் நம்பிக்கை நட்சத்திரமான வி.சி.குகநாதனின் நட்பில் முதல் படத்தை இயக்கி, ரஜினியின் அதிகப்படங்களை இயக்கி சிவாஜி, கமல் என்று 75 படங்களுக்கு இயக்குநராக கொடிகட்டிப் பறந்தார்.

ஏவி.எம். சரவணனை போல எந்த நிகழ்ச்சிக்கும் முதல் ஆளாக வந்து நிற்பார். 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை எடுத்த மணி அய்யர் தயாரிப்பில் கார்த்திக், அம்பிகா, ராதா என்று முடிவு செய்து, 'தினத்தந்தி' சண்முகநாதன் எழுதிய நாவலுக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதி, அது கார்த்திக்கால் நடக்காமல் போனது, என்னை வருந்தச் செய்தது.

காரைக்குடி தந்த கலைச்செல்வங்கள் என்று ஏவி.எம், கண்ணதாசன், எஸ்.பி. முத்துராமன், பஞ்சு அருணாச்சலம், காரைக்குடி நாராயணன் என்று கௌரவித்தபோது, என் மனம் பெருமிதப்பட்டது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com