அகாதெமி ஆஃப் பைன் ஆர்ட்ஸில் இருந்து விலகி, தனது முதல் ஓவியக் கலைக்கூடத்தை பார்சிலோனா நகரில் தனது பதினாறு வயதில் ஆரம்பித்தார் பிக்காஸோ. அன்று தூக்கிய தூரிகையை இறக்கும் வரை விடவே இல்லை. பாரம்பரியப் பயிற்சி முறையில் நாட்டமில்லாமல் தனக்கென்று தனிப் பாணியை வகுத்து, அதில் கவனம் செலுத்தி பலவிதமான ஓவியங்களை வரைந்து முத்திரை பதித்தார்.
1901 முதல் 1904-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிக்காஸோ வறுமையில் வாடினார். இதனால் அவருடைய படைப்புகள் ஏழ்மை நிலையையும், சமூக அவலநிலையையும் சித்திரிப்பவையாக அமைந்திருந்தன. கருநீலம் போன்ற வண்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டிருந்தன.
பின்னர், கவலைகள் மறந்து மகிழ்ச்சியில் திளைத்த பிக்காஸோ அழகிய நிறங்களையும், சிரிப்பூட்டும் நகைச்சுவைப் பாத்திரங்களையும் அதிகம் சித்திரித்தார். 1901-04-ஆம் ஆண்டு வரையுள்ள அவரின் அந்தக் காலகட்ட ஓவியங்களுக்கு 'நீலவண்ணக் காலம்' என்று பெயர். ஏனெனில், நீலநிறங்கள் அதிகம் இருக்கும் வகையில் வரைந்திருந்தார் என்பதால் இந்தப் பெயர்.
சாதாரணமாக அனைத்து ஓவியர்களும் ஆரம்பக் காலத்தில் மகிழ்ச்சியும், இறுதிக் காலத்தில் சோகமுமாக ஓவியங்களை வரைந்தனர். ஆனால், பிக்காஸோவோ ஆரம்பத்தில் சோகம் ததும்பும் ஓவியங்களைப் படைத்தார். நீலவண்ணக் காலத்தில் வலிமை இல்லாத நகர, கிராம மக்களின் நடவடிக்கைகளை வரைந்தார். பிற்கால ஓவியங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
நீலவண்ணக் காலத்தில் 'வயதான இசைக் கலைஞன்' என்ற ஓவியத்தில் எவ்வளவு சோகம் ததும்பியதோ அதைப்போல் ரோஸ் நிறக் காலத்தில் 'பெண்ணின் தலை' என்று பெயரிட்ட ஓவியத்திலும் சிற்பத்திலும் நுணுக்கமும் ரோஸ் வண்ணமும் ஆதிக்கம் செலுத்தி பார்க்கிறவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
இப்படி பிக்காஸோவின் அறிவும் ஆற்றலும் விருத்தி அடையுமாறு செய்தது, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெர்ரூட்ஸ்டின் என்பவரின் நட்புதான். அதற்காக எழுத்தாளரின் உருவப் படத்தை நன்றியுடன் வரைந்து கொடுத்தார்.
-முக்கிமலை நஞ்சன்
தீபம் நா.பார்த்தசாரதி எழுதிய 'குறிஞ்சி மலர்' நீண்ட காலம் பேசப்பட்ட நாவல். அவர் குணநலன்கள் ஒருங்கே அமையப்பட்ட நாயகனாக அரவிந்தன் என்பவரை படைத்துக் காட்டுகிறார்.
நாயகி பூரணியும், சீலத்தின் இருப்பிடமாகத் திகழ்பவர். அவர்கள் ஒழுக்கம், தூய்மை, நேர்மை, கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள். எந்தப் பெண்ணும் தன் நாயகன் அரவிந்தனைப் போல இருக்க வேண்டும் என்றும், எந்த ஆணும் தன் நாயகி பூரணியைப் போல் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கும் காலம் இருந்தது. இன்று அரவிந்தன் மாதிரி ஒருவன் இருந்தால், அவன் கட்டைப் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டியதுதான். வாசகர்கள் மனதில் உயர்ந்த எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு காலகட்டத்தில் மகத்தான மனிதர்களை இலக்கியவாதிகள் படைத்தனர்.
(வெ.இறையன்பு எழுதிய 'இலக்கியத்தில் மேலாண்மை' எனும் நூலில் இருந்து)
கவிதைகளை மட்டுமல்ல; வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறது, அனுபவிக்கிறது என்று கற்றுத் தந்தார் ரசிகமணி டி.கே.சி. அதுதான் ரொம்ப சிறப்பாகப்படுகிறது எனக்கு. என்னுடைய சிறுவயதில் அன்னப்பறவையைப் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்ணீர் கலந்த பாலில், பாலை மட்டுமே உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடும். டி.கே.சி.யும் ஓர் அன்னப்பறவையே. நல்லவற்றையும், சிறந்தவைகளையும் எடுத்துக் கொண்டார். அதைப் பற்றியே பேசினார். பாராட்டினார்.
தமிழ்நாட்டுக்கு இப்படி இன்னொரு அன்னப்பறவை கிடைக்குமா? ஒன்று மட்டும் உண்மை. உலகில் ரசனையும், நகைச்சுவையும் இருக்கும் வரை மாந்தருள் ஓர் அன்னப்பறவையாம் டி.கே.சி.யும் நிலைத்திருப்பார்.
(கி.ராஜநாராயணன் எழுதிய 'மாந்தருள் ஓர் அன்னப்பறவை' எனும் நூலில் இருந்து)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.