பிரமிளா - நான் சந்தித்த பிரபலங்கள் - 38

பிரமிளா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...
பிரமிளா
பிரமிளா
Updated on
3 min read

அமல்தாஸ் - சுசீலாவின் இரண்டாவது மகளாக திருச்சியில் 1956-இல் பிரமிளா பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் அண்ணன் சீசர், தம்பி பிரபு, தங்கை ஸ்வீட்டி. இவர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் 'வாழையடி வாழை'யில் அறிமுகமாகி, கே. பாலசந்தரின் 'அரங்கேற்றம்' படத்தில் பிரபலமாகி, 'என் சொந்தம்', 'ராதா'வில் நடித்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று 250 படங்கள் நடித்தார். சிவாஜியுடன் நடித்த 'தங்கப்பதக்கம்', 'கவரிமான்', தேவரின் 'கோமாதா குலமாதா' குறிப்பிடத்தக்கது.

'என் சொந்தம்' படத்தில் கே. ஆர். விஜயாவின் சிறு வயது கிராமத்துத் தோழியாக அவருக்கு ஈடுகொடுத்து நடித்தார். கிராமப் பெண்ணாகப் பழமொழிகளாகப் பேச வேண்டிய வசனத்தை அவருக்குச் சொல்ல வரவில்லை என்று, அதை விட்டுவிட்டு நடித்த போது நான் இயக்குநர் ஏ.சி. திருலோக

காரைக்குடி நாராயணன்
காரைக்குடி நாராயணன்

சந்தரிடம் சென்று, அந்த வசனம் கண்டிப்பாக வேண்டும் என்று கூறி, அனுமதி பெற்று பிரமிளாவைச் சத்தம் போட்டேன்.

அவர் கண் கலங்கி என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் மனம் கலங்கி அவருக்குச் சொல்லித் தந்து நடிக்க வைத்தேன். எங்களுக்குள் இந்த நிகழ்ச்சி அன்புக்கு அடித்தளமானது. 'அரங்கேற்றம்' வெற்றிப் படமாக அமைந்தது ஊரறிந்த உண்மை. இவர் விலைமாதாக நடித்ததால் எனது அருமையான படம் ராதாவை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், இறந்து போனவன் இருப்பதாக நினைத்து வாழும் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை 'ராதா'.

இதை முதலில் 'சங்கராபரணம்' புகழ் கே. விசுவநாத்தும், புட்டண்ணா கனகல் கன்னடத்திலும் எடுத்த பிறகு நாங்கள் எடுத்தோம். பாலாஜி மலையாளத்திலும் ஹிந்தியிலும் எடுத்தார். ஷெரிப் ஆஃப் மெட்ராஸ் நஹாதா என் 'ராதா'வைத் தயாரித்தார்.

ஒரு கிறிஸ்துமஸ் அன்று எதிர்பாராமல் திருவல்லிக்கேணியில் நான் தங்கி இருந்த அறைக்கு பிரமிளா தேடி வந்து போனதும், 'பாமா விஜயம்' படம் போல நான் அக்கம் பக்கத்தில் பிரபலமானேன். அப்போது அவர் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே பெரிய பங்களாவில் இருந்தார். என்னை கார் அனுப்பி அவர் இருந்த மாளிகையில் இருந்த அறைக்குக் கூட்டிப் போனார்.

'சார், இது உங்கள் அறை. இங்கு தங்கி இருந்து எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்கள்'' என்றார்.

'நீ நினைப்பது போல் நாடகம் நடிப்பது எளிதல்ல. உன்னால் முடியாது'' என்று அவரிடம் கூறினேன். 'நிச்சயம் முடியும்'' என்றார்.

15 நாள்களில் 'ஒரு வீடு கோயிலாகிறது' நாடகத்தை எழுதி முடித்தேன். அந்த நாடகத்தில் பிரமிளாவை கணவன் 'கருப்புக் கிளி' என்று அழைப்பார். அதை வைத்து என் திரையுலக நண்பர்கள் என் அபிமான நடிகை ஊர்வசி விருது பெற்ற லெட்சுமி உள்பட 'உங்கள் கருப்புக் கிளி நாடகம்

எப்படி நடந்தது?' என்று கேட்கும் அளவுக்கு அது கச்சாலீஸ்வரர் கானசபாவில் முதல் நாளே காலை, மாலை என்று அரங்கேற்றமாகி வெற்றி பெற்றது. இந்த நாடகத்தின் ஒத்திகையின் போது அங்கே 'அலைகள்' செல்வகுமார், சிவாஜி, மேஜர், வி.கே. ஆர். வந்திருந்ததால், 'அவர்கள் போன பிறகுதான் நடிப்பேன்'' என்றார்.

'அவர்கள் நாடகம் பார்க்க வந்தால் நடிக்க மாட்டீர்களா?'' என்று கோபமாகக் கேட்டேன். நான் கோபமாகப் பேசியதால் அவரும் நடிக்க முடியாது என்று போய் விட்டார். நாடக அரங்கேற்றத்துக்கு ஒரே நாள் உள்ள நிலையில் சிவாஜியின் 'தங்கப்பதக்கம்' நாடகத்தில் அவர் மகனாக நடித்தவரும், 'தாலாட்டு' படத்தில் ஹீரோவாக நடித்த ராஜபாண்டியன் எனக்கு ஒரே நாளில் மனப்பாடம் செய்து நடித்துக் கொடுத்து வெற்றிபெறச் செய்தார்.

நாடகத்துக்குப் பல வெளியூர்களுக்குப் போகும் போதெல்லாம் திருச்சியிலிருந்து தங்கள் குடும்பம் லாரியில் வந்த வேதனையையும், சைதாப்பேட்டையில் கல்யாண மண்டபம் எதிரே எங்கள் குடும்பம் ஒருவேளைச் சாப்பாட்டுடன் இருந்த போதுதான் கே.எஸ். ஜியின் 'வாழையடி வாழை' படம் எனக்குக் கிடைத்தது என்று ஒளிவு மறைவில்லாமல் பேசுவார்.

பிரமிளாவுக்கு என் நண்பர் ஏ. எஸ். பிரகாசம் 'சொர்க்கத்தின் திறப்பு விழா' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார். பிரமிளாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட அன்று நானும் பிரகாசமும் மட்டும் இருந்தோம். திடீரென மாடியிலிருந்து பிரமிளா என்னைக் கூப்பிட்டு கண் கலங்கி, 'இந்த திருமணம் வேண்டாம் என அப்பாவிடம் சொல்லுங்கள்'' என்றார். திருமணம் தடைப்பட்டது.

பல பிரச்னைகளைச் சந்தித்தார். ஓர் இரவில் போன் செய்து, தந்தை இறந்ததைத் தெரிவித்தார். நான் போகமுடியாமல் தவித்தேன். நான் பெற்றோருடன் திருவல்லிக்கேணி ஜாம் பஜார் மார்க்கெட் எதிரே இருந்த போது, பிரமிளா அங்கு வந்தார். என் தாய்க்கு தெரிந்த இரண்டே இரண்டு நடிகர்கள். ஒன்று சிவாஜி, இன்னொன்று எம். ஆர். ராதா. அவரிடம் பிரமிளா மல்லிகைச் சரத்தைக் கொண்டு வந்து கொடுத்து ஆசிர்வதிக்கச் சொன்னார். யாருக்கும் சொல்லாமல் தாய் மொழி தெரிந்த ஒரு ரோமன் கத்தோலிக்கர் பால்ஸ்க்வாக்டா என்பவரை 1993-இல் திருமணம் புரிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

பிரபல நடிகர் எஸ். ஏ. அசோகனின் உறவினரான இவர் கலிபோர்னியாவிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடன் மொஃபைலில் பேசினார். 'பிரேமி எப்படி இருக்கே?'' என்று கேட்டேன். 'குழந்தை இல்லை என்பதைத் தவிர வேறு எந்த குறையுமில்லை'' என்று அழுகையை மறைத்துக் கொண்டு சிரித்தபடி சொன்னார்.

என் மனத்திரையில் இவரும் மறக்க முடியாத ஒரு மர்லின் மன்றோ.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com