ஞானம்

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே தங்கவேலு மிகுந்த பரபரப்பில் இருந்தார்.
ஞானம்
Updated on
6 min read

கே.என்.சுவாமிநாதன்

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே தங்கவேலு மிகுந்த பரபரப்பில் இருந்தார். அடிக்கொரு தரம் கூடத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்ப்பார். வாசல் வரை நடந்து வெளியே பார்த்துவிட்டு வருவார். நடுவே அவர் மனைவி வள்ளியைக் கூப்பிட்டு, 'வள்ளி, கூடத்திலே இருக்கிற கடிகாரம் சரியா ஓடுதில்ல... ஒழுங்கா சாவி கொடுத்து வச்சிருக்காங்க இல்ல?' என்றார்.

'கூடத்தில இருக்கிற கடிகாரம் சரியாத்தான் ஓடுது. உங்க அவசரத்துக்கு அது வேகமா ஓடாது. பொறுமையாக இருங்க!' என்றாள் வள்ளி.

'இங்க கடிகாரம் ஒன்றுதான் உங்க சொல்லுக்குக் கட்டுப்படாம அதனுடைய வேலையை ஒழுங்காச் செய்யுது' என்று முணுமுணுத்தாள்.

'முத்து பெரிய வண்டி எடுத்துக்கிட்டு போயிருக்கான் இல்லே?' என்று கேட்டார்.

'ஏங்க, நீங்கதானே அவன் போகும்போது இருந்தீங்க. பெட்ரோல் போட்டிருக்கியா. டயர்லே காத்து இருக்கா. பிரேக் சரியா பிடிக்குதா அப்படின்னு கேள்வி கேட்டுத் தொலைச்சீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க. ப்ரஷர் ஏறிடப் போகுது' என்றாள் வள்ளி.

ஒரு வாரமாகவே வீடு மிகுந்த பரபரப்புடன் இருந்து வருகிறது. வீடு முழுவதும் வேலையாள்கள். வீட்டைச் சுத்தம் செய்து, ஒட்டடை எடுத்து, சுண்ணாம்பு பூசி, வண்ணச்சாந்து குழைச்சு சுவருக்கு அடிச்சு, சின்ன சின்ன ரிப்பேரெல்லாம் சரி செய்து ,வீடு பார்ப்பதற்குப் புதுப் பொலிவுடன் விளங்குகிறது. சமையல்காரர்களுடன் வள்ளி, விருந்துக்குத் தேவையான ஏற்பாடுகளை தடபுடலாகப் பண்ணிக் கொண்டிருந்தாள். பலவகைப் பணியாரங்கள், வடை, அப்பம் என்று விருந்து சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது.

வீட்டிலே அப்படி என்ன விசேஷம்னு கேட்கிறீங்களா? எல்லாம் சாதாரண விஷயம் தான். அமெரிக்காவில் வசிக்கிற அவர் பையன் கார்த்திக், மனைவி, குழந்தையுடன் நான்கு வருடங்கள் கழித்து தீபாவளிப் பண்டிகைக்கு ஊருக்கு வருகிறான். மணி என்று செல்லமாகக் கூப்பிடும் சுப்ரமணியின் வயது ஏழு. மூன்று வயதில் பார்த்த பேரனை ஏழு வயது பிள்ளையாகப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறார் தங்கவேலு.

மனித மனம் விசித்திரமானது. தன் குழந்தைகளிடம் வைத்த பாசத்தைவிட பேரக் குழந்தைகளிடம் அவனுடைய பாசம் பல மடங்காகிறது. வயதாவதை ஏற்க மறுக்கிற மனித மனம் பேரக் குழந்தைகளின் தாத்தா, பாட்டி என்ற அழைப்புக்கு ஏங்குகிறது. மகிழ்ச்சியடைகிறது.

மகன் கார்த்திக், மனைவி செளம்யாவுடனும், மகன் சுப்ரமணியுடனும் வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்த விநாடியிலிருந்து மணி 'தாத்தா, தாத்தா' என்று தங்கவேலு பின்னாடியே அலைந்து கொண்டிருந்தான். கிராமத்து வீட்டில் பார்ப்பது எல்லாம் அவனுக்குப் புதுமையாக இருந்தது. கேள்விக் கணைகளால் துளைத்துக் கொண்டிருந்தான். சீமையில் வளரும் பேரன் பேசும் ஆங்கிலம் நமக்குப் புரியுமா, எப்படி அவனுடன் பேசுவோம் என்று பயந்து கொண்டிருந்த பாட்டிக்கும், தாத்தாவுக்கும், பேரன் தமிழ் பேசுவதில் கொள்ளை மகிழ்ச்சி. எல்லாம் நம் மருமகளின் சாமர்த்தியம் என்ற பெருமிதம்.

தங்கவேலு பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வருகிறார். குடிசைத் தொழிலாக ஆரம்பித்த தொழிற்சாலை இப்போது பெரிய அளவில் நன்றாக நடைபெற்று வருகிறது. கடுமையான போட்டிக்கு இடையேயும் அவருடைய தயாரிப்புகள் மேலை நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது.

விருந்து முடிந்தவுடன் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கார்த்திக், செளம்யாவின் வேலை, மணியின் படிப்பு, அயல்நாட்டு வாழ்க்கையின் நன்மை, தீமை என்று பலவற்றையும் பேசித் தீர்த்தார்கள். இந்தியப் பொருள்கள் தங்கு தடையில்லாமல் கிடைப்பது, நாளும் கிழமையும் போவதற்கு ஹிந்துக் கோயில்கள் எல்லாம் கேட்பதற்கு அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சின் நடுவே 'தாத்தா... என்னை பட்டாசு பேக்டரி பார்க்க கூட்டிப் போகிறீங்களா?' என்று கேட்டான் மணி.

'கண்டிப்பாகப் போகலாம். இன்னிக்கு ஓய்வு எடுத்துக்கிட்டு நாளைக்கு நீ, நான், அம்மா, அப்பா, எல்லோரும் பேக்டரி பார்க்கப் போகலாம்' என்றார் தங்கவேலு. 'பேக்டரிக்குப் போகப் போகிறோம்' என்றதும் மணியின் முகம் மலர்ந்தது.

'அமெரிக்க சுதந்திரத் தினத்தன்று திறந்தவெளியில் கண்கவர் வாண வேடிக்கை நடக்கும். இது எல்லா மாகாணங்களிலும், நகரங்களிலும் நடக்கும். வாண வேடிக்கை பார்ப்பதற்குத் திரளான மக்கள் குடும்பத்துடன் வருவார்கள். வாண வேடிக்கையைப் பார்க்கும்போதெல்லாம் மணி, 'இது என்னுடைய தாத்தா பேக்டரியிலிருந்து வந்தது' என்று சொல்வான். என்னோட தாத்தா, எங்க பேக்டரி, எங்களுடைய பட்டாசுகள் என்று சொல்லிக் கொள்வதில் அவனுக்கு மிகவும் பெருமை. இதனால் அவனுடைய வகுப்பு நண்பர்களிடையே அவன் ஹீரோ!' என்று சொன்ன கார்த்திக், 'அப்பா, சைனாவிலிருந்து குறைந்த விலையில் இந்தியாவுக்கு பட்டாசுகள் இறக்குமதி ஆகிறது அப்படின்னு கேள்விப்பட்டேன். வியாபாரம் நல்லா நடக்குது இல்லையா?' என்றான்.

தங்கவேலு சொன்னார், 'பட்டாசு வியாபாரம் முன்னை மாதிரி இல்லை தம்பி. சைனாவிலிருந்து வர்ற பட்டாசுகள் விலை குறைவு. அதோட போட்டி போடுறதுக்கு விலையைக் குறைக்க வேண்டியிருக்கு. மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒரு சில ரசாயனப் பொருள்களை உபயோகப்படுத்தக் கூடாது அப்படின்னு சொல்றாங்க. பட்டாசு கடை போடறவங்க ஊருக்குள்ள போடக் கூடாது. ஊருக்கு வெளியே மைதானத்தில போடுங்க அப்படின்னு கட்டுப்பாடு. ஊரை விட்டுத் தள்ளி மைதானத்துக்கு வந்து வாங்குறவங்க குறைச்சலா இருக்காங்க. பட்டாசு புகையினால சுற்றுச் சூழல் கெட்டுப் போவுது. அதனால பட்டாசு தொழிலை தடை போடணும் அப்படிங்கிற முயற்சியும் நடந்துகிட்டிருக்கு. முன்னே போல நிறைய பட்டாசு வாங்கிறவங்க குறைஞ்சு கிட்டே வராங்க. முன்னே எல்லாம் தீபாவளின்னா விருந்து, பட்டாசு, புது சினிமா அப்படின்னு இருந்தது. இப்போ டெலிவிஷன்ல பண்டிகை அன்னிக்கு நிறைய சினிமா, பட்டி மன்றம் அப்படின்னு போடறாங்க. பட்டாசு சுடுறதுக்கான நேரமும் குறைஞ்சுக்கிட்டு வரது. ஆகக் கூடி தொழில் நலிஞ்சுதான் போய்க்கிட்டிருக்கு தம்பி' என்றார் தங்கவேலு.

'பட்டாசு தொழில்ல சின்னப் பசங்க நிறைய வேலை செய்றாங்க. அது சட்டப்படி குற்றம். பாதுகாப்பில்லாத இந்தத் தொழில்லே, படிக்க வேண்டிய பிள்ளைகளை வேலை செய்ய வைக்கிறாங்க. அதனாலே யாரும் பட்டாசு வாங்காதீங்க... அப்படியெல்லாம் பிரசாரம் பண்ணறாங்க. நம்ம பேக்டரியில சின்ன பையன்களை வேலையிலிருந்து எடுத்துட்டீங்க இல்ல' என்றான் கார்த்திக்

'நல்ல கேள்வி கேட்டே. யாரு சொல்லி உங்க அப்பாரு கேட்பாரு. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். அரசாங்கத்திலிருந்து பேக்டரி சோதனை அப்படின்னு வர்றவங்க 'ஐயா, சின்ன பசங்களை வேலையில வைக்கக்கூடாது அப்படின்னு சட்டம் இருக்கு' அப்படிம்பாங்க. உங்க ஐயா, 'அவ்வளவுதானே, அவங்களை வேலையை விட்டு அனுப்பிடுவோம்' அப்படிம்பாங்க. அவங்களும் சரின்னு சொல்லிட்டு தீபாவளிக்கும், பொங்கலுக்கும், துணிமணி, பட்டாசு வாங்கிட்டுப் போயிடுவாங்க. இது மாதிரியே தான் வருஷா வருஷம் நடந்துகிட்டு வருது' என்றாள் வள்ளி.

'ஏன் புள்ளே, நான் என்ன அவங்களைக் கடத்திக்கிட்டு வந்தா வேலையில வெச்சிருக்கேன். அவங்க குடும்பச் சூழ்நிலை அப்பிடி. குழந்தைகளும் வேலைக்குப் போனாத்தான் இரண்டு வேளை சாப்பாட்டிற்குப் பணம் கிடைக்கும் அப்படின்னு அவங்களை வேலைக்கு அனுப்பறாங்க.

இவங்களை அனுப்பிச்சுட்டு 18 வயதுக்கு மேலே உள்ளவங்களை வேலைக்கு வைச்சா சம்பளம் அதிகமா கொடுக்கணும். அது மட்டுமில்லாம, இவங்களை வேலையைவிட்டு அனுப்பிச்சா அந்தக் குடும்பம் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ணும்?'

'இத்தனை காலம் உழைச்சாச்சு. உங்களுக்கு வயசு ஆகுது. ஏன் நீங்க பேக்டரியை வித்துட்டு நிம்மதியா ஓய்வு எடுக்கக் கூடாது. எங்க கூட வந்து அமெரிக்காவில தங்கிடுங்க' என்றான் கார்த்திக்.

'நீ சொல்றது மனசுக்கு சந்தோஷமா இருக்கு தம்பி. ஆனா, நம்ம பேக்டரியை நம்பி 500 குடும்பங்கள் இருக்கு. பேக்டரியை மூடினா இந்தக் குடும்பங்களோட வாழ்வு ஆதாரம் போயிடும். நம்ம கிட்டேயிருந்து பேக்டரியை வாங்கறவங்க இவங்களை வேலையில வைச்சுப்பாங்க அப்படின்னு நிச்சயமா சொல்ல முடியாது.'

'கண்டிப்பா நானும் வள்ளியும் அமெரிக்கா வந்து கொஞ்ச நாள் இருப்போம். நிரந்தரமா முடியாது. சொந்தம், பந்தம், கோயில், நாடு இதையெல்லாம் விட்டு அன்னிய மண்ணில இருக்கிறதுக்கு மனது ஒட்டாது தம்பி.'

அடுத்த நாள் எல்லோருமாக பேக்டரி பார்க்கச் சென்றார்கள். பேரனுக்காக வாணவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் தங்கவேலு. எல்லா வெடிகளைப் பற்றியும் கேட்டறிந்து, ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மணி. தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேக்டரியை வலம் வந்தான் மணி.

'எல்லாம் அறிய வேண்டும்' என்கிற ஆர்வம். நிறைய கேள்விகள் கேட்டான் மணி. பட்டாசு வகைகளின் பெயர்களைக் கேட்டறிந்தான். பட்டாசு தயாரிக்கும் விதம், பெட்டியில் போட்டு மேலே பெயர் ஒட்டுதல் என்று எல்லாமே அவனுக்குப் புதிதாக இருந்தது. 'நாம் ஒரு விநாடியில், விடுகின்ற பட்டாசுகள் செய்வதற்கு இத்தனை பேர் வேலை செய்கிறார்களா?' என்று எண்ணிப் பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருந்தது.

குச்சி மத்தாப்புகள் செய்யும் இடம் வந்தார்கள். அங்கு பெரும்பாலும் சிறுவர், சிறுமிகளே வேலையில் இருந்தார்கள். குடுவையில் இருந்த ரசாயனக் கலவையை எடுத்து, குச்சியின் முனையில் அந்தக் கலவையைப் பூசும் வேலையை சில சிறுவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். சில சிறுவர்கள், குச்சி மத்தாப்புகளை அடுக்கி, அதற்குண்டான சிறிய பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சில சிறுவர்களே, கையில் கையுறை அணிந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். பல சிறுவர், சிறுமியர் உடைகள் கிழிந்தும், அழுக்காகவும் இருந்தது.

எல்லாமே பத்து அல்லது பன்னிரண்டு வயதுச் சிறுவர்கள். 'ஏன் தாத்தா, இவங்க எல்லாம் பள்ளிக்கூடம் போக மாட்டாங்களா? ஏன் இவங்க எல்லாம் படிக்கப் போகாம, வேலை பண்ணறாங்க? அவங்களைப் பார்த்துக்கிறதுக்கு யாரும் இல்லையா? பாவம் தாத்தா, இந்தப் பசங்க!' என்றான் மணி. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. முதன் முதலாக, நாம் தப்பு செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி தங்கவேலு மனதில் தோன்ற ஆரம்பித்தது.

சிறுவர்கள் வேலை செய்வதைப் பார்த்ததில் இருந்து, பேக்டரி சுற்றிப் பார்க்கும் ஆர்வம் மணியிடம் குறைந்தது போலத் தோன்றியது. அதற்கப்புறம் அவன் அதிகக் கேள்விகள் கேட்கவில்லை. முகத்தில் கவலை தெரிந்தது. அந்தப் பிஞ்சு மனத்தின் எண்ண ஓட்டத்தை யாரறிவார்?

வீடு திரும்பி, மதிய உணவு உண்ணும்போதும் அவன் கலகலப்பாக இல்லை. மற்றவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிடும் மணி, சிரத்தை இல்லாமல் உணவை உண்டு அம்மாவுடன் தூங்கச் சென்றுவிட்டான்.

மதிய நேரம் கண் அயரும் தங்கவேலுவாலும் தூங்க முடியவில்லை. மணி கேட்ட கேள்விகள் மனத் திரையில் ஓடிக் கொண்டிருந்தது. தூங்கியதுபோதும் என்று எழுந்து வந்த தங்கவேலுவை கூடத்தில் கண்ட காட்சி பதற வைத்தது. மணி கூடத்தில் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் மத்தாப்புப் பெட்டிகள். பெட்டிகளில் இருந்த குச்சிகளை கீழே இறைத்து விட்டு அவற்றை மறுபடியும் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்தான் மணி.

தங்கவேலுவைப் பார்த்தவுடன், ' தாத்தா, நானும் பேக்டரியில பார்த்த அண்ணா, அக்கா மாதிரி பட்டாசு பண்ற வேலை செய்யறேன்' என்றான்.

'வள்ளி, எல்லாரும் என்ன செய்யறீங்க? எங்கே போய்ட்டீங்க? குழந்தை கையில இந்த மத்தாப்புப் பெட்டிகளை எல்லாம் யார் எடுத்துக் கொடுத்தாங்க?' என்று படபடத்தார் தங்கவேலு.

'மணி, இந்த தீக்குச்சியோட முனையில இருக்கிறதெல்லாம் ரசாயனப் பொருள்கள். கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தா சீக்கிரமே தீப்பிடிச்சுக்கும். உன்னோட கையில இருக்கும்போது தீப்பிடிச்சா உன்னோட கைசுடாதா? அதனால தான் இந்த பெட்டியை எடுக்க வேண்டாம்னு சொல்றேன்.

தீக்குச்சி முனையில இருக்கிற ரசாயனப் பொருள் கையில ஒட்டிக்கும். அதைத் தொட்டா கையை நல்லா சோப்பு போட்டு கழுவிட்டு அப்புறம் தான் சாப்பிட உட்காரணும். இல்லைன்னா அந்த ரசாயனப் பொருள்கள் உன்னோட சாப்பாட்டோட வயிற்றுக்குப் போயிடும். அது உடம்புக்குக் கெடுதல்' என்று விளக்கினார் தங்கவேலு.

'தாத்தா, இங்க கொஞ்சப் பெட்டிகள் தான் இருக்கு. பேக்டரியில அந்த அண்ணா எல்லாம் வேலை செய்யற இடத்தில நிறைய மத்தாப்புப் பெட்டிகள், மத்தாப்புக் குச்சிகள். அந்தக் குச்சிகள் தீப்பிடித்தா அந்த அண்ணாக்களுக்கு சுடாதா? ஒரு பெட்டியில தீப்பிடிச்சா, அது அங்கே இருக்கிற மீதி பட்டாசுகள் எல்லாத்துக்கும் பரவிடாதா? அப்ப, நிறைய பேருக்கு தீக்காயம் ஏற்படாதா? நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு தாத்தா' என்றான் மணி.

'அவங்க எல்லாருமே வேலை செய்யும்போது தீக்குச்சியைத் தொடறாங்க. அப்ப அவங்க கையிலும் ரசாயனம் ஒட்டிக்கும் இல்லையா. சாப்பிடறதுக்கு முன்னாடி அவங்க நல்லா கை கழுவிக்கிட்டாங்களா அப்படின்னு யாரு தாத்தா பார்த்துக்குவாங்க. அவங்க பக்கத்தில அப்பா, அம்மா, தாத்தா அப்படின்னு யாருமே இல்லையே. ஒழுங்கா கை கழுவாம சாப்பிட்டா, அவங்களுக்கு வியாதி வராதா? பாவம் தாத்தா அவங்க.'

மணியின் ஒவ்வொரு கேள்வியும் தன்னைச் சம்மட்டியால் அடிப்பதைப் போல உணர்ந்தார் தங்கவேலு. வியாபாரம், லாபம், இதை மனதில் வைத்து, பெரியவர்களை விடவும் சிறுவர்களுக்கு கூலி குறைவாகக் கொடுத்தால் போதும் என்று சிறுவர்களை பணிக்கு அமர்த்தியது தவறு என்று மனதை உறுத்த ஆரம்பித்தது.

தங்கவேலுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. இரவு உணவு பிடிக்கவில்லை. பொதுவாக நன்றாக உறங்கும் அவரால் அன்று இரவில் உறங்க முடியவில்லை.

குழந்தையின் கேள்வி அவரை வாட்டியது. கண்ணை மூடினால் மணி பேக்டரியில் அமர்ந்து மத்தாப்புக் குச்சிகளைப் பெட்டியில் போடுவது போல கனவு வந்தது. மணியின் விரல்களில் ரசயானக் கலவைகள். மணியின் விரல்களில் சரும வியாதி. மத்தாப்பு தீக்குச்சிகள் பற்றி எரிகின்றன. அவற்றின் நடுவில் மணி.

'மணி' என்று அலறியபடியே விழித்தெழுந்தார் தங்கவேலு.

காலையில் சீக்கிரம் எழுந்து, காலைக்கடன் முடித்து, குளித்து, சாமி கும்பிட்டு காலைச் சிற்றுண்டிகூடச் சாப்பிடாமல் பேக்டரி சென்று விட்டார் தங்கவேலு.

காலைச் சிற்றுண்டியின்போது , 'காலையிலிருந்து அப்பாவைக் காணுமே. அப்பா எங்கேம்மா போயிருக்கார்?' என்று கேட்டான் கார்த்திக்.

'உங்க அப்பா ராத்திரி முழுக்கத் தூங்கலை. தூக்கம் பிடிச்சாலும் மணி அப்படின்னு அலறியபடியே எழுந்திட்டார். காலையில குளிச்சு, டிபன் சாப்பிடாமல் பேக்டரிக்கு போய் விட்டார்' என்றாள்.

சிறிது நேரத்தில் திரும்பிய தங்கவேலுவின் முகத்தில் என்றுமில்லாத மலர்ச்சி. மனைவி, மகன், மருமகளைக் கூப்பிட்ட தங்கவேலு சொன்னார்.

'ஒரு நல்ல செய்தி. வேலையிலே இருந்த சின்னப் பிள்ளைகளை வேலையிலே இருந்து எடுத்துட்டேன். அவங்க பள்ளிக்கூடம் போறதுக்கும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்துட்டேன். இதனால சம்பந்தப்பட்ட குடும்பத்தோட வருமானம் பாதிக்காம இருக்க மாற்று வருமானத்திற்கு கலெக்டர்கிட்ட பேசி ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். அவங்களுக்கு மாற்று வருமானம் கிடைக்கிற வரைக்கும் பேக்டரி முழுச் சம்பளம் கொடுக்கும்.

இந்தத் தொழில்ல வர லாபம் எல்லாம், நம்ம கிட்டே வேலை செய்யறவங்க குழந்தைகள் படிப்புக்குச் செலவு பண்றது அப்படின்னு முடிவு பண்ணிட்டேன். இத்தனை நாளா நான் செஞ்சிக்கிட்டு இருந்த தப்பு எனக்கு இப்ப நல்லாப் புரியுது. அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகன் மாதிரி, நான் செய்யற தப்பை பேரன் மணி மூலமா, கடவுள் எனக்குப் புரிய வைச்சுட்டார். இப்பதான் என்னோட மனது நிம்மதியா இருக்கு' என்றார்.

சிறார்களைப் பணிக்கு அமர்த்தக் கூடாது என்ற சட்டம், மனைவியின் அறிவுரை அவர் மனதை அசைக்கவில்லை. ஆனால், பேரனின் கேள்வி அவருடைய தவறை சுட்டிக் காட்டியது. சட்டமும், அதிகாரமும் செய்யாத மனமாற்றத்தை, பேரனுடைய பாசம் சாதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com