மனதை மயக்கும் தெய்வீக இசையைத் தந்திடும் வாத்தியம் என்றவுடன் நினைவுக்கு வருவது நரசிங்கன்பேட்டை நாகசுரம்தான். கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள நரசிங்கன்பேட்டையில் தயாராகும் நாகசுரங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை என்பதோடு, புவிசார் குறியீடும் பெற்றவையாகும்.
இங்குள்ள பாரம்பரிய நாகசுரத் தயாரிப்புக் கூடங்களுள் ஒன்றான என்.எல்.கே. நாகசுரம் குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசியபோது:
'ஐந்து தலைமுறைகளாக நாகசுரத் தயாரிப்பில் விளங்கிடும் ஊர் இது. நாகசுவரச் சக்கரவர்த்தியான டி.என். ராஜரத்தினம் பிள்ளையும், நாகசுரத் தயாரிப்புப் புகழ் என்.ஜி. ரெங்கநாதன் ஆச்சாரியும் இணைந்து ஆதார சுருதியான அடிப்படை மத்யமத்தை நாகசுரத்துக்கு அமைத்தது இந்த மண்தான். நீளமான வாத்தியத்தை இரண்டாகப் பிரித்து பையில் எடுத்துச் செல்லும்படியான கண்டுபிடிப்பும் அவருடையது தான்.
எனக்கும் நாற்பது வருட அனுபவம் உண்டு. பொறியியல் பட்டதாரியான எனது மகன் சபரிகிரி, கடந்த ஐந்து வருடங்களாக எனக்கு உதவி செய்து வருகிறார்.
எங்களுடையது என்.எல்.கே.நாகசுரம். 'நாராயணசுவாமி லட்சுமணன் கந்தசாமி ஆச்சாரி' என்று பொருள். எங்களது பரம்பரையில் முன்னோர் பெயர்களின் தொடக்கத்தை இணைத்து அடையாளப் பெயராக இட்டுக் கொள்வது மரபு. இதுபோல் நான்கு குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் பங்காளி உறவு முறைதான்.
அடிப்படைத் தயாரிப்பு ஒன்றுபோல் தெரிந்தாலும் உள்வேலைகள் நுணுக்கமானவை. வித்தியாசங்கள் உண்டு. ஒவ்வொருவருடைய தயாரிப்பு முறைக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அவற்றை வேறுபடுத்திக் காட்டவே இப்படி பெயர் அமைத்து அழைப்பார்கள். ஒருவர் பாணித் தயாரிப்பைக் கையாளும் வாத்தியக்காரர்கள் இன்னொருவர் பாணித் தயாரிப்பைக் கையாள மாட்டார்கள். இது தலைமுறைகளாகக் கடந்து வரும் தொடர்பு.
'நாகசுரம்' அல்லது 'நாயனம்' என்பது அனைவரும் அறிந்த பெயர். 'மங்கலவாத்தியம்' என்கிற சிறப்பு இதற்கு மட்டுமே உண்டு. கிடைவாட்டில் இதனை இருத்திப் பார்க்கும்போது ஒரு பாம்பு போலவே இருக்கும். இதனால் 'நாகசுரம்' என்பது பெயர். நாகர் இனத்தவர் வாசித்த வாத்தியம் என்பதால் 'நாகஸ்வரம்' ஆயிற்று. ஆயினும் 'பெருவங்கியம்' என்பதுதான் தமிழ்ப்பெயர்.
நாகசுரமானது குழல், திமிரி, அணைசு, சீவாளி ஆகிய பாகங்களைக் கொண்டது. கூடு போன்ற நீண்ட மரக்குழல் உடல் என்றும் உடலின் மேல் பொருத்தப்படும் உலோகக் கவசமானது கெண்டை (சீவாளியையும் நாகசுரத்தினையும் இணைக்கும் பகுதி ) என்றும், புனல் போன்று விரிந்த கீழ்ப் பகுதி அணைசு என்றும் இசைக்கப்படுதற்காக முனையில் செருகப்படும் பகுதி சீவாளி என்றும் வழங்கப்படும்.
நாகசுரம் மட்டும் நரசிங்கன்பேட்டையிலும், சீவாளி அருகிலுள்ள திருவாவடுதுறையிலும் தயாரிக்கப்படுகின்றன. தாங்குக்கயிறு மூலம் உடலையும் அணைசுவையும் சேர்த்து கட்டியிருப்போம். இந்தக் கயிற்றில்தான் தங்களது பட்டங்களையும் பரிசுகளையும் வாத்தியக்காரர்கள் கோர்த்திருப்பார்கள். இது அவர்களுக்கான கெüரவ அடையாளம்.
நாகசுரத்தின் உடல் பகுதியைத் தயாரிக்க ஆச்சாள் (செங்கருங்காலி) மரங்களும், அணைசு பகுதியைத் தயாரிக்க வாகை மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மூங்கில், சந்தனம், செம்பு, தந்தம் முதலியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாகசுரங்கள் முன்னோர்களின் திறனுக்கு எடுத்துக்காட்டு. கல் நாகசுரத்தைக்கூட தயாரித்து வாசித்துக்காட்டி விட்டார்கள். அவ்வளவு ஏன்... தங்கத்தினால் கூட தயாரித்து இருக்கிறார்கள் நம்மவர்கள். ஆயினும், உள்கூடு மரத்தினால் அமைக்கப்பட்டால் மட்டுமே நாதம் முறையாக எழும்பும். இந்த மரங்கள் புதிதாக இருந்தாலும் பயனில்லை. பழைய வீடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட உத்திரம், தூண்களில் இருந்துதான் தயாரிப்பதற்கான மூலப்பொருளைப் பெற இயலும்.
மரங்களைத் தேவையான அளவில் துண்டுகளாக்கியவுடன் தண்ணீரில் ஊறவைத்து விடுவோம். விரிசல் இருந்தால் அந்தப் பகுதியில் தண்ணீர் உறிஞ்சப்பட்டு இருக்கும். இப்படிக் கண்டறிந்த மரத்துண்டுகளை நீக்கிவிடுவோம். பொரிசல் கட்டைகளை நாகசுரமாக இழைக்கும்போது அவை வெடித்துவிடும். சிறு குறைபாடு இருந்தால் கூட அதனை பயன்படுத்த மாட்டோம். பலமுறை கடைசல் மெஷினில் இடப்பட்டு இழைத்து இழைத்து உள்ளீடற்ற குழலான உடலானது தயாரிக்கப்படுகிறது. இதற்கென்று பிரத்யேகமான தயாரிப்புக் கருவிகள் கடைகளில் கிடைக்காது. கத்தி தயாரிக்கும் இரும்புப் பட்டறைகளில் சொல்லி, மிக நீளமான அரம் போன்ற கருவிகளைத் தயாரித்து வாங்கிக் கொள்வோம். இதற்கு 'பிரும்மாஸ்திரம்' என்பது பெயர். 'ஆயுதம்' என்று சுருக்கமாகக் குறிப்பிடுவோம். இதன் ஒரு பக்கத்தில் ஸ்வர ஸ்தானங்களை நாங்களே அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்புதான் நாதத்தில் பேசும்.
இந்த ஆயுதத்தைக் கொண்டு உடலைத் தயாரித்தவுடன் அதற்கு ஒத்து வருகிறார் போல கடைந்து தயாரிக்கப்பட்டுள்ள அணைசுவையும் பொருத்திப் பார்ப்போம். இரண்டும் ஒருசேர பொருந்தி வரவேண்டும். இந்த வேலைகளை மிகவும் நுட்பமாகச் செய்ய வேண்டும். அவரவருக்கென்று உள்ள பேட்டர்ன் அவரவருக்குத்தான் சரியாக வரும்.
முன்பெல்லாம் சுழற்சி முறையில் கயிறு இழுத்துதான் கடைசல் வேலைகளைச் செய்தோம். எங்கள் வீட்டுப் பெண்கள் கூட இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பளு இல்லாமல் காகிதம் போல இருக்கும். இதனை ஜாக்கிரதையாக வடிக்க வேண்டும். அதேபோல் உடல் பாகத்தைத் துளையிட்டு குழாயாக வடிப்பதற்கு இரண்டு ஆள்கள் தேவை. பதினைந்து ஆண்டுகளாக மெஷினில் கடைகிறோம். வேலை வேகமாக ஆகிறது . ஆனாலும் இயந்திரத்தின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நாங்கள் வேலை செய்யும்போது, அந்த அதிர்வின் தாக்கத்தால் கை மூட்டுகள் தேய்மானம், வலி ஏற்படுகிறது. இது சிரமமான ஒன்று. தவிர ஐமரி பாலீஷ் செய்யும்போது விசிறப்படும் மரத்தூள்களால் சுவாசப் பாதை கோளாறுகள் ஏற்படுவதும் சகஜம்.
வாத்தியக்காரர்களுக்கு ஏற்ப நாதத்தின் காத்திர அளவும் மாறுபடும். உதாரணமாக ஒருவருக்கு இரண்டரை கட்டை அளவில் தயார் செய்கிறோம் என்றால், ஸ்ருதிப் பெட்டியில் டி-ஷார்ப் அளவில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு சுருதியும் சரியாக அதனுடன் போய்ச் சேர வேண்டும். இதற்கென்று அளவீட்டுக் கணக்குகள் எல்லாம் கிடையாது. கண்ணும் மனமும் ஒருமித்து அனுமானிப்பதுதான். இந்த சூட்சுமத்தைக் கைக்கொள்வதற்கே எனக்கு 25 ஆண்டுகள் ஆனது. அப்பாவிடம் குருகுலவாசமாகப் பயின்றது தான். எங்கள் மூதாதையர் ஆசிர்வாதம் இது.
தயாரான பிறகு வாத்தியக்காரர்கள் வந்து வாசித்துப்பார்ப்பார்கள். தேவைப்பட்டால் சிறு மாறுதல்களைச் செய்தும் தருவோம். புது வாத்தியங்களை உடனே கச்சேரிக்கு எடுத்துக் கொண்டுபோய் வாசிக்க முடியாது. வாசிக்கவும் கூடாது. வாத்தியம் வாசிப்பவருக்குக் கட்டுப்படாது. புது வாத்தியத்தை சில நாள்கள் மெல்ல மெல்ல வாசிப்புக்குப் பழக்குவார்கள். வாத்தியக்காரர்களின் எச்சில் பட்டு பட்டு அவர்களின் உடல் சீதோஷ்ணத்துக்கேற்ப வாத்தியம் பக்குவப்பட வேண்டும். அதன்பிறகு தான் கச்சேரியில் நெடுநேரம் வாசிக்க இயலும்.
இப்படி கைவாகாகப் பழக்காவிட்டால் வாத்தியம் வெடிக்கக் கூடும். இல்லையெனில், வாசிப்பவருக்கு நெஞ்சுவலி வரை கூட கொண்டு விட்டு விடும். நன்கு பழக்கிய வாத்தியங்களை இரண்டு வருடங்கள் வரை உபயோகப்படுத்தலாம். அதன் பிறகு சிலர் விறைப்பு சீவாளி போட்டு வாசிப்பதும் உண்டு. ஆனால் பெரிய வித்வான்கள் நன்கு சுத்தம் செய்து தங்களிடம் புதிதாகக் கற்றுக்கொள்பவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.
தொலைபேசி வசதி இல்லாதபோது, வாரக்கணக்கில் இங்கு வித்வான்கள் தங்கியிருந்து வாசித்துப் பார்த்து வாங்கிய காலமும் உண்டு. தற்காலத்தில் தொலைபேசியில் உறுதிப்படுத்திக் கொண்டு வந்து வாங்கிச் சென்று விடுகிறார்கள். மூலப்பொருளான பழைய மரங்களை ஆந்திரத்தில் இருக்கும் மொத்த வியாபாரிகளிடம் இருந்துதான் வாங்கி வருகிறோம்' என்கிறார் செந்தில்குமார்.
-சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.