நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...
'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...' என்றார் மகாகவி பாரதியார். உலகில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளைப் புரிந்து அசத்தி வருகின்றனர். இதுபோன்ற சாதனையாளர்களில் சிலரைப் பற்றி அறிவோம்:
தில்லியைச் சேர்ந்த இருபது வயதான நிகிதா, 'வனவிலங்குகளின் தேவதை' என்று அழைக்கப்படுகிறார். இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இவர் தனது பெற்றோருடன் தில்லியில் உள்ள மிருகக்காட்சி சாலைக்குச் சென்றார். அங்கு தனிமையில் நெருக்கடியான சூழலில் வாடிய ஆப்பிரிக்க யானையான 'சங்கரை' கண்டு, மனம் உடைந்தார். இந்த யானையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது ஆப்பிரிக்காவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறி, போராட்டத்தைத் தொடங்கினார். இதற்கு ஏராளமானோர் ஆதரவு அளித்தனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், விலங்குகள் நலத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் யானை உயிரிழந்துவிட்டது. சராசரியாக 70 ஆண்டுகள் வாழக் கூடிய யானை தனது 29-ஆம் வயதிலேயே உயிரைவிட்டது. யானையின் மரணத்தைத் தொடர்ந்து, மைசூரு விலங்கியல் பூங்காவில் இருந்த ஆப்பிரிக்க யானை 'ராம்போ'வுக்காக நிகிதா குரல் கொடுத்தார்.
'யானைகள் கூட்டமாக வாழ விரும்பும் சமூக விலங்குகள். அவற்றை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து அடைத்து வைக்கக் கூடாது. இந்திய கலாசாரத்தில் யானைகளை உயர்வாக மதிக்கிறோம். அவற்றை உரிய அக்கறையோடு நாம் பாதுகாப்பதில்லை' என்கிறார் நிகிதா.
'நீண்ட சுருள்முடி கொண்ட பெண்மணி' என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தமாகி இருக்கிறார் ஜெசிகா எல்.மார்டினெஸ்.
நியூயார்க்கை சேர்ந்த 29 வயதான இவர், தனது 12-ஆம் வயது முதலே முடி வெட்டுவதை நிறுத்திவிட்டு சுருள்முடியை அலங்கரிக்கத் தொடங்கினார். 190 செ.மீ. (சுமார் 6 அடி 3 அங்குலம்) நீளம் கொண்ட சுருள்முடியை வளர்த்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஏவின்டூகாஸ் என்பவர் 165 செ.மீ. சுற்றளவும், 25 செ.மீ. உயரமும், 26 செ.மீ. அகலமும் கொண்ட சுருள்முடியை வளர்த்த சாதனையை ஜெசியா எல்.மார்டினெஸ் முறியடித்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெட்ஹெண்டர்சன் என்பவர் காவல் அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
'வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும்' என எண்ணிய இவர், 'புல் அப்ஸ்' உலகச் சாதனையை முறியடிக்க எண்ணினார். இதற்காக 24 மணி நேரத்தில் 7,070 புல் அப்ஸ்கள் எனும் உலகச் சாதனையை முறியடிக்கத் தீவிரமாகப் பயிற்சியை மேற்கொண்டார். அதன்படி, அவர் 3,500 புல் அப்ஸ்களை செய்தபோதே தசைநார் கிழிந்து பாதிக்கப்பட்டார். இருப்பினும், சாதனையைக் கைவிட மனம் இல்லாத, ஜேட் ஹெண்டர்சன் தனது இலக்கை 24 மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார். சுமார் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னர் களம் இறங்கிய அவர், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்து, கின்னஸ் சாதனையை படைத்தார்.
-கோட்டாறு ஆ.கோலப்பன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

