தமிழ்ப் பேழை...

'விக்சனரி' என்பது படங்கள், அர்த்தங்கள், ஒலி உச்சரிப்புடன் கூடிய அகராதியாகும்.
தமிழ்ப் பேழை...
Updated on
2 min read

'விக்சனரி' என்பது படங்கள், அர்த்தங்கள், ஒலி உச்சரிப்புடன் கூடிய அகராதியாகும். அறிவியல் மேம்பட்ட சூழ்நிலையில் அகராதிகள் விக்சனரிகளாக உருமாற்றம் பெற்றுள்ளன. ஆங்கில விக்சனரியில் 85.51 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலச் சொற்கள் பதிவாகியுள்ளன.

ஆனால், தமிழ் விக்சனரியில் 4.085 லட்சத்துக்கான தமிழ்ச் சொல் பதிவுகளே உள்ளன. இணைய ஆங்கிலத்தின் அளவுக்குச் சொல் பதிவுகளை இணையத் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்டதுதான் 'தமிழ்ப் பேழை' திட்டம்.

இந்தத் திட்டத்தில் உருவாக்கப்படும் இணைய அகரமுதலிகள், அலைபேசிச் செயலிகளாகவும் வெளியிடப்படும். மேஜை கணினி, மடிக்கணினி தொடங்கி அலைபேசி மூலமாகவும் 'தமிழ்ப்பேழை'யை அணுகமுடியும். 'தமிழ்ப் பேழை' திட்டத்தின் பின்னணியிலிருந்து செயல்பட்டு வருபவர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் அவரிடம் பேசியபோது:

'பதினைந்து ஆண்டுகால உழைப்பில் சுமார் 80 தமிழ் அகராதிகளை மின்னூலாக மாற்றி இணையத்தில் பொதுவெளியில் வைத்துள்ளேன். அரசுத் துறைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் இணையத்தில் இலவசமாகப் பகிர்ந்து கொள்ள நினைக்கும் நூல்களை, அகராதிகளை பொதுவெளியில் டிஜிட்டல் வடிவில் அனைவரின் பயன்பாட்டுக்கும் வைக்கிறோம். பழைய தமிழ் விடுகதைகள், பழமொழி தொகுப்புகளையும் மின்னூல்களாக மாற்றி பொதுமைப்படுத்தியுள்ளேன்.

உதாரணத்துக்கு, 'நீர்' என்பதை முதல் சொல்லாகக் கொண்டு தொடங்கும் சொற்கள், பழமொழிகள், விடுகதைகள் எவ்வளவு தமிழில் உள்ளன என்று சில விநாடிகளில் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு சொல்லை வைத்து, அந்தச் சொல் எப்படி பழைமையான தமிழ் நூல்களில் கையாளப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

'நீர்' என்ற பொருள் கொண்ட மாற்றுச் சொற்களையும், எந்தெந்தப் பொருளில் ஒரு சொல் கையாளப்பட்டுள்ளது, எந்த நூலில் கையாளப்பட்டுள்ளது என்பதையும் சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்.

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் ஓலைச் சுவடிகளில் அழிந்து கொண்டிருந்த இலக்கியங்களைச் சேகரித்து, தாளில் அச்சடித்து மறுவாழ்வு வழங்கினார். ஒரு அச்சுநூலை அதிகபட்சம் 150 ஆண்டுகள் பராமரிக்கலாம். அதனால். தமிழ் அகராதிகள் அனைத்தையும் மின்னூல்களாக்கி அனைவரும் இலவசமாக அணுகும்படி செய்துள்ளேன்.

அலைபேசி ஒரு நூலாக மாறியுள்ளது. அந்த அலைபேசி மூலமாக இணையத் தமிழைப் பரப்புவதும் தமிழ்ப் பேழையின் நோக்கமாகவும் அமைந்துள்ளது. ஜ்ஜ்ஜ்.ம்ஹ்க்ண்ஸ்ரீற்ண்ர்ய்ஹழ்ஹ்.ண்ய் என்னும் இணைய முகவரியின் தேடுபொறியில் ஒரு சொல்லைத் தேடினால் அந்தச் சொல் எண்பது அகராதிகளிலும் தேடப்பட்டு அதன் விளக்கங்கள் முழுமையாக அளிக்கப்படும் வகையில் எனது தளத்தை அமைத்துள்ளேன். 'தமிழ்ப்பேழை' அகராதியில், அறிவியல், பொறியியல், உயிரியல், மருத்துவம், வேளாண்மை, வானியல் என 160-க்கும் மேற்பட்ட துறைகளின் 1.6 கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொல் விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியம், அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், திருவருட்பா, முல்லைப்பாட்டு ஆகியவற்றின் சொற்களை அதன் விளக்கங்களுடனும் பாடல் எண்களுடனும் ஒருங்கிணைந்த முறையில் தொகுத்து வழங்கும் விதத்தில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 1843-இல் இருந்து தொகுக்கப்பட்டிருக்கும் 50 ஆயிரம் பழமொழிகள், ஆயிரக்கணக்கான விடுகதைகள் தேடுபொறிக்கு உகந்ததாகச் சேமிக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் நூல்கள், 15 ஆயிரம் திரைப்படங்களுக்கான தரவுகளை உருவாக்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாகிவருகிறது.

1802-இல் இருந்து தமிழ் இதழ்த் தரவுகள் தேடுபொறிக்கு உரியதாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு இந்தத் தளம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தொடக்கத்தில் உலக அளவில் 23-ஆம் இடத்தில் இருந்த தமிழின் மின்னியல் அகராதி, தற்போது ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை முதலிடத்துக்குக் கொண்டு வருவதுடன், தமிழின் செவ்விலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், அறிவியல், பொறியியல் என அனைத்துக்கான மிக விரிவான அகராதியாக விரிவாக்கம் செய்வதும் அடுத்த கட்ட பணிகளாக மாறியுள்ளன' என்கிறார் தமிழ்ப் பரிதி மாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com