40 நாடுகள்... 300 நடன நிகழ்ச்சிகள்!

அனைத்துக் கல்வியும் உச்சத்தில் ஒன்றுசேரும் புள்ளியே கலை. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.'' என்கிறார் பரதநாட்டியக் கலைஞர் பாலாதேவி சந்திரசேகர்.
40 நாடுகள்... 300 நடன நிகழ்ச்சிகள்!
Updated on
4 min read

"மனிதர்களைப் புரிந்துகொள்வதும் கலையில் ஓர் அம்சம்தான். அந்தப் பணியில் நான் வெற்றிகரமாகச் செயல்பட்டேன். ஏழு பல்கலைக்கழகங்களில் பணியாற்றி இருக்கிறேன். எப்போதும், எங்கும் நடன ஈடுபாட்டை மட்டும் நான் விடவே இல்லை. அனைத்துக் கல்வியும் உச்சத்தில் ஒன்றுசேரும் புள்ளியே கலை. அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.'' என்கிறார் பரதநாட்டியக் கலைஞர் பாலாதேவி சந்திரசேகர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் பங்கு பெற்ற ஒரே பாரம்பரிய நடனக் கலைஞரான இவர், அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி, பிரிஸ்டனில் அமைந்துள்ள கலைக்கழகமான ஸ்னாபா நிகழ்த்துக் கலை அகாதெமி இயக்குநராக இருக்கிறார்.

பரதநாட்டியக் கலைஞர், ஆராய்ச்சியாளர், இந்தியக் கலாசாரத் தூதர் உள்ளிட்ட பன்முகத்தன்மைகளுக்குச் சொந்தக்காரரான இவர், 40 நாடுகளில் 300 பரதநாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

அவருடன் பேசியபோது:

"எனது சொந்த ஊர் தஞ்சாவூர் அருகேயுள்ள உமையாள்புரம். எனது கொள்ளுத் தாத்தா நீலகண்ட சாஸ்திரி நாடக ஆசிரியர். தியாகபிரும்மத்தின் சமாதி அருகே சமாதியாகியுள்ள அவர், மகா பெரியவர் பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்குக் குருவாக இருந்தவர்.

எனது சித்தப்பா சாந்தானந்தபுரி எனது 'உத்தவ கீதை', 'விஷ்வம்' 'திரிபுரா' என்ற மூன்று நடனத் திட்டங்களுக்கு திரைக்கதையை எழுதியவர். அவர் திருவண்ணாமலையில் சித்தி அடைந்தார். எனது கணவரின் உறவினர்களான சுந்தர பாகவதர், கிருஷ்ண பாகவதர், சுவாமி பாகவதர் ஆகியோர் தியாகப்பிரும்மத்தின் மாணவர்கள்.

நூறாண்டு பாரம்பரியம் கொண்ட உமையாள்புரம் ராமர் மடத்தில், ஆண்டுதோறும் நாங்கள் குடும்பத்தினருடன் சென்று, சீதா கல்யாணம் நடத்தி வருவோம். அப்போது நான் பலமுறை நடனமாடியுள்ளேன்.

எனது பெற்றோருக்கு நடனம், இசை என்று கலையார்வம் உண்டு. ஐ.ஐ.டி. டீனாக இருந்த என் மாமனார்தான் எனக்கு வீணை, மிருதங்கத்தை முதன் முதலில் பைபர் கிளாஸில் செய்து அளித்தார். இந்தப் பின்புலத்தில்தான் நான் நடனம் கற்றேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டமும், பொது மேலாண்மையில் எம். ஃபில் பட்டமும் பெற்றேன். எண்ணெய் நிறுவனங்கள் பற்றி ஆய்வு செய்தேன். தொழிலாளர் பட்டயப் படிப்பைப் படித்தேன். யூ.கே. பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.ஏ. அங்கீகாரம் பெற்ற மதிப்பீட்டாளராகத் தேறினேன். படிப்பிலும் கலையிலும் சிறந்த மாணவராக இருந்தேன். இப்படி கல்வி, கலை என இருதரப்பு ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டேன்.

11 நாட்டியப் படைப்புகள்: பரதநாட்டியத்துக்கு எனது முதல் குரு ஹைதராபாத் ஜெயலட்சுமி நாராயணன். கலைகளை ஆராய்ச்சியாக, ஆய்வு நோக்கோடு பார்க்க டாக்டர் பத்மா சுப்பிரமணியத்திடம் கற்றேன். அதனால் என்னுடைய 11 நாட்டியப் படைப்புகளை ஆராய்ச்சிபூர்வமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.

நந்தனாரின் கதையிலிருந்து 'நந்தனார் சரித்திரம்' ஆரம்பித்தேன். 'எம்.எல்.வி. ஃபேவரைட்ஸ்' என்பது எம்.எல்.வி.யின் கானங்கள் சார்ந்தது.

'கிருஷ்ணார்ப்பணம்', 'உத்தவ கீதா' ஆகியன பகவான் கிருஷ்ணரின் கடைசி செய்தி பற்றியதாகும். 'விஷ்வம்' என்பது இறைசக்தியையும், 'திரிபுரா' என்பது அம்பாளையும், 'கர்ணா' என்பது விதியின் குழந்தையாகிய கர்ணனையும் கூறும்.

'பிரகதீஸ்வரர்' என்பது வடிவத்திலிருந்து வடிவமின்மை நோக்கியது என்பது தேவரடியார்களின் பார்வையில் தஞ்சை பெரிய கோயிலின் பெருமை கூறுவதாகும்.

'பத்மாவதி' என்ற அவதாரமானது பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஜெயதேவர் எழுதியது என்பதோடு, அது புரி ஜெகந்நாதர் தொடர்புடையது.

'தஞ்சை நால்வர்' என்பது முத்துசாமி தீட்சிதரின் மாணவர்களான பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வரின் பாணியிலான நடனப் படைப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 'மா' என்ற பூமித்தாய்க்கான காலநிலை மாற்றம், வனப்பகுதிகள் அழிப்பைப் பற்றிப் பேசும் படைப்பு. இப்படி ஒவ்வொரு கருத்தாக்கமும் ஒவ்வொன்றைப் பேசும்.

'மாவுலி' என்பது கால எல்லையற்ற பாரம்பரியமாகும். பந்தர்பூர் மரபைக் கொண்டது. யாத்ரிகர்களில் 250 கி.மீ. நீண்ட நடைப்பயணம் சார்ந்தது . இப்படி உலகத்தரப் படைப்பாக உருவாக்கி, பரதத்தின் மூலம் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேர நிகழ்ச்சிகளாக்கி இருக்கிறேன்.

தமிழில் மட்டுமல்ல. தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி, பெங்காலி, ஒரியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் செய்துள்ளேன். பரதக் கலைக்கு மொழி ஒரு தடை இல்லை. மொழி எல்லைகளைக் கடந்து தான் இதைச் செய்து வருகிறேன். இந்த நடன முயற்சி உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன.

ஆய்வுகள்: ஆய்வுகள் பலவற்றுக்கு முன்மாதிரிகள் இருக்காது. முறையான நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், சுவடிகள், நூல் வடிவில் இல்லாத செய்திகள், இசைக் குறிப்புகள், உபன்யாசங்கள், ஆகமங்கள், சில்ப, நடன சாத்திரங்கள் என்று பலவற்றையும் எடுத்து ஆராய்ந்து, அதிலிருந்து ஒரு கருத்தை உருவாக்குவதாக இருக்கும். எனது நாட்டியத் தயாரிப்புக்கு இப்படிப் பலவற்றையும் அணுகித்தான் அந்தப் படைப்பை நான் உருவாக்குகிறேன்.

பரதநாட்டியம் கற்பித்தல்: பரதநாட்டியத்தை 1992-இல் இருந்து கற்றுக் கொடுத்து வருகிறேன். நடனம் ஆடுவது ஓர் அனுபவம். கற்பித்தல் வேறொரு அனுபவம். ஒரு கட்டத்தில் அலுவலகப் பணிகள் தேவையில்லை என்று அனைத்தையும் கைவிட்டு முழுமூச்சாக நாட்டியம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அமெரிக்காவில், இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தோரும் பரதநாட்டியம் கற்று வருகிறார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக நமது கலாசாரத்தை மதித்து நம்பிக்கையோடு என்னிடம் வருகிறார்கள்.

இந்தியர்கள் கலையை பொக்கிஷமாக நினைக்கிறார்கள். ஒரு வகுப்பையும் தவறவிட மாட்டார்கள். இந்தியர் அல்லாதவர்களும் கற்கிறார்கள். அவர்களோ கோயில், சிற்பம், நாட்டியம், அசைவுகள் பற்றி எல்லாம் மிகவும் ஆர்வமாகக்கேட்பார்கள்.

பல்கலைக்கழகங்களில் நடனம்: நடனம் மட்டுமல்லாமல், கலை, வரலாறு, மதம், தத்துவம் ஆகியவற்றில் விரிவுரை வழங்குவதிலும், அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதிலும் எனக்கு ஆர்வம் அதிகம்.

1986-ஆம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் பயணம் செய்து வருகிறேன். பிரின்ஸ்டன், யூ பென், கொலம்பியா, கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து), லாட்வியா போன்ற பல்கலைக்கழகங்களிலும் ஏராளமான கல்லூரிகளிலும் நடன நிகழ்ச்சிகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறேன். நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் அருங்காட்சியகத்தில் ஆசிய பாரம்பரிய வார விழாவில் ஆடி இருக்கிறேன். பல்வேறு நாடுகளில் இந்திய கலாசாரத் திருவிழாக்களில் நடனமாடி இருக்கிறேன். பல்வேறு நாடுகளின் தூதரகங்களில் விரிவுரை செய்ததோடு நடனமாடியும் இருக்கிறேன்.

மொழி, கலை தெரியாதவர்களும் எனது நடனத்தை ரசிப்பார்கள். ஸ்பெயினில் உலக யோகா தினம் ஜூன் 21-இல் கொண்டாடப்பட்டபோது, 'உத்தவ கீதை'யை ஆடினேன். துபையில் 'கர்ணன்' ஆடினேன். பல்வேறு நாட்டு தூதரகங்களிலும் இந்தியாவின் கலையின் பிரதிநிதியாக சென்று நான் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். 2024 ஒலிம்பிக்கில் ஆடினேன். யுனெஸ்கோவில் 150 தூதர்கள் மத்தியில் 'பிரகதீஸ்வரர்' ஆடினேன்.

பியூஜி -இமாலயா இரண்டையும் ஒப்பிட்டு ஒரு நடனம் நிகழ்ச்சி நடத்துமாறு ஜப்பான் தூதர் கோரியபோது, ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நிகழ்ச்சியை நடத்தினேன். இப்படி வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.

உலகின் எந்த நாட்டு இசைக்கும் ஆட முடியும். அந்த அளவுக்கு நமது நாட்டிய இலக்கண அமைப்பு பன்முகத் தன்மையோடு இருக்கிறது. அண்மையில் தென் அமெரிக்காவின் சிலிக்குச் சென்றபோது, அங்கே பாங்கோ என்று ட்ரம்மில் இசைக்கப்பட்ட ரிதத்துக்கு நான் ஆடினேன். ஆடும்போது நமது பரதநாட்டியமாகவே இருக்கும். ஆனால் இசை வேறாக இருக்கும். இவ்வளவு ஆடினாலும் , சென்னை மார்கழி உற்சவத்திலும் கலந்து கொள்வேன். தஞ்சை, மதுரை, திருச்சி, மும்பை, தில்லி உள்ளிட்ட இடங்களிலும் ஆடுவேன்.

அமெரிக்கா சென்று 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், ஆறு மாதங்கள் இந்தியாவிலும், மற்ற ஆறு மாதங்கள் வெளிநாடுகளிலும் இருப்பேன். எங்கிருந்தாலும் நாட்டையும் கலாசாரத்தையும் மறக்க மாட்டேன்.

மறக்க முடியாத நிகழ்வுகள்: லண்டனில் எனது நடன நிகழ்ச்சிக்கு வந்த கர்ப்பிணி, மூன்று குழந்தைகள் கருச்சிதைவு ஆகிவிட்டதால் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் என்னிடம், 'இப்போது இருப்பது நாலாவது குழந்தை. உங்களது நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் உங்களைத் தொட்டுவிட்டுச் சென்றால், அந்த அதிர்வலையில் எனது நான்காவது குழந்தை நன்றாக இருக்கும்' என்று கூறினார். அப்படிச் சென்றவரை அடுத்த ஆண்டு குழந்தையுடன் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. அப்படிப்பட்டது தான் நமது கலையின் மகத்துவம்.

லாட்வியா நாட்டில் 'கர்ணா: விதியின் குழந்தை' நடன நிகழ்ச்சியை நடத்தினேன். அப்போது ஒரு பெண் என்னிடம், 'என்னுடைய கணவர் ஒரு நாடக நடிகர். உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு இப்போதுதான் கிளம்பினார். நீங்கள் ஆடும்போது உங்கள் தலைக்குப் பின்னே ஒளிவட்டம் தெரிந்ததாகக் கூறியிருந்தார். நீங்கள் ஆடிக் கொண்டிருந்தபோது பூமாரி பொழிந்தது போல், தான் உணர்ந்ததாக அவர் சொன்னார்' என்றார்.

துபையில் நான் இந்திய தூதரக உள் அரங்கத்தில் 'கர்ணன்' ஆடியபோது, இர. செய்யத் அபு தாஹிர் என்ற விமர்சகர் அழகாக ரசித்து எழுதியிருந்தார்.

தஞ்சையில் 'பிரகதீஸ்வரர்' ஆடும்போது, டி.என். ராமச்சந்திரனும் குடவாயில் பாலசுப்பிரமணியனும், 'எங்களது 50 ஆண்டு கால கல்வெட்டுகள் சார்ந்த ஆராய்ச்சிகள் எல்லாம் நேரில் கண் முன் பார்த்தது போல அதை அப்படியே தனது நடனத்தில் கொண்டு வந்திருக்கிறார்' என்று கூறியதை மறக்க முடியாது .

தூதரகங்களில் ஆடும்போது நமது நடனம் பற்றியும், அதற்கான உடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள், போட்டுக் கொண்டிருக்கும் கொண்டை, கால்களில் வரைந்து கொண்டிருப்பது பற்றியும், கோயில்களின் பரதத்தின் பின்னணி பற்றியும் கேட்பார்கள். நடனத்துக்குரிய சங்கீதத்தின் நுட்பங்கள் பற்றியும் கேட்பார்கள்.

விருதுகளும், பாராட்டுகளும்...: தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி', ஆந்திர அரசின் 'நாட்டிய சூடாமணி', 'நிருத்ய ரத்னா', 'நாட்டிய கலாபாரதி', 'விஸ்வ கலா பாரதி', 'கலா ரத்னா', 'கலா விபாஞ்சி', 'கலாபாரதி', 'பரத கலாவாணி', 'தலைக்கோலி', 'பரத நிருத்ய சேவா மணி', 'நிருத்ய கலா ரஞ்சனி', 'திருஷ்டி புரஸ்கார்', அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாண அரசு வழங்கிய 'ப்ராக்லமேஷன்' உள்ளிட்ட பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து கௌரவம் கொடுக்கும் வகையில் எல்லாமே முக்கியமானவைதான். இருப்பினும், தமிழ்நாடு அரசு கொடுத்த கலைமாமணியும், எனது குரு பத்மா சுப்பிரமணியம் வழங்கிய 'பரத நிருத்ய சேவா மணி' விருதும் விசேஷம் என்று நினைக்கிறேன். இவை எதிர்காலத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியைக் கூட்டுவதாகவும், ஊக்கம் அளிப்பதாகவுமே உணர்கிறேன்'' என்கிறார் பாலாதேவி சந்திரசேகர்.

-அருள்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com